நல்லாட்சி அரசு தமிழர்களுக்கு உரிய தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசத்தின் அழுத்தத்திற்குள்ளாகும்! இரா.சம்பந்தன்
தமிழ்மக்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பங்காளி கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், நல்லாட்சி அரசு தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை வழங்காவிட்டால் மீண்டும் சர்வதேசத்தின் அழுத்தத்திற்குள்ளாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னைய அரசின் காலத்தில் தொடர்ந்த தமிழ் மக்களுக்கு எதிர்மாறான செயற்பாடுகள் தற்போதும் தொடர்வதாகவும் அவர் சாடியுள்ளார்.
நேற்றைய தினம் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக சர்வதேச மாநாடு ஒன்று இந்த வருடம் நடை பெறவுள்ளது. இதில் எல்லோரும் இணைந்து எமது பிரதேச அபிவிருத்திக்காக நிபுணத்துவத்துடன் செயற்பட வேண்டும்.
இந்த நாட்டில் இறைமை பகிர்ந்தளிக்கப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தால் இங்கு படுகொலைகள் இடம்பெற்றிருக்காது.
இறைமை என்பது மூன்று விடயங்கள் அதில், சட்டத்தையாக்கும் அதிகாரம், நிர்வாக அதிகாரம், நீதி அதிகாரம் எனப்படுகின்றன. இறைமையின் அடிப்படையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு இருந்தால், எமது ஜனநாயக உரிமையை பயன்படுத்தி நாம் விரும்பிய ஆட்சியாளர்களை தெரிவு செய்திருப்போம்.
பொறுப்பு கூறல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும், நடைபெற்றவை மீண்டும் நடைபெறாமல் இருக்க உறுதி வேண்டும், நியாயமான அரசியல் தீர்வு ஏற்பட்டு யுத்தம் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கான அரசியல் உறுதி வழங்கப்பட வேண் டும். இதனை ஐ.நாவில் இலங்கை ஏற்றுக் கொண்டு உள்ளது. அதை நிறைவேற்ற வேண்டும்,
மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். தற்போது இடம்பெறும் நல்ல விடயங்கள் துரிதமாக இடம்பெற வேண்டும். தற்போது வடக்கில் இடம்பெறும் விடயங்கள் குறித்து பாராளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணைகள் மூலம் பல விடயங்கள் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.
பழைய அரசின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பல விடயங்கள் இப்போதும் தொடர்வதை நாங்கள் அறிவோம்.நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வை நாங்கள் பெறவேண்டுமானால் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
நாங்கள் சரித்திர ரீதியாக வாழந்த இடங்களில் தான் வாழ வேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதற்காக ஒருமித்து செயற்பட வேண்டும். எமக்கொரு சந்தர்ப்பம் வந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை அடைவதற்கு பாரிய விலை கொடுத்துள்ளோம்.
எமது மக்கள் பாரிய உயிரிழப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். இதனை நழுவி விட முடியாது. இவ்விதமாக நாங்கள் செயற்பட்டால் சர்வதேச சமூகத்தின் மதிப்பை நாங்கள் பெறுவோம். சர்வதேசம் எமக்கொரு நிர ந்தர அரசியல் தீர்வு தருவதற்கு முயற்சிக்கின்றது.
அடுத்த மே தினத்தில் நாங்கள் வித்தியாசமான சூழ்நிலையில் மே தினத்தை கொண்டாட முடியும். நாங்கள் புதிதாக ஒன்றையும் கேட்கவில்லை. சர்வதேச நாடுகளில் உள்ள அரசியல் தீர்வையே நாங்கள் கேட்கின்றோம்.
நாட்டினை பிரிக்கவில்லை. சமஷ்டியை தான் கோருகின்றோம். பங்காளி கட்சிகளிடம் நாம் கோருவது அனைவரும் ஒற்றுமையாக நடக்க வேண்டும் என்பதையே என அவர் தெரிவித்தார்.
நல்லாட்சி அரசு தமிழர்களுக்கு உரிய தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசத்தின் அழுத்தத்திற்குள்ளாகும்! இரா.சம்பந்தன்
Reviewed by Author
on
May 02, 2016
Rating:

No comments:
Post a Comment