தமிழ் ஊடகவியலாளர்களின் உதயமாக - கனடியத் தமிழ் ஊடக அமைப்பு....
கனடிய தமிழ் ஊடகவியலாளர்கள் தங்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்குவதற்காக நேற்று ஸ்காபரோவில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இந்த ஆரம்பக் கூட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பை திரு.சுரேஸ் தர்மா ஏற்றுக் கொண்டிருந்தார். 34 ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் ஆரம்பத்தில் ஒவ்வொரு ஊடகவியலாளரும் இந்த அமைப்பிற்கான தேவை என்ன? என்பதை விளங்கப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து விருந்தினராக வருகைத் தந்திருந்த கவிஞர், நடிகர் வ.ஐ.செ.ஜெயபாலன் இந்த ஊடக அமைப்பு நிச்சயமாக முக்கியத்துவம் பெறும் என்றும், புதிய உலக ஓட்டத்தில் ஊடகங்களே பிரதான பங்கு வகிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து மிகவும் காத்திரமான ஜனநாயக முறையான அமைப்பிற்கான பெயர் தெரிவு நிகழ்வு இடம்பெற்று “கனடிய தமிழ் ஊடக அமைப்பு” என்ற பெயர் கலந்து கொண்ட 34 ஊடகவியலாளர்களில் 26 பேரின் வாக்குகளைப் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டது.
இடைக்கால நிர்வாக சபையின் தேவையும் அவர்களின் கடமையாக யாப்பு வரைதல், அமைப்பைப் பதிவு செய்தல், ஏனைய தமிழ் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அங்கத்தவராக இணைத்தல், இந்த அமைப்பிற்கான முதல் இயக்குனர் சபைத் தெரிவுத் தேர்தலை அடுத்த ஆறு மாதத்திற்குள் நடாத்துதல் என்ற பொறுப்புக்கள் பாரப்படுத்தப்பட்டன.
இந்த இடைக்கால நிர்வாக சபையில் அங்கம் வகிக்க விரும்புவோர் தாமாக முன்வர வேண்டுமெனக் கோரப்பட்ட போது திரு.வேலுப்பிள்ளை தங்கவேலு, திருமதி.ராஜி அரசரட்ணம், திரு.ரதன் மகேசு, திருமதி.ரூபி யோகதாசன், திரு.அகிலன் முத்துக்குமாரசுவாமி, திரு.முரளிதரன் நடாராஜா, திரு.சிறினிவாசன் சுப்பிரமணியம் ஆகியோர் இடைக்காலக் குழுவிற்கான செயற்பாட்டில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி-வானொலிக் கலைஞர்கள், இணையச் செய்தியாளர்கள், புகைப்படச் செய்தியாளர்கள் என்பவர்களுடன் ஊடக உரிமையாளர்களும் இணைந்து ஏற்படுத்திக் கொண்ட இந்த அமைப்பின் செயற்பாட்டு வடிவமைப்பு என்ற பணி இடைக்கால இயக்குனர் சபையிடம் ஏகமனதாக ஊடகவியலாளர்களால் ஒப்படைக்கப்பட்டது.
தமிழ் ஊடகவியலாளர்களின் உதயமாக - கனடியத் தமிழ் ஊடக அமைப்பு....
Reviewed by Author
on
May 09, 2016
Rating:

No comments:
Post a Comment