வட மாகாணத்தில் காணாமல் போனோர் தொடர்பான சாட்சிப் பதிவுகள் நிறைவு...
வடக்கு மாகாணத்தில் காணாமல் போனோர் தொடர்பாக சாட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக, காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் இனிமேல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வடக்கில் சாட்சிகள் பதிவு செய்யப்பட மாட்டாதென அந்த ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ.குணதாஸ குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வடக்கு மாகாணத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சாட்சிகள் குறித்த விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக ஆணைக்குழுவின் செயலாளர் கூறியுள்ளார்.
மேலும், கிழக்கு மாகாணத்தில் சாட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இம் மாதம் 30ஆம் திகதி முதல் ஜூன் 4ஆம் திகதி வரை மட்டக்களப்பில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 3200 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், எச்.டப்ளியூ.குணதாஸ குறிப்பிட்டுள்ளார்.
எனவே வாழைச்சேனை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய பகுதிகளில் குறித்த தினத்தில் வாய்மொழி மூலம் சாட்சிகள் பதிவு செய்யப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் கூறியுள்ளார்.
இதேவேளை கிழக்கின் ஏனைய மாவட்டங்களான அம்பாறை, திருகோணமலை ஆகியவற்றிலும் சாட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சாட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கை முடிந்ததும் ஆணைக்குழு இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் காணாமல் போனோர் தொடர்பான சாட்சிப் பதிவுகள் நிறைவு...
Reviewed by Author
on
May 09, 2016
Rating:

No comments:
Post a Comment