26 வருடங்களின் பின்னரும் கானல் நீராகும் மீள் குடியேற்றம்...
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 201.3 ஏக்கர் நிலம் 26 வருடங்களுக்கு பின்னர் கடந்த 25.06.2016ம் திகதி மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 62 ஏக்கர் நிலம் தொடர்ந்தும் பொலிஸாருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் நிலையில், அந்தப் பகுதியில் மக்கள் மீள்குடியேற முடியாத நிலையே காணப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.
கடந்த 26 வருடங்களாக வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த சுமார் 201.3 ஏக்கர் வரையிலான மக்களுடைய நிலம் கடந்த 25ம் திகதி மீள்குடியேற்றத்திற்காக பாதுகாப்பு அமைச்சினால் யாழ்.மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மேற்படி மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதியிலிருந்து படையினருடைய முகாம்கள் அகற்றப்பட்டிருக்கும் நிலையில்,
பொலிஸாருடைய தங்குமிடங்கள் மற்றும் பொலிஸாருடைய பயன்பாட்டில் இருக்கும் பகுதிகள் மற்றும் வீடுகள் தொடர்ந்தும் அங்கேயே இயங்கி வரும் நிலையில் மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது.
இவ்வாறு மேற்படி மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 59 வீடுகளில் பொலிஸார் தொடர்ந்தும் தங்கியிருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.
இந்நிலையில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் பொலிஸார் தங்கியிருக்கும் வீடுகள் தொடர்பாக வீட்டின் உரிமையாளர்கள் பொலிஸாரை தொடர்ந்தும் அங்கே இருக்கவைத்து அவர்களிடமிருந்து வாடகை பெறுவதா?
இல்லையேல் தங்களுடைய மீள்குடியேற்றத்திற்காக பொலிஸாரை அங்கிருந்து வெளியேற்ற கோருவதா? என்பதை தீர்மானித்துக் கொள்ளுமாறு மீள்குடியேற்றப்பட்ட தினத்தில் மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,
மக்கள் தாங்கள் மீள்குடியேற போவதாகவும் பொலிஸார் வெளியேவேண்டும் என்ற கோரிக்கையினை மட்டுமே விடுத்திருப்பதாகவும் இதற்கமைய மக்களுடை ய வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என அரசாங்க அதிபர் என்.வேதநாயகனினால் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இந்நிலையில் பொலிஸார் வெளியேறி மாற்று இடங்களில் தங்குவதற்கு பொருத்தமான இடங்கள் இல்லாமையினாலேயே பொலிஸார் தொடர்ந்தும் அங்கே தங்கியிருக்கும் நிலை இருப்பதாக பொலிஸாருடைய தரப்பில் கூறப்படுகின்றது.
இந்நிலையில் பொலிஸாருடைய கட்டுப்பாட்டின் கீழ் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் 62 ஏக்கர் நிலம் மற்றும் 59 வீடுகள் இருக்கும் நிலையில் மே ற்படி இடங்களில் தாம் மீள்குடியேற பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.
26 வருடங்களின் பின்னரும் கானல் நீராகும் மீள் குடியேற்றம்...
Reviewed by Author
on
June 30, 2016
Rating:

No comments:
Post a Comment