அண்மைய செய்திகள்

recent
-

இரக்கத்தின் தூதர் அருளாளர் அன்னை தெரேசா.....புனிதராக...... செப்டம்பர் 4ம் தேதி.....


இரக்கத்தின் தூதர் அருளாளர் அன்னை தெரேசா


நாடு துறந்து, நலம் துறந்து, உறவுகள் துறந்து, கிறிஸ்தவம் பரப்ப, குறிப்பாக, இந்தியாவில் இயேசுவின் விழுமியங்களை வாழ்வாக்கும் ஆவலில் முதலில், தனது பதினெட்டாவது வயதில் அயர்லாந்து நாடு சென்றார் அன்னை தெரேசா. அங்கு லொரேத்தோ சபையில் இணைந்தார். அதற்குப் பிறகு, அவர் தனது தாயையோ, உடன்பிறந்த சகோதரியையோ பார்க்கவில்லை. அன்னைக்கு எட்டு வயதாக இருக்கும்போதே அவரது தந்தை காலமானார். இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க, லொரேத்தோ சகோதரிகள் பயன்படுத்தும் ஆங்கில மொழியைக் கற்றார். 1929ம் ஆண்டில் அச்சபையின் நவதுறவியாக, இந்தியா வந்த அன்னை தெரேசா, அதே ஆண்டில் என்டேலி புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் புவியியல் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். 1931ம் ஆண்டு, மே 24ம் தேதியன்று துறவு சபையில் முதல் வார்த்தைப்பாடுகள் எடுத்தார். அப்போது ஆக்னெஸ் என்ற தனது திருமுழுக்குப் பெயரை, தெரேசா என மாற்றிக் கொண்டார். அதன் பின்னர், ஆக்னெஸ், அருள்சகோதரி தெரேசாவாகவே அழைக்கப்பட்டார்.
மேற்கு வங்காளத் தலைநகர் கொல்கத்தாவில், அன்னை தெரேசா ஆசிரியர் பணியாற்றிய பள்ளி, வாழ்க்கையில் வசதியுள்ளவர்களின் குழந்தைகளுக்கானது. அந்தப் பள்ளியை ஒட்டியே மோத்தஜில் சேரி உள்ளது. பள்ளியின் மதிய இடைவேளை நேரங்களில், பளபளப்பான உடையணிந்த அப்பள்ளி மாணவர்கள், துள்ளிக் குதித்து ஆனந்தமாக வெளியே ஓடி வருவார்கள். இவர்கள் உண்ணும் விதத்தையும், அதற்குப் பின்னர் அவர்கள் ஓடிப்பிடித்து விளையாடுவதையும், அந்தச் சேரிப் பிள்ளைகள் கூட்டமாக நின்று வேடிக்கைப் பார்ப்பார்கள். இந்த ஏழைச் சேரிக் குழந்தைகளின் விழிகளில் பிரதிபலித்த உணர்ச்சிகளை அன்னை கவனித்தார்கள். சேற்றிலே தவழும் சிரித்த முகங்களைச் சிந்தித்தார்கள். அந்தப் பிஞ்சுக் கரங்கள் எழுதுகோல்களைப் பிடிக்கும் நாளுக்காக ஏங்கினார் அன்னை தெரேசா. அதற்காகச் செபித்தார். 1944ம் ஆண்டில் அந்தப் பள்ளியின் முதல்வராக நியமிக்கப்பட்டார் அன்னை தெரேசா. பள்ளிக்கு வெளியே சென்று ஏழைகளுக்குத் தொண்டுபுரிய விரும்பினார். பள்ளி மாணவிகளை, சிறிய இயக்கமாக ஒன்றுபடுத்தினார் அன்னை. சேரிகளுக்கும், மனிதர் மதிக்காத மனிதரிடத்தும் மாணவிகளை அழைத்துச் சென்றார். ஆனால், இதற்கு கன்னியர் இல்லத் தலைவரிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை. அதோடு, கிறிஸ்தவத் தலைவர்களும் அன்னையின் விருப்பத்திற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அன்னைக்கு, சபையின் கட்டுப்பாடுகளையும், சட்ட விதிமுறைகளையும் மீற இயலவில்லை. மீற விரும்பவுமில்லை. அதேநேரம், அதைச் சரி என்று ஏற்கவும் மனம் தீவிரமாக மறுத்தது.

அன்பு செலுத்தத் தடை என்றால், அதைத் தாண்டிச் செல்லவே அன்னை தெரேசாவின் மனம் துடித்தது. ஏழைகளின் சேவைக்கு வாய்ப்பில்லாத இந்தப் பள்ளிப் பணி எதற்கு என்ற கேள்வி எழுந்தது. அன்பு வேண்டி, ஏக்கம் தேக்கி, வானம் பார்த்து, இரத்தக் கண்ணீர் வடித்த ஏழை நெஞ்சங்களையே அன்னையின் மனம் ஏங்கி நின்றது. அன்னை தெரேசா அவர்கள், தனது இலட்சியப் பாதையில் தன்னை வழிநடத்துமாறு இடைவிடாது இயேசுவிடம் செபித்தார். நான்கு சுவர்களுக்குள், வளமான வாழ்வுக்குள் அடங்கிவிடும் துறவறம் தன் இலட்சியத்திற்கு முதல் இடர்ப்பாடு என்று உணர்ந்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கும் கட்டாயத்தில் இருந்தார். இது பற்றிய இடைவிடா சிந்தனை, நீண்ட நேரம் செபம், சோர்வில்லா உழைப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக ஏமாற்றம். இவை அன்னை தெரேசாவின் உடல்நிலையைப் பாதித்தது. எனவே அவரை ஓய்வெடுத்துக்கொள்ளும்படி இல்லத் தலைவரும், மற்றவரும் வற்புறுத்தினர். இதனால் டார்ஜிலிங் சென்று ஓய்வெடுக்க ஒத்துக்கொண்டார் அன்னை. 1946ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி. கொல்கத்தாவிலிருந்து டார்ஜிலிங் செல்லும் இரயிலில் உட்கார்ந்திருந்தார். இயற்கை அழகு நிறைந்த மலைப்பாதை வழியாக, வளைந்து வளைந்து சென்றது இரயில். இனிய இயற்கைக் காட்சிகள் நிறைந்த, மனதைப் பரவசப்படுத்தும் அமைதியான சூழல் அது. அன்னை ஆழ்ந்து தியானத்தில் மூழ்கினார். அதுவரை அனுபவித்தறியாத ஓர் இனிய இன்பமயமான உணர்வில் மெய் மறந்தார். அப்போது ஒரு காட்சி அவரது மனதில் ஓடியது. இரயில் நிறுத்தத்ததையொட்டிய சாலையோரத்தில், ஒரு முதியவர் மரணப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்ததைப் பார்த்தார். அம்மனிதரது ஈனக்குரலுக்குச் செவிமடுப்பார் யாருமின்றி, அனாதையாக அவர் இறந்தார். திடீரென்று சுய நினைவுக்கு வந்த அன்னையின் மனம் பதறியது. இறைவா! இது என்ன நினைவா? அல்லது கனவா? அல்லது ஒரு மனப்பிரமையா? என்று செபித்தார். மனம் குழம்பியது. இறைவா, அமைதியைக் கொடு என்று மன்றாடினார் அன்னை.
டார்ஜிலிங் சென்று கொண்டிருந்த இரயில், இயற்கை அழகு கொஞ்சும் பாதையில் வெகு வேகமாகச் சென்று கொண்டிருந்தது. எத்தனை முறை செபித்தும், கைவிடப்பட்ட நிலையில் வயதானவர் இறந்த அந்தக் காட்சி அவர் மனதைவிட்டு அகல மறுத்தது. ஆனால் மனதின் ஆழத்தில் ஓர் இனிய குரல் ஒலித்தது
ஒடுக்கப்படுபவனும், தெருவில் நிர்க்கதியாய் இறந்து கிடக்கிறவனும், ஹான்சென் நோயால் மனம் நொந்து உள்ளம் வெதும்புவனும் நானே, சமூகத்தில் கடைப்பட்டவர்களில் யாருக்காவது நீ ஏதாவது செய்தால், அதை எனக்கே செய்தாய் என்ற குரல் கேட்டது. இந்தக் கடைசி வரிகள் மீண்டும் மீண்டும் ஒலித்தன. அன்னை சிலிர்த்துப்போய்க் கண்களைத் திறந்தார். மனம் அமைதியை உணர்ந்தது. தான் செல்ல வேண்டிய திசை கிடைத்துவிட்டது போன்ற ஓர் உணர்வு. இரயிலில், அந்த நேரத்தில், அந்தக் காகிதத்தில் அன்னை எழுதிய எழுத்துக்களே அவரின் புதிய பணிக்கு வித்திட்டன. 1946ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதிதான் அந்த நாள். இரயில் டார்ஜிலிங் நோக்கிச் சென்றது. ஆனால் அன்னை தெரேசாவின் இதயம் புதிய இலட்சியத்திற்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது.
“நல்ல கருத்துக்கள், உயர்ந்த இலட்சியங்கள் இவை பற்றி அடிக்கடி சிந்தனை செய்தால் அவற்றில் ஈடுபாடு உண்டாகும். ஈடுபாடு ஏற்பட்டால் அதற்காக ஏங்குவோம். ஏங்கினால் தேடுவோம். தேடினால் நம்மையும் அறியாமல் ஒருநாள் நம் வாழ்வில் அவை புகுந்து நமக்குச் சொந்தமாகும்”

அது 1950ம் ஆண்டு. அன்னை தெரேசா அவர்கள், திரு.கோமஸ் அவர்களை அழைத்துக்கொண்டு கொல்கத்தா, டிராம் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்கள். அந்த இடத்திற்கு நேர் எதிரே இருந்த பெரிய அரசு மருத்துவமனை முகப்பில், ஒரு பெரிய மரத்தடியில் ஒருவர் முடங்கிக் கிடந்தார். அன்னை தெரேசா, அந்த மனிதரையே உற்றுப் பார்த்துவிட்டு, கோமஸ், இவ்வளவு பெரிய மருத்துவமனைக்கு வெளியில்தானே இந்த மனிதர் முடங்கிக் கிடக்கிறார், இவரைப் பற்றி யாருமே அக்கறை கொள்ளவில்லையே? என்றார். அதற்குள் டிராம் வந்துவிட்டது. இருவரும் அதில் ஏறினார்கள். இரண்டு மணிநேரம் கழித்து இருவரும் இல்லம் திரும்பினார்கள். அன்னை தெரேசா, டிராமைவிட்டு இறங்கியவுடன் நேராக அந்த மனிதர் கிடந்த இடத்திற்குச் சென்றார். ஆனால் அந்த மனிதர் பிணமாகக் கிடந்தார். அன்னை கோமசிடம், இந்த மனிதர் இறப்பதற்குமுன் ஒரு டம்ளர் தண்ணீருக்காக ஏங்கியிருப்பார், அதுகூட கிடைக்காமல் இவர் மனம் என்ன பாடுபட்டதோ, யாருக்குத் தெரியும்? என்றார். அன்னையின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. மறுநொடியே உறுதியுடன் இப்படி கூறினார்
“கோமஸ், இந்த மனிதர்கள் அழகாக வாழத்தான் கொடுத்து வைக்காதவர்கள். அழகாக இறப்பதற்காகவாவது நாம் வழி செய்யலாம் அல்லவா…”
அன்றிலிருந்து அன்னை தெரேசா, நடைபாதையில் இறுதி மூச்சை இழுத்துப் பிடிக்க வகை தேடிய மனிதர்களுக்கு இல்லம் தேடி அலைந்தார். கொல்கத்தா மாநகராட்சியிடம் முறையிட்டு இடம் கேட்டார்கள். மாநகராட்சிக்கும் தலைவலியாய் இருந்த பிரச்சனைக்கு அன்னை முடிவு சொல்வதுபோல் இருந்தது. கொல்கத்தாவிற்குக் கம்பீரம் தரும் காளிகோவிலையொட்டியிருந்த பயணிகள் தங்கும் தர்மசாலா மாநகராட்சியிடம் இருந்தது. அதை 1952ம் ஆண்டில் மாநகராட்சி, அன்னைக்குக் கொடுத்தது. இதற்கு அக்கோவில் பக்தர்களும், அர்ச்சகர்களும் எதிர்ப்புக்கொடி காட்டினார்கள். யாராவது இறப்பவர்களுக்கு இல்லம் அமைப்பார்களா, வாழ்க்கைப் போராட்டத்தில் கை கொடுத்தால் அது மனிதாபிமானம். மரணப்படுக்கையில் மரணித்துப்போய் இருப்பவர்களுக்கு அன்பைப் பொழிவது அர்த்தமற்ற போலித்தனம் என்றெல்லாம் புகார்கள் எழுந்தன.
தனது நோக்கம் மதமாற்றம் இல்லை என்பதை நம்பி, எதற்கும் அஞ்சாது, பின்வாங்காது, மறைப்பணியாளர் அறக்கட்டளை என்ற பெயரில் அன்னை தெரேசா தனது பணியைத் தொடங்கினார். தனக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர்களுக்கு அன்னை அளித்த ஒரே பதில்... எல்லாருக்கும் இது தேவையானது.
கொல்கத்தா காவல்துறையின் உதவியுடன் பல நாள்கள் தனது பணியைச் செய்தார் அன்னை தெரேசா. காளிகோவில் அர்ச்சகர்கள் அன்னையை அந்த இடத்தைவிட்டு அப்புறப்படுத்த பெரும் முயற்சி செய்தனர். அன்னை அவர்களைச் சந்தித்து, என்னை, எது வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் இந்த ஏழைகளை எதுவும் செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். அந்தக் கோவில் தலைமை அர்ச்சகர் காசநோயால் மிகவும் துன்புற்றார். பிறரால் கைவிடப்பட்டார். அன்னை அவரை தர்மசாலாவில் வைத்துப் பராமரித்து சிகிச்சை அளித்தார். அந்த அர்ச்சகர் உயிர்விடும்போது இப்படிச் சொன்னார்.
அன்னையே, நான் இத்தனை நாளாக காளிக்குச் செய்த சேவை வீண்போகவில்லை. காளியின் மடியில் எனது உயிர் பிரிய வரம் தந்துவிட்டாள்.
ஆம். காளி தெய்வத்தின் வடிவில் அன்னையைக் கண்டார் அர்ச்சகர். இந்த இறப்போர் இல்லமே அன்னை தெரேசா தொடங்கிய முதல் இல்லம். இந்த இல்லமே நிர்மல் ஹிர்தய் இல்லம். அதாவது நிர்மலமான இதய இல்லம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அண்மையில்(ஜூன்,02) பல நாடுகளின் அருள்பணியாளர்களிடம்,
கடவுளின் பெயர் இரக்கம், இது, அளப்பரிய கடவுளின் அன்பு, பொங்கி வழியும் அன்பு. என்றார். இதைத்தான் அன்னை தெரேசா வாழ்க்கையின் இறுதி நிலையில் இருந்தவர்களுக்கு வழங்கினார். அவர்கள் இறுதி மூச்சை விடும்போதாவது, கடவுளின் இரக்கத்தை அனுபவிக்கட்டும் என இல்லத்தை ஆரம்பித்தார். அல்பேனியாவிலிருந்து இந்தியாவுக்கு, குறிப்பாக, வங்காளத்திற்கு மறைப்பணியாற்ற வந்த இயேசு சபை அருள்பணியாளர்கள் எழுதிய கடிதங்கள், கொல்கத்தா சென்று மறைப்பணியாற்ற வேண்டுமென்ற ஆவலை அதிகம் தூண்டியது. அந்நகரில் லொரேத்தோ அருள்சகோதரிகள் பணிபுரிவதைக் கேள்விப்பட்டார். அதனால் அச்சபையில் சேர விரும்பினார் அன்னை தெரேசா. ஆனால் இளவயதிலே இந்த ஆர்வம் ஏற்பட்டதால் அதை எளிதில் இவர் அடையவில்லை. பன்னிரண்டு வயதில் இப்படியொரு இலட்சியம் சாத்தியமா என்ற கேள்வியைச் சந்தித்தார். ஆயினும் அயர்லாந்து சென்று கன்னியர் பயிற்சியை முடித்து கொல்கத்தா வந்தார். 1929ம் ஆண்டு என்டேலி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். கண்டிப்பான ஆசிரியராக, அதேநேரம், கனிவும் அக்கறையும் கொண்டவராகப் பணியாற்றினார் அருளாளர் அன்னை தெரேசா.
லொரேத்தோ அருள்சகோதரிகள் சபையைவிட்டு விலகி புதிய பணியைத் தொடங்கத் தீர்மானித்த அன்னையின் டார்ஜிலிங் இரயில் பயணம் பற்றி அடுத்த நிகழ்ச்சியில் பார்ப்போம்...

ஒருநாள், கொல்கத்தாவில், காலிகாட் பகுதி மக்களும், கோவில் அர்ச்சகர்களும் அந்தப் பகுதியின் காங்கிரஸ் தலைவரைச் சந்தித்தார்கள். அன்னை தெரேசா மதமாற்றம் செய்யத்தான் இப்படியெல்லாம் நாடகமாடுகின்றார், இவரை உடனடியாக இவ்விடத்தைவிட்டு விரட்ட வேண்டும் என்று புகார் கொடுத்தனர். ஒரு ஞாயிறு காலை. அன்னை தெரேசாவிடம் அந்த இடத்து மக்களின் புகாரைச் சொல்வதற்காகப் புறப்பட்டார் காங்கிரஸ் தலைவர். அவர் பின்னால், மதாபிமானிகளும் சென்றனர். அப்போது அன்னை தெரேசா அவர்கள், காலிகாட் தர்மசாலாவின் ஒரு முனையில், தொழுநோயால் துன்புற்ற ஒருவரின் உடலைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். துர்நாற்றம் நாசியைத் துளைத்தது. அங்கு நின்று கொண்டிருந்த அந்தக் கும்பலைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், அம்மனிதரை அக்கறையுடன் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள் அன்னை தெரேசா. காங்கிரஸ் தலைவர் வியப்பில் ஆழ்ந்தார். மனிதாபிமானம், மதாபிமானத்தை வென்றுவிட்ட தெய்வீகச் செயல் அல்லவா இது. எதுவுமே பேசாமல் திரும்பிவிட்டார் காங்கிரஸ் தலைவர். மதம் காக்கப் புறப்பட்ட கூட்டமும், அவர் பின்னால் சென்றது. அக்கூட்டத்திற்கு, நம்பிக்கை, அவநம்பிக்கையாக மாறிக் கொண்டிருந்தது. காங்கிரஸ் தலைவர் தன்னைப் பின்தொடர்ந்த கூட்டத்தைப் பார்த்து இப்படிச் சொன்னார்.
“அந்த இடத்திற்குச் செல்வதற்கு முன்னர் தெரேசா அம்மையாரை அந்த இடத்தைவிட்டு விரட்டி விடுவதாக நினைத்துத்தான் சென்றேன். உங்களுக்கும் வாக்குக் கொடுத்தேன். அதில் இப்பொழுதும் மாற்றம் இல்லை. அதற்கு முன்னர் உங்கள் எல்லாரிடமும் ஒரு வேண்டுகோள். உங்கள் தாய்மார்களும், சகோதரிகளும், தெரேசா அம்மையார் செய்துவரும் சேவையைத் தொடர முன்வந்தால், அந்த அம்மையாரை இங்கிருந்து அனுப்பிவிடுவது எனது பொறுப்பு..”
இவ்வாறு காங்கிரஸ் தலைவர் சொன்னதும் கூட்டம் கலைந்துபோய் விட்டது. மனிதாபிமானம், யாருடைய சொந்த சொத்தும் இல்லை. அது ஒவ்வொருவரின் இதயத்திலும் சுரக்க வேண்டியது. இதுதான் அருளாளர் அன்னை தெரேசா. இவர், இயற்கைத் தாயின் அழகைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் அல்பேனியா நாடு பெற்ற செல்வ மகள். இந்நாட்டில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை விண்ணை முட்டும் உயர்ந்த மலைகள். மலைகளின் அடிவாரத்தில் வளர்ந்தோங்கி நிற்கும் பெரிய பெரிய மரங்கள். வற்றாத நதிகள். சதுப்புநிலக் கடற்கரைகள். இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு. இந்நாட்டில், செகாப்ஜி என்னும் கிராமத்தில், வேளாண் குடும்பத்தில் 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி பிறந்தவர் அன்னை தெரேசா. இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் ஆக்னஸ் கான்ஷா போஜாஷு. இவரின் பெற்றோர்க்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன். இவரின் பெற்றோர் விவசாயப் பண்ணை ஒன்றில் வேலை செய்து வந்தனர்.
தனது ஆரம்பக் கல்வியை அரசுப் பள்ளியொன்றில் படித்த அன்னை தெரேசா அவர்கள், இளவயதிலே, தங்களின் சொந்த நாட்டைவிட்டு வேறு நாடுகளில் கிறிஸ்துவை அறிவிக்கும் மறைப்பணியாளர் பற்றி அறிந்தார். இந்தியா சென்று, இந்திய மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும், இயேசுவின் உயரிய மதிப்பீடுகளை இந்திய மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார். பன்னிரண்டு வயது நடந்தபோது, இப்படியோர் ஆசை. அந்த வயதில் தனக்கு ஏற்பட்ட ஆசை பற்றி இப்படிச் சொல்கிறார் அன்னை தெரேசா.
“என் வாழ்க்கைப் பாதையின் வரைமுறையை நிர்ணயித்துக் கொள்ள பன்னிரண்டு வயது என்பது அறியாப் பருவம் அல்ல. அன்பு காட்டவும், தொண்டுபுரியவும் துடிக்கின்ற இதயத்துக்கு வயது ஒரு பிரச்சனையல்ல. திருமணம் செய்யக் காத்திருக்கும் கன்னிப்பெண் போன்று, என் இலட்சியங்களுக்காக என்னையே அர்ப்பணம் செய்யத் துடித்துக் கொண்டிருந்தேன். அதற்கான இயேசுவின் அருளுக்காக ஏங்கிக் காத்திருந்தேன்…”
இப்படிச் சொல்லியுள்ள அன்னை தெரேசா, பள்ளியில் படித்தபோதே, சொடாலிட்டி என்ற மாதா பக்த சபையில் சேர்ந்திருந்தார். அச்சமயத்தில் வங்களாத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் வறுமையாலும், கொள்ளை நோயாலும் வாடித் தவித்தனர். முன்னாள் யூக்கோஸ்லாவியாவிலிருந்த இயேசு சபை அருள்பணியாளர்கள் இந்தியர்களுக்குச் சேவையாற்ற இசைவு தெரிவித்தனர். அவர்களில் முதல் குழு, 1925ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி கொல்கத்தா வந்தடைந்தது. இந்த இயேசு சபை அருள்பணியாளர்களில் ஒருவர் கர்சியாங்கிற்கு அனுப்பப்பட்டார். அவர் அங்கிருந்து அல்பேனியாவுக்கு அனுப்பிய கடிதங்கள், வங்களாத்தில் கிறிஸ்துவ மறைப்பணியாளர்கள் ஆற்றும் பணிகளை விவரித்தன. அன்னை தெரேசா சேர்ந்திருந்த மாதா சபையிலும் இக்கடிதங்கள் வாசிக்கப்பட்டன. இவை, இந்தியாவுக்குச் சென்று சேவையாற்ற வேண்டுமென்ற ஆவலை, அன்னை தெரேசாவிடம் மேலும் அதிகரித்தன.
இளமைப் பருவத்தில் நீங்கள் வயதுவந்தவராக இருங்கள் என்கிறார் வால்டர் ஸ்டேபிள்ஸ். இளமையிலே வயதுவந்தவரின் சிந்தனை, ஒரு குறிக்கோள், அளவற்ற ஊக்கம், தளர்வற்ற நெஞ்சுறுதி, சோர்வில்லாத உழைப்பு, நேர்மையான பாதை.. இவை கொண்ட அன்னை தெரேசாவுக்கு, வெற்றி கிடைக்கமாலா போகும். அன்பர்களே, கொல்கத்தா அருளாளர் அன்னை தெரேசா வாழ்வு பற்றித் தொடர்ந்து பார்க்கலாம்.......

அது 1949ம் ஆண்டு டிசம்பர் 21. அன்றுதான் அருளாளர் அன்னை தெரேசா அவர்கள், கொல்கத்தாவின் பிரபலமான மோத்திஜில் சேரியில் கால் பதித்த முதல் நாள். சேரியில் நுழைந்ததும், அதைச் சுறுசுறுப்பாகச் சுற்றிப் பார்த்தார் அன்னை தெரேசா. ஏனென்றால் அச்சமயத்தில் அன்னை தெரேசாவை யாருக்கும் தெரியாது. அங்கே ஒரு குடிசை காலியாக இருந்தது. இதற்கு வாடகை எவ்வளவு என்று, அங்கிருந்தவர்களைக் கேட்டார் அன்னை தெரேசா. மாதம் ஐந்து ரூபாய் என்றார் குடிசையின் உரிமையாளர். இந்தக் குடிசையை நான் எடுத்துக்கொள்கிறேன் என்று கூறி, அதில் குடிபுகுந்தார். அச்சமயத்தில் அன்னையிடம் இருந்தது ஐந்து ரூபாய் மட்டுமே. சேரியில் குடிபுகுந்த அன்றே எல்லாரிடமும் கலகலப்பாகப் பழகினார். நான் இங்கிருந்துகொண்டு, உங்கள் எல்லாருக்கும் சேவையாற்ற வந்துள்ளேன், நீங்கள் என்னை அடிக்கடி உதவிக்குக் கூப்பிட வேண்டும் என்றார் அன்னை தெரேசா. சுற்றி நின்றவர்கள், பயந்துகொண்டே தலையசைத்தனர். அன்னை தனக்கேரியுரிய புன்முறுவலுடன் அச்சேரியில் கிடந்த குப்பை கூளங்களைச் சுத்தம் செய்தார். அன்னையின் அழகையும், நிறத்தையும், தூய்மையான ஆடையையும் பார்த்த அந்தச் சேரி மக்கள், ஒன்றும் புரியாது ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அன்று மதிய வேளைக்குள் அன்னையின் அன்பையும், சேவை மனப்பான்மையையும் சேரி மக்கள் புரிந்து கொண்டனர்.
மோத்திஜி சேரியில், குளிக்க அடம்பிடித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனை அன்போடு கூப்பிட்டார் அன்னை தெரேசா. தன்னிடமிருந்த சோப்பால் அவனைத் தேய்த்துக் குளிப்பாட்டி, துவட்டி அனுப்பி வைத்தார். பின்னர், வேறோரு பகுதியில் குடியிருந்த மாநகரத் துப்புரவுத் தொழிலாளர்கள் குடிசைக்குள் அன்னை திடீரென நுழைந்தார். இடுப்பில் கைக்குழந்தையை வைத்துக்கொண்டே, ஒரு பெண், புகையும் அடுப்பைச் சிரமப்பட்டு ஊதிக்கொண்டிருந்தார். அத்தாயிடம் குழந்தையைத் தன்னிடம் தரும்படிக் கேட்டார் அன்னை. அப்பெண்ணும் பயந்துகொண்டே கொடுத்தார். பின்னர், புகைந்துகொண்டிருந்த அடுப்பை நன்றாக ஊதி, எரியவைத்துவிட்டு அங்கிருந்து சென்றார். மேலும், அச்சேரியில், நோயாயிருந்த ஒரு வயதானவரை அன்னைக் கையைப் பிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அந்த வயதானவர்க்கு, மருந்தும் ரொட்டியும் வாங்கிக்கொடுத்து, சேரிக்குத் திரும்பினார். இதுதான் அருளாளர் அன்னை தெரேசா. இவரைப் புனிதர் என அறிவிக்கும் நாள் வருகிற செப்டம்பர் 4. இந்நாள் வெகுதொலைவில் இல்லை.

அன்னை தெரேசாவை இப்படியெல்லாம் செய்யத் தூண்டியது எது? அவர் இயேசுவின்மீது கொண்டிருந்த பற்று. இயேசுவின் விழுமியங்களை வாழத் துடித்த அவரது அர்ப்பணம். அன்னை வாழ்ந்த கொல்கத்தா நகரம், சிறந்த நினைவுச் சின்னங்களையும், வரலாறு கண்ட கோவில்களையும், எழுச்சிமிக்க இயக்கங்கள் தோன்றிய வரலாறையும் கொண்டிருக்கும் நகரம். அதேநேரம், நகர்ப்புறமாதலின் அடையாளங்களும் இந்நகரில் உண்டு. மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தெருவோரத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள். நகரின் உட்பகுதிகளில், சகதியும் அழுக்கும் நிறைந்த இடங்களில் ஏராளமானோர் வாழ்கின்றனர். மேற்கு வங்க ஆளுனராகப் பணியாற்றிய ஏ.எல்.டயஸ் அவர்கள், ஒரு சமயம் பெரிய மனிதர்கள் கூட்டத்தில் இப்படிப் பேசினார். நாம் மனிதர்களைப் பன்றிகள் போல் வாழ அனுமதித்துவிட்டு, பின் அவர்கள் மனிதர்கள்போல் நடக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறு. ஏமாற்றத்தால், அவமானத்தால், அன்பற்ற வாழ்வு தந்த விரக்தியால் வெந்துவிட்ட நெஞ்சங்கள் விட்ட பெருமூச்சுக்கு இறைவன் அனுப்பிய விடியல்தான் அன்னை தெரேசா. தொழுநோயால், வறுமைப் பிணியால், காசநோயால், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராட்டம் நடத்திய மனிதர்களின் கண்ணீரைத் துடைத்து, அவர்கள் மகிழ்வோடு, இவ்வுலக வாழ்வுக்கு விடை கொடுக்க உதவியவர் அன்னை தெரேசா. நான் கடவுளின் ஒரு சாதாரணக் கருவி என்று அடிக்கடி சொல்வார் அன்னை. தான் நம்பியிருக்கும் இயேசுவே துணை என்று, ஐந்து ரூபாயுடன் தனது புதுவாழ்வைத் தொடங்கியவர் இவர். அதோடு ஏழைகள், கைவிடப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் மீது இவர் காட்டிய அன்பே இவரிடம் இருந்த பெரிய சொத்து, பெரிய மூலதனம்.
எல்லா மனிதரிலும் இறைசாயலைக் கண்டவர் அன்னை தெரேசா. இயேசுவை என் வாழ்விலிருந்து அகற்றிவிட்டால் என் வாழ்க்கை சூன்யமே. பசியால் வாடுபவரில் இயேசுவின் சாயலைக் கண்டு அவர்களுக்கு அமுது ஊட்டியவர் இவர். ஆடையின்றி அவமானப்பட்ட ஏழையரில் இயேசுவைப் பார்த்து அவர்களுக்கு ஆடையளித்தவர். குடியிருக்க வீடில்லாமல் வேதனைப்பட்ட இயேசுகளுக்கு புகலிடம் அளித்தவர் அவர். இப்படி சாதி, மத, இன வேறுபாடின்றி எல்லாரிலும் இயேசுவின் சாயலைக் கண்டு பணியாற்றியவர் அன்னை தெரேசா. நான்கே அடி உயரமான இவ்வன்னை, உலகினர் இதயங்களில் மிக உயரிய இடத்தில் இருக்கிறார். சுயநலத்தையும், பணபலத்தையும் நம்பாமல், இறைவனை மட்டுமே நம்பி ஹூப்ளி நதிக்கரையில்
வாழ்வைத் தொடங்கியவர். வஞ்சிக்கப்பட்டவர் பலர் வாழும் கொல்கத்தாவில், அன்னை தெரேசா ஒரு தனிப்பெரும் வரலாறாக இருந்தார். இந்த வரலாறை இனிவரும் வாரங்களில் நாம் பார்க்கலாம் ....

அருளாளர்‬ அன்னை தெரேசா பற்றிய புதிய நூல் !!!!
அருளாளர் அன்னை தெரேசா அவர்கள் எழுதியவைகளில் ஏற்கனவே வெளியிடப்படாதவை, வருகிற ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“இரக்கத்திற்கு அழைப்பு : அன்புசெலுத்த இதயங்கள், பணியாற்ற கரங்கள்” என்ற தலைப்பில், அன்னை தெரேசா அவர்களின் எழுத்துக்கள் அடங்கிய புதிய நூல், வருகிற ஆகஸ்ட் 16ம் தேதி வெளியிடப்படும் என்று, Crown Publishing Group கூறியதாக, AP செய்தி நிறுவனத்திடம் அறிவித்துள்ளது.
அருளாளர் அன்னை தெரேசா அவர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கு வேண்டுகையாளராகப் பணியாற்றிய அருள்பணி Brian Kolodiejchuk அவர்கள் எழுதிய இந்த நூல், இரக்கம் மற்றும் பரிவன்பு பற்றிய கட்டுரைகளையே கொண்டிருக்கும்.
1997ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி, தனது 87வது வயதில் இறந்த அருளாளர் அன்னை தெரேசா அவர்களை, வருகிற செப்டம்பர் 4ம் தேதி புனிதராக அறிவிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்..

தொகுப்பு-வை-கஜேந்திரன்-
இரக்கத்தின் தூதர் அருளாளர் அன்னை தெரேசா.....புனிதராக...... செப்டம்பர் 4ம் தேதி..... Reviewed by Author on June 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.