கடத்தியது மஹிந்த அரசு! கடத்தல்காரர்களை காப்பாற்றுகிறது மைத்திரி அரசு: வவுனியாவில் கதறியழுத உறவுகள்
தங்கள் பிள்ளைகளை கடத்தியது மஹிந்த அரசு, அந்த கடத்தல்காரர்களை காப்பாற்றுவது மைத்திரி அரசு என்றும், நிலைமாறு காலகட்ட நீதிப்பொறிமுறை எனும் பெயரால் இந்த உண்மைகள் மறைக்கப்படுவதாகவும் பகிரங்கப்படுத்தி, வவுனியா மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை 11.00 மணிக்கு, கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்டச்சங்கமும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும் இணைந்து குறித்த கவனவீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தன.
கடத்தியது மஹிந்த அரசு! காப்பாற்றுவது மைத்திரி அரசு!
நிலைமாறு காலகட்ட நீதிப்பொறிமுறை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு அனைத்துலக ஏமாற்று நாடகம், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத என்.ஜி.ஓக்களை திருப்திப்படுத்தும் ஓ.எம்.பி அலுவலகம் வேண்டாம்,
சர்வதேச நீதிபதிகள் பெரும்பான்மையாக உள்ளடங்கிய ஒரு நிபுணத்துவ விசாரணைக் கமிட்டியே வேண்டும், இலங்கையில் சாட்சியங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை – ஆட்கடத்தல்களும் சித்திரவதைகளும் மனிதகுலப்படுகொலைகளும் தொடர்கின்றன, ஐ.நாவே நாங்கள் நாதி இனமா? - எங்களுக்கு நீதி இல்லையா?,
எங்கள் உறவுகளை கொன்றவனையே நீதிபதி ஆக்கும் கொடுமை பாரீர், இரகசிய சித்திரவதை முகாம்களை அம்பலப்படுத்து – எங்கள் உறவுகளை வீட்டுக்கு அனுப்பு, திருகோணமலை கோத்தா கப்பல்படை சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 700க்கும் அதிகமான போராளிக்குடும்பங்களுக்கு நடந்தது என்ன?
முள்ளிவாய்க்காலில் ஒப்படைத்த எங்கள் உறவுகளின் கதி என்ன?, இனப்பிரச்சினைக்கு பொதுசன வாக்கெடுப்பு - இனப்படுகொலைக்கு பரிகாரநீதி வேண்டும் என்று வலியுறுத்தி சுலோக அட்டைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்டச்சங்கத்தின் (Forum for Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives - FSHKFDR-Vavuniya District) செயலாளர் திருமதி பே.பாலேஸ்வரி அவர்கள் குறித்த கவனவீர்ப்பு போராட்டம் தொடர்பில் கருத்து கூறுகையில்,
காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்தை கொழும்பில் திறப்பதற்கான முன்னெடுப்புகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆட்கடத்தல் மற்றும் தடுத்து வைத்தல் சம்பவங்களினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் பரிந்துரைகள் மற்றும் சிபாரிசுகளையும் உள்ளீர்த்துக்கொண்டு இந்த ஓ.எம்.பி அலுவலகம் திறக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம்.
நாங்கள் எமக்கு நம்பிக்கையானவர்களை தெரிவுசெய்து தருவோம் அவர்களையும் இந்த அலுவலகம் ஆற்றப்போகும் காரிய கரும பணிகளில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தோம்.
ஆனால் எங்களின் நியாயமான கோரிக்கைகள் எவற்றையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் அவர்களே ஒளிவு மறைவாக எழுந்தாமானமாக ஆட்களையும் தெரிவுசெய்துகொண்டு, தங்களுக்கு சார்புடைய சில சிவில் அமைப்புகளிடம் பெருந்தொகையான வெளிநாட்டு நிதியையும் வழங்கி,
அவர்களுடாக கருத்தரங்குகள் என்று நடத்தி ஓ.எம்.பி அலுவலகத்தை திறப்பதற்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் சம்மதத்தை பெற்றுக்கொள்ளும் நிர்ப்பந்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நிலைமாறு காலகட்ட நீதி என்று சொல்லிக்கொண்டு, இதனை நம்ப வைக்கும் வேலைகளில் அந்த அமைப்புகள் ஈடுபட்டு மக்களை அலைக்கழித்து சோர்வடையச் செய்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை இல்லாமல் செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்த அலுவலகம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எப்படி நீதியைப்பெற்றுத்தரும்? என்று கூறுவதை விடுத்து, இழப்பீடுகள் வழங்குவது பற்றியே எமக்கு அடிக்கடி கூறுகின்றது.
மற்றும் இவர்களை நம்பி வாக்குமூலங்களை பதிவுசெய்யப்போகும் புதிய சாட்சியங்களுக்கும் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லை. அவர்களும்
கடத்தப்படலாம். கொல்லப்படலாம். இது காலத்தை இழுத்தடிக்கும் ஒரு கூட்டு ஏமாற்று நாடகம். இதற்கு இந்த அமைப்புகளும் நிதியை பெற்றுக்கொண்டு துணைபோகின்றன.
நாங்கள் கண்கண்ட சாட்சியங்களாகவே உள்ளோம். எத்தனையோ ஆணைக்குழுக்களையும் பார்த்துவிட்டோம். எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் இப்போது எங்கே?
அவர்களை கடத்தியவர்கள் யார்? கொன்றவர்கள் யார்? அல்லது அவர்களை தடுத்து வைத்திருப்பவர்கள் யார்? எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்? என்பது பற்றியெல்லாம் இந்த அரசாங்கம் முதலில் பொறுப்புக்கூற வேண்டும்.
இரகசிய சித்திரவதை முகாம்களை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும். என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த கவனவீர்ப்பு போராட்டத்தில், சிறீலங்கா அரசின் ஆட்கடத்தல் மற்றும் தடுத்து வைத்தல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களும், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களும் கலந்துகொண்டனர்.
கடத்தியது மஹிந்த அரசு! கடத்தல்காரர்களை காப்பாற்றுகிறது மைத்திரி அரசு: வவுனியாவில் கதறியழுத உறவுகள்
Reviewed by Author
on
June 25, 2016
Rating:

No comments:
Post a Comment