அண்மைய செய்திகள்

recent
-

உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களுக்கு 25 வீத பிரதிநிதித்துவம்!


உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களுக்கு குறைந்தது 25 வீத இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி மட்டக்களப்பு செங்கலடியில் விழிப்புணர்வு பிரச்சார கூட்டமும் பேரணியும் நடைபெற்றது.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச சபை கேட்போர்கூடத்தில் கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் திட்டமுகாமையாளர் ரமேஸ் ஆனந்தன் தலைமையில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில்,

மட்டக்களப்பில் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் பெண்களுக்கு அரசியல் கட்சிகள் குறைந்தது 25 வீத இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டதுடன் இதனை பிரச்சாரம் செய்யும் வகையிலான டீசேட்டுக்களும் தொப்பிகளும் நிகழ்வில் கலந்துகொண்டோருக்கு வழங்கிவைக்கப்பட்டன.

நிகழ்வின் இறுதியில் செங்கலடி பிரதேச சபையில் இருந்து பேரணியாக சென்ற ஏறாவூர் பற்று பிரதேசசபை செயலாளர் ஜேன்பிள்ளை, சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் செங்கலடி பதுளை வீதியில் அமைக்கப்பட்ட பிரச்சாரப் பெயர்ப்பலகையை திறைநீக்கம் செய்துவைத்தனர்.

மட்டக்களப்பில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்வரும் காலங்களில் பெண்களுக்கு குறைந்தது 25 வீத பிரதிநிதித்துவத்தை வழங்கவேண்டுமென இங்கு பயிற்றுவிப்பாளராக கலந்துகொண்டு அன்பழகன் குருஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

25 Percent in the Number of Female Candidates in Local Elections
இலங்கையின் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து இன்றுவரை பேசப்பட்டு வருகின்றதே தவிர அதற்கான செயல்வடிவம் வழங்கப்படவில்லை. பெண்களை இலங்கை அரசியலில் உள்வாங்கிக்கொள்வது குறித்து கொள்கையளவில் பேசப்பட்டாலும் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்த முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும் சமகாலத்தில் பல சவால்களை எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் ஐம்பதற்கு மேற்பட்ட வீதத்தில் பெண்கள் வாழ்கின்றபோதும் சாதாரண குடும்பத்தில் பொருளாதாரத்தில் ஐம்பதிற்கு மேற்பட்டவீதத்தில் பெண்கள் பங்களிப்புச் செய்கின்றபோதும் அரச பணிகளில் ஐம்பதற்கு மேற்பட்ட பெண்கள் கடமையாற்றுகின்ற போதும் அரசியலில் பெண்கள் உள்வாங்கப்படுவதில்லை என்ற குறைபாடு இருக்கின்றது.

இந்த குறைபாட்டின் பிரதான காரணியாக உள்ளமை அரசியல் கட்சிகளாகும். முன்னணியில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் பெண்களை உள்வாங்கிகொள்கின்ற போதுதான் பெண்களை அரசியலில் ஈடுபடவைக்கமுடியும்.

இதற்கான பிரச்சார பணிகளை இன்று நாங்கள் முன்னெடுத்துள்ளோம். வேறுமனே பேச்சளவில் இருந்த இந்த விடயம் இன்று செயல்வடிவம் பெற்றுள்ளது.

இது நல்லதொரு ஆரம்பம் என கருதி நாம் அனைவரும் இந்த மாவட்டம் பூராகவும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் குறைந்தது 25 வீதமாவது பெண்களை உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலையினை அரசியல் கட்சிகளிடம் உருவாக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேசசபை செயலாளர் திருமதி ஜேன்பிள்ளை பயிற்றுவிப்பாளர் அன்பழகன் குருஸ் கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் திட்டமுகாமையாளர் ரமேஸ் ஆனந்தன் மற்றும் ஏறாவூர் பற்று சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களுக்கு 25 வீத பிரதிநிதித்துவம்! Reviewed by Author on July 31, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.