ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுனர் சுரேகா யாதவ்,,,
இந்தியாவின் மாகாராஸ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுரேகா யாதவ் முதல் பெண் ஓட்டுனர் என்ற பெருமையை ஆசிய அளவில் பெற்றுள்ளார்.
இவரின் இந்த சாதனையால், பெண்களாலும் ரயில் ஓட்டமுடியும் என்ற நம்பிக்கையோடு, 50 பெண்கள் படையெடுக்கவும் முன்னுதாரணம் ஆகியிருக்கிறார்.
ரயில் மட்டுமல்ல, எந்த வாகனம் ஆனாலும் அதை ஓட்ட தகுதியானவர்கள் ஆண்கள் மட்டும்தான் என்ற மனநிலை யாராலும் திணிக்கப்படாமலே இந்த சமுதாயத்தில் இருந்து வந்தது.
ஆனால், இப்போது ஆட்டோ, கார், பஸ், ரயில், விமானம் என எல்லா வாகனங்களிலுமே பெண்கள் ஓட்டுனர்களாக பணிசெய்து, வெற்றிபெற்று, ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த வரிசையில், இப்போது 51 வயதை அடைந்திருக்கும் சுரேகா ஆசியாவின் முதல் ரயில் ஓட்டுனராக, இந்திய ரயில்வே துறையில் 1988 ம் ஆண்டிலேயே பணியை துணிந்து துவங்கியுள்ளார்.
ஒரு பெண்ணாக ரயிலில் சாதனை
மம்தா பானர்ஜி ராயில்வே துறை அமைச்சராக இருந்தபோது, ஏப்ரல் 2000 ல் ‘மகளிர் மட்டும்’ உள்ளூர் சிறப்பு ரயிலை இயக்கினார். அதன் ஓட்டுனராக முதன்முதலாக சுரேகா நியமிக்கப்பட்டார்.
2011, மார்ச் 8 ல் சர்வதேச மகளிர் தினத்தன்று, புனேயிலிருந்து சி.எஸ்.டி.க்கு, கண்ணுக்கு இனிய இயற்கை அமைப்புகளுடைய கடினமான பாதையில் டெக்கான் ராணி ரயிலை ஓட்டியது சுரேகாவின் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
பயிற்சியும் வளர்ச்சியும்
சுரேகா கல்யாண் பயிற்சிப் பள்ளியில், ரயில் ஓட்டுனர் உதவியாளராக பயிற்சி பெறுவதற்கு 1986 ல் தேர்வுசெய்யப்பட்டார். அங்கு ஆறு மாதங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.
பிறகு, 1989 ல் ரயில் உதவி ஓட்டுனர் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இவர் முதன்முதலாக ஓட்டிய சரக்கு ரயிலின் எண் ’L-50’ ஆகும். இது வாடி பந்தருக்கும் கல்யாணுக்கும் இடையில் இயங்கியது.
ரயில்வே துறையில், ரயில் இஞ்சின், சிக்னலை பரிசோதிப்பது மற்றும் இது தொடர்பான பணிகளும் அவருக்கு வழங்கப்பட்டது. இவர் 1996 ல் சரக்கு ரயிலின் ஓட்டுனர் ஆக்கப்பட்டார். 1998 ல் முழுநீள சரக்கு ரயிலின் ஓட்டுனராக வழக்கமானார்.
வீரமங்கையாய் மலைப்பாதையிலும்
மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் பாதையில் ரயில் இயக்குவதற்கு சிறப்பு பயிற்சி பெற்றார்.
அங்கு மலைப்பாதையின் ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்ள இரண்டு இஞ்சின்களை கொண்ட பயணிகள் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதனால், அங்கு ரயில் ஓட்டுபவருக்கு சிறப்பு பயிற்சிகள் தேவை. அதிலும் செவ்வெனே வெற்றிபெற்றார்.
மே, 2011 ல் அதிவிரைவு ரயில் ஓட்டுனராக உயர்ந்தார். சுரேகா இப்போது கல்யாண் ஓட்டுனர் பயிற்சி மையத்தில் ஒரு பயிற்றுவிப்பாளராக பழுத்திருக்கிறார்.
விளைவும் கனவும்
சுரேகா பணியில் சேர்ந்தபோது ஆண்களின் கோட்டையாக மட்டுமே இருந்த ரயில் ஓட்டுனர் பணி, 2011 க்குப் பிறகு, சுமார் 50 பெண்கள் ஓட்டுனர் பயிற்சிபெற்று உதவி ஓட்டுனராக புறநகர் ரயில்களிலும் சரக்கு ரயில்களிலும் பணிசெய்வது குறிப்பிடத்தக்கது. இதற்கு சுரேகாவே உந்து சக்தி.
அந்த பெண்களும் சுரேகா சாதனையின் வாரிசுகளாகவே எதிர்காலத்தில் மலர்வர் என்பதும் உறுதி.
இத்தனைக்கும் சுரேகா இருசக்கர வாகனமோ காரோ ஓட்டியதில்லை. ஆனால், 12 பெட்டிகளை கொண்ட ரயிலில் 4500 பயணிகளை வெற்றிகரமாக ஏற்றிச்சென்றுள்ளார்.
ஒரு நாளைக்கு 10 மணிநேரம் ஓட்டுனர் வேலையில் ஈடுபட்ட சுரேகாவுக்கு நீண்டதூர பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என்ற கனவும் இருக்கிறது. அவர் கனவு பலிக்க இந்த கட்டுரையை வாசிக்கும் அனைவரும் வாழ்த்துவோம்.
பெண்களை புறக்கணித்து வந்த பல வேலைகளில், இப்போது அவர்கள் புகுந்து சாதனை படைப்பது.
ஆண்களும் பெண்களை புரிந்துகொள்ளாமல், பெண்களும் தங்களை புரிந்துகொள்ளாமல், இதுவரை இருந்திருப்பது வெளிச்சம்.
ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுனர் சுரேகா யாதவ்,,,
Reviewed by Author
on
July 18, 2016
Rating:

No comments:
Post a Comment