ஒரே மொழி, ஒரே இனம்......ஈழத்தமிழ் அகதிகளின் கண்ணீர்க் கதை,,,,,,????!!!!!!
காற்றில் கலந்த கந்தக வாசனை இப்போது இல்லை. முள்வேலிகள் இன்னும் திறக்கப்படவில்லை.
சொந்த நாட்டில் சிறைப் பிடிக்கப்பட்ட கைதிகளைப் போல் ஒரு பரிதாப வாழ்க்கை.

தமிழகத்திற்கு புலம் பெயர்ந்தவர்கள், உளவுப் பிரிவின் கண்காணிப்பு, கியூ பிராஞ்சின் கிடுக்குப் பிடி, ஈழத்தமிழர் முகாமை விட்டு வெளியே போகவர என எந்த நடமாட்டமும் பதிவேடுகளில் பதிவு, இரை தேடிப்போன பறவை கூட்டிற்கு வருவதுபோல சாயங்காலம் ஆறு மணிக்குள் கூட்டிற்கு திரும்பவேண்டிய இக்கட்டான ஒரு வாழ்க்கை.
எந்த ஒரு தேவைக்கும் மற்றவர்களின் கையை எதிர்பார்த்து நிற்கும் நிலை. இதுதான் ஈழ அகதிகளின் வாழ்வின் ஒருபக்கம்.
இன்னும் திறக்கப்படாத பல பக்கங்கள் ஈழத்தமிழ் அகதிகளிடம் ஒழிந்திருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பழவிளை ஈழ மக்கள் குடியிருப்பு அகதிகள் முகாம் மேற்சொன்னவற்றுக்கு உதாரணமான ஒரு முகாம்.
'ஆஸ்ரேலியாவுக்கு தப்பி செல்லாதீர்கள்', என சுவர்களில் அப்பிக்கி்டக்கும் போஸ்டர் வாசகங்களுடன் அது நம்மை வரவேற்கிறது.
அகதிகளை இன்னும் அழுத்தமாக எச்சரிக்கும்படியாக, சுவர்களில், கடலில் இரு படகுகள் கவிழ்ந்து கிடப்பதுபோன்று ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தார்கள்.
புறாக் கூடுகளை அடுக்கி வைத்தது போல் நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் வீடுகள்.ஆதிமனிதன் குகையைப் போன்று அதில் சின்ன வாசல்கள். சிதிலமடைந்த பல வீடுகள் எப்போதும் இடிந்து விழும் என்பதுபோல கிலியைத் தருகின்றன.
தவறு செய்யாமல் தண்டனை அனுபவிப்பது போன்ற இறுக்கமான உணர்வுடன் மனிதர்கள் எதிர்ப்படுகிறார்கள். அவர்களது வாழ்வு முறை, உலகின் நாகரிக வாழ்விற்கு சற்றும் பொருந்தாததாக இருக்கிறது.
டியுஷன் சென்டர் என்கிற கொங்கிறீற் கட்டிடம் மட்டும் தான் முகாமில் உறுதியான ஒரு கட்டடம். ஆனால் அங்கு அரிசி மூட்டைகள்தான் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
மகாத்மா காந்தி மற்றும், அப்துல் கலாம் இருவரது படங்களின் கீழ் ஒட்டப்பட்ட ஒரு சாட் பேப்பரில்," ஈழம் எங்கள் நாடாகும், இனிமையான வீடாகும். ஈழத் தமிழகம் தழைக்கட்டும், வலி தாங்கும் மூங்கில் புல்லாங்குழல், நலம் தரும் நட்பு"- என்று எழுதப்பட்ட வாசகம் ஈழத்தமிழர்களின் ஏக்கத்தை சொல்கிறது.

நம்மை சூழ்ந்துகொண்ட அகதிகளிடம் விகடனில் இருந்து வந்திருப்பதாக சொல்லி பேசத் தொடங்கினோம்.
"1990ல் இலங்கை வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் பகுதிகளில் இருந்து மண்டபம் அகதிகள் முகாமுக்கு வந்து அங்கிருந்து நாகர்கோவில் முகாமிற்கு வந்தவங்க நாங்க.
இந்த முகாமில் 81 குடும்பங்கள் இருக்கு. 259 பேர் வசிக்கிறோம். ஒரு ஆளுக்கு 12 கிலோ அரிசி, 5 லிட்டர் மண்ணெண்ணை அரசாங்கத்துல கொடுக்கிறாங்க.
ஆரம்பத்தில் என்.ஜி.ஓ.க்கள் பல உதவிகளை செய்தாங்க. படிப்படியா அது குறைந்து போச்சு. இப்போ ஒன்றிரண்டு என்.ஜி.ஓ அமைப்புகள்தான் உதவி செய்றாங்க. அடிப்படை உதவிகள், மற்றும் வசதிகள் சரியா கிடைக்கவில்லை.
என்.ஜி.ஓ-க்கள் கட்டித்தந்த மலசலகூடங்களைத்தான் பயன்படுத்தி வருகிறோம். மலசலகூடக் குழிகள் நிரம்பி விட்டதை பலமுறை அரசுக்கு தெரியப்படுத்தியும் அதை கண்டுக்கலை. பல வருஷங்களா குப்பைக் கிடங்கும் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது.
குப்பைகளை அள்ள ஆள் வராததால் குப்பைகளை எரிக்க வேண்டியுள்ளது. இது பலருக்கு பல சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி கஸ்டப்பட்டிருக்காங்க. ஓலைக் குடிசைகளை மாற்றவோ, இடிந்து விழும் வீடுகளை சரிப்படுத்தவோ போதிய பணம் இல்லை.

எதிர்பாராமல் பெரு மழை பெய்தால் இந்த முகாம் மொத்தமாக இடிந்து தரை மட்டமாகி விடும் என்பதுதான் இப்போதைய நிலை.
சாக்கடை பைப்பும், குடிநீர் பைப்பும் உடைந்து, ஒன்றாக கலந்து நல்ல குடிநீர் கிடைக்காம கஸ்டப்பட்டோம். பலமுறை முறையிட்டுதான் அதை சரி செய்தாங்க.
சரியான வேலை கிடைக்காம பல குடும்பங்கள் சிரமக் கதியில் இருக்காங்க. பிள்ளைகளை படிக்க வைக்கிறது பெரிய கஷ்டம். நல்லா படிச்சாலும் பிள்ளைகளுக்கு ஸ்காலர்ஷிப் கிடையாது.
ஆக படிக்கவும் சிரமப்படனும், படிச்சாலும் சிரமப்பட வேண்டும் இதுதான் எங்க நிலைமை என்றார் ஒரு அகதி இளைஞர்.
எங்களுக்கு ஓட்டுரிமை இல்லாததால் அரசியல்வாதிகளும் கண்டு கொள்வதில்லை. மற்ற பிள்ளைகளைப்போல், எங்கள் பிள்ளைகள் சுதந்திரமாக இருக்க முடியாது.
பிறந்தது முதல் நாம் அகதிகள் என சொல்லிச் சொல்லி தான் வளர்க்கிறோம். வெளிநாடுகள்ல 5 வருஷம் இருந்தாலே குடியுரிமை கிடைக்க வழி இருக்கு.
ஆனால் இந்தியாவில் எத்தனை வருஷம் வாழ்ந்தாலும் அகதிதான் அவன் பேரு” - மனதை வதைத்தது இன்னொரு அகதியின் பேச்சு.
எங்களுக்கான வாழ்வாதாரத்தை, அரசு முறைப்படி ஏற்படுத்திக் கொடுக்காததாலேயே பலர் இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடுகளுக்கு தஞ்சமடைய வேண்டியதிருக்கிறது.
வாழ்வாதாரம் இல்லாமல் யாரும் வாழ முடியாது. அதற்கு அகதிகளும் விதிவிலக்கல்ல. ஆஸ்ரேலியாவுக்கு போனால் உங்கள் பிரச்சினைகள் தீர்ந்து விடும், கள்ளத் தோணி மூலம் போய் விடலாம் என, பல ஏஜென்ட்டுகள் எங்க மக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு படகுகளில் கொண்டு போய் நடுக் கடலில் விட்டுட்டு வந்துடறாங்க.

அப்படிப் போன பலர் மாண்டு போனதாகவும் சொல்லுறாங்க. அரசு அகதிகள் எங்களது வாழ்க்கையை புனரமைத்தாலே யாருக்கும் தப்பி செல்ல வேண்டும், என்கிற எண்ணம் வராது.
எங்கள் முகாமில் இதுவரை யாரும் தப்பிச் செல்ல முயற்சித்தது இல்லை. எல்லோரையும் ஏற்றிப் போக கப்பல் வரவேண்டாம்.
எங்கள் வாழ்வாதாரத்தையும், அடிப்படை வசதிகளையும் மீட்டெடுக்க வழி கிடைத்தாலே போதும் என்கிறார்கள் மற்றவர்கள்.
இதுகுறித்து அகஸ்தீஸ்வரம் தாசில்தார் மூர்த்தி மற்றும் சிறப்பு தாசில்தார் அருள் அரசிடம் பேசினோம்.
பழவிளை ஈழத் தமிழர் குடியிருப்பின் அடிப்படைத் தேவைகள் குறித்த புகார்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி இருக்கிறோம்.
விரைவில் நடவடிக்கை எடுத்து பழவிளை ஈழத் தமிழர் குடியிருப்பின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும்” என உறுதியளித்தனர் அவர்கள்.
ஈழத்தில் தாங்கள் பட்ட துயரங்களுக்கு சகோதரனாய் கைநீட்டி உதவி கேட்டு வந்த தமிழர்களை, இன்னும் நாம் அகதிகள் என்கிற கண்ணாடி போட்டுக் கொண்டு தான் பார்க்கிறோம்.
எப்போது நிவர்த்தியாகும் இவர்களின் வாழ்வாதாரம்?
- Vikatan-
ஒரே மொழி, ஒரே இனம்......ஈழத்தமிழ் அகதிகளின் கண்ணீர்க் கதை,,,,,,????!!!!!!
Reviewed by Author
on
July 30, 2016
Rating:

No comments:
Post a Comment