மட்டக்களப்பு வைத்தியசாலையில் நடப்பது என்ன? பொதுமக்களின் குற்றச்சாட்டுக்கள் உண்மையா?
இந்த பூமியில் இறைவனுக்கு அடுத்தபடியாக மனிதர்களினால் மதிக்கப்படுபவர்கள் வைத்தியர்களும் அவர்கள் பணியாற்றும் வைத்தியதுறையுமே. ஏனெனில் இந்த பூமியில் ஒரு மனிதனின் பிறப்பதையும் இறப்பையும் உறுதிப்படுத்தகின்ற இடமாக மனிதனின் படைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற இடமாக இந்த வைத்தியசாலைகள் அமைகின்றன.
இவ்வாறு மனிதனின் உயிரைகாப்பாற்ற வேண்டிய மட்டக்களப்பு வைத்தியசாலையில் கவலையீனம் காரணமாக மனித உயிர்கள் இழக்கப்படுவதாக பொதுமக்கள் பல புகார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பேசு பொருளாக இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மாறியுள்ளது.
இன்றைய தினம் கூட குறித்த வைத்தியசாலைக்கு எதிராக களுவாஞ்சிகுடியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
தனது 8 வயது மகனை பரிகொடுத்த பெற்றோர் கதரியழும் காட்சி வைத்தியசாலை நிர்வாகத்திற்கு புரியாமல் போனமை வேதனையானதே.
மட்டக்களப்பு வைத்தியசாலையில் நாளாந்தம் பல நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அதில் ஒரு சம்பவமே களுவாஞ்சி குடி மாணவனின் இழப்பு என கூறப்படுகின்றது.
மட்டக்களப்பு வைத்தியசாலை குறித்து பொதுமக்கள் பின்வரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
கண் கிளினிக் செல்பவர்கள் அதிகாலை 2 மணிக்கு சென்று வைத்தியசாலையில் தங்கி நின்று காலை 8 மணிக்கு வைத்தியர் வரும்வரை காத்திருந்தால் முதல் 15 பேருக்கு மாத்திரமே கண் பரிசோதனை செய்து விட்டு ஏனையவர்களை பிறகு வருமாறு கூறுகின்றார்களாம்.
வைத்தியரினால் எழுதி கொடுக்கப்படும் மருந்துகள் மருந்தகத்தில் இல்லை என்று கூறி பிரைவட்டில் வாங்கச் சொல்கின்றார்களாம்.
பிரசவத்திற்கு செல்லும் பெண்களை “உனக்கு இந்த பிள்ளை தேவையா” “கிழட்டு வயசுல உனக்கு என்னத்திற்கு பிள்ளை” “உனக்கெல்லாம் இத்தனை பிள்ளை தேவை நல்லா கிடந்து கத்து” என்ரெல்லாம் தாய்மாரை கீழ்த்தரமாக பேசி இனிமேல் அந்த தாய் குழந்தையே பெற்றேடுக்க கூடாது என்பது போல் சித்திரவதைகளில் ஈடுபடுகின்றார்களாம். இது ஒரு திட்டமிட்ட இன குறைப்பு எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
பல நோயாளர்களின் கழிப்பறைகள் பாவிக்கமுடியாதவாறு உள்ளதாகவும் நோயாளர்களை பராமரிப்பது மிகவும் மோசமாக உள்ளதாகவும் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு செல்வதற்கு தங்களுக்கு பயமாகவுள்ளதாகவும் அவ்வாறு அங்கு சென்றால் தங்களது உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை என்ற பயம் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
இவ்வாறு நோயாளர்கள் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்களுக்கு வைத்தியசாலை நிர்வாகம் என்ன பதில் சொல்லப்போகின்றது?
இதற்கான தீர்வுகள் அனைத்தும் வைத்தியசாலைக்குள்ளேதான் உண்டு. வைத்தியசாலையில் பணிபுரிகின்றவர்களின் மனங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டும். தவறு விடுபவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிககைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
மனிதநேயம் இருக்கவேண்டிய இடம்தான் வைத்தியசாலை. நேயாளர்களை குணப்படுத்தவேண்டிய இடமே நோயாளர்களை உருவாக்குகின்ற இடமாக மாறிவருகின்றமை மட்டக்களப்பிற்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடாக உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் புற்றுநோயாக இன்று மட்டக்களப்பு வைத்தியசாலை மாற்றமடைந்துள்ளது. யாருக்குமே தெரியாமல் வைத்தியசாலை நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையால் பல மனிதர்களை பலி கொடுக்கின்ற இடமாக அது மாறியுள்ளது.
உடனடியாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் மாற்றம் நடைபெறவேண்டும். அங்குள்ளவர்களின் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு சிறந்த சேவை ஒன்றை வழங்குவதற்கு மட்டக்களப்பு வைத்தியசாலை நிர்வாகம் துரிதமாக செயற்பட்டு மாற்றத்தின் பலாபலன்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோளாகவுள்ளது.
மட்டக்களப்பு வைத்தியசாலையில் நடப்பது என்ன? பொதுமக்களின் குற்றச்சாட்டுக்கள் உண்மையா?
Reviewed by Author
on
July 03, 2016
Rating:

No comments:
Post a Comment