இளஞ்செழியன் முன்னிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வழக்கு!
மாவை சேனாதிராஜா தலைமையிலான அரசியல் கட்சி உறுப்பினர்கள் மீதான ஊர்காவற்றுறை தாக்குதல் வழக்கு திகோணமலையில் இருந்து யாழ் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி ஊர்காவற்றுறையில் மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த அரசியல் கட்சி உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
சட்டவிரோத உறுப்பினர்களுடன் சேர்ந்து, இந்தத் தாக்குதலை நடத்தியதாக செபஸ்டியன் ரமேஸ் அல்லது நெப்போலியன், நடராஜா மதனராஜா அல்லது மதன், அன்ரன் சிவராஜா அல்லது ஜீவன் மற்றும் நமசிவாயம் கருணாகரமூர்த்தி என்ற நான்கு பேருக்கு எதிராக 47 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப் பதிவுப்பத்திரம் சட்டமா அதிபரினால் திருகோணமலை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த தாக்குதல் சம்பந்தமான வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இருந்து யாழ் மேல் நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபரினால் மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையை திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவதாக 04.07.2016 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் சட்டமா அதிபர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு அறிவித்துள்ளார்.
இந்த அறிவித்தலையடுத்து, வழக்கு தொடர்பான பதிவேடுகளை யாழ் மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கும் கோரிக்கை கடிதத்தை திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு யாழ் மேல் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி இளஞ்செழியன் பணித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான பதிவேடுகள் கிடைத்ததும் யாழ் மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இளஞ்செழியன் முன்னிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வழக்கு!
Reviewed by Author
on
July 29, 2016
Rating:

No comments:
Post a Comment