அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை அரசுக்கு ஆதரவான தமிழ் அரசியல் தலைமையே இங்குண்டு


இந்த உலகில் மிகக் கொடியது அன்பிலார் உறவு என்பது ஔவையாரின் முடிவு. அன்பிலாரிடம் கெடுதிக் குரியவை அனைத்தும் இருக்கும். இதனாலேயே அன்பிலார் உறவு ஆபத்தானது என்றாயிற்று.

இந்தியாவின் பிரதமராக இருந்த அன்னை இந்திரா காந்தி தன் அலுவலகத்தில் இருந்து வெளியே வருகின்றார். அவரைப் பின்தொடர்ந்து அவரின் மெய்ப்பாதுகாவலர்கள்.


எந்தத் தீங்கும் அன்னை இந்திரா காந்தியை அணுகிவிடக் கூடாது என்பதற்காகவே மெய்ப்பாது காவலர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தோ பரிதாபம். அன்னை இந்திரா காந்தியை நோக்கி கொடிய மெய்ப்பாதுகாவலன் ஒருவன் துப்பாக்கியால் சுடுகின்றான்.

துப்பாக்கி ரவைகள் அன்னையின் இதயத்தைத் துளைக்கின்றன. அந்தப் பேரவலத்திலும் தன்னைச் சுடுபவனை நோக்கி நீ என்ன செய்கிறாய்? என்று அன்னை இந்திரா காந்தி கேட்கிறார்.
அந்தக் கேள்விக்குள் நிறைந்த பொருள் உண்டு. என்னைப் பாதுகாக்க வேண்டிய நீ! செய்வது சரியா? என்பது ஒரு பொருள்.

என்ன செய்வது! எத்தனை கேள்விகளைக் கேட்டாலும் அவை எத்தனை பொருள் தந்தாலும் கூட இருந்தவன் குழி பறித்துவிட்டான். அன்னை இந்திரா காந்தியின் உயிர் ஒரு கணப்பொழுதில் பிரிந்து போகின்றது.

பாரத பூமி அழுகண்ணீரில் மிதக்கிறது. இப்போது இது ஒரு சம்பவமாகிப் போயுள்ளது.
ஆனால் இந்தச் சம்பவம் இந்த உலகத்திற்கு ஒரு செய்தியை சொல்கிறது.

அதாவது அன்பிலாதவன், நேர்மையற்றவன், போக்கிரித்தனமானவன் அருகில் இருப்பான் ஆயின் ஆபத்தானது எப்போதும் மடியில் இருக்கும் என்பது தான்.

இது இந்திரா காந்தியின் கொலையுடன் நின்று விடப் போவதில்லை. இந்த உலகம் இருக்கும் வரை அநீ தியானவர்களின் இருப்பும் இருக்கவே செய்கிறது.

இதற்கு மேலாக விசுவாசமற்றவர்கள், உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்கள் இனப்பற்றில்லாத போதிலும் இனப்பற்றுள்ளவர்கள் போல’ நடிப்பவர்கள் ஓர் இனத்தின் அரசியல் தலைமையில் இருப்பார்களாயின் அந்த இனம் தீராத் துன்பத்தை என்றும் அனுபவிக்கும்.

சேர்ந்திருந்து உன்னுடைய ஆள் நான் என்று கூறிக் கொண்டு எதிரியின் திட்டத்தை அமுலாக்குவதே தன் கடமை என்று செயற்படுவோரை யார்தான் என்ன செய்ய முடியும்?

உண்மையில் இத்தகையதொரு அரசியல் தலைமை எந்த இனத்திற்கு கிடைத்தாலும் அது இந்த இனம்செய்த பாவம் என்று சொல்வதைத் தவிர வேறு எந்த வழியும் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை.

எது எப்படியாயினும் மக்கள் என்று விழிப்புணர்வு அடைகிறார்களோ அன்றுதான் பாவப்பட்ட இனம் விடுதலைபெறும். அந்த விடுதலை கிடைப்பதற்கு மேய்ப்பன் அவதரிக்க வேண்டும்.
இருந்தும் அந்த அவதரிப்பு நம் மண்ணில் இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதால் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரேவழி அரசியல் விழிப்புணர்வு அமைவதுதான்.

அரசியல் விழிப்புணர்வு ஏற்படும்போது எல்லாமும் சரியாகிவிடும் என்பதோடு பல உண்மைகள் வெளிப் படவும் வாய்ப்பாகும் என்பதால் தமிழ் மக்களின் அரசியல் விழிப்பணர்வு மீள்எழுச்சிக்கு மிகவும் கட்டாயமானதாகும்.
இலங்கை அரசுக்கு ஆதரவான தமிழ் அரசியல் தலைமையே இங்குண்டு Reviewed by NEWMANNAR on July 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.