அறநெறியால் ஒழுக்கம் நிறைந்த சமூகத்தை உருவாக்கலாம்: சிறீதரன் எம்.பி
எமது இளைய தலைமுறையினர் இப்போது தீய வழிகளை நாடிச் செல்வதற்கும் அவர்களது வாழ்க்கை பாழாக்கப்படுவதற்கும் காரணங்கள் பல இருந்தாலும் மதங்கள் தமது கடமைகளைச் சீராகச் செய்யத் தவறியுள்ளமையும் ஒரு பிரதான காரணமாக இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தமர்வும் அவர்களுக்கான புதிய பாடத்திட்ட அறிமுக நிகழ்வும் இன்று காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி சிவபூமி அறநெறிப் பாடசாலை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதில்கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேற்படி கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்,
மதங்கள் மனித மனங்களைத் தூய்மைப்படுததி ஒழுங்கான முறையில் இட்டுச் செல்வதற்காவே தோற்றம் பெற்றன.
மதங்களை வைத்து மக்களுக்கிடை குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முயல்பவர்கள் வெறும் சுயநலத்துக்காகச் செயற்படுபவர்கள். அப்படியானவர்களால்தான் மக்களிடையே பிரிவினைகளும் குழப்பங்களும் தோற்றுவிக்கப்படுகின்றன.
தமிழர்களாகிய நாங்கள் நீண்ட காலமாக எமது விடுதலையை அடைவதற்காகப் போராடி வருகின்றோம்.
எமது தேசிய விடுதலையை நோக்கிய பயணத்தில் மதக்குழப்பங்களும் திட்டமிட்டுத் தூண்டிவிடப்பட்ட சாதிப் பிரிவினைகளும் பெருந் தடைகளாக இருந்து வருகின்றன. நாங்கள் தமிழர்கள்!
நாங்கள் மொழியாலும் பண்பாட்டாலும் கலாச்சாரத்தாலும் தனித்துவமானவர்கள்.
எங்களுக்கென்றொரு வீர வரலாறு உண்டு என்பதை நாம் எமது உள்ளங்களில் நிலை நிறுத்திக்கொள்வதில் இப்படியான அர்ப்பத்தனங்கள் பெருந்தடைக் கற்களாக இருந்து வருகின்றன.
இப்படியான மனநிலைகள் எங்களிடம் இனியும் இருக்கக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
சமய ஒழுக்க நெறிமுறைகளை மக்களது அமைதிக்காகவும் ஒழுக்கத்திற்காகவும் பயன்படுத்திக்கொள்ள நாம் பழகிக்கொள்ள வேண்டும்.
எமது இளைய தலைமுறையினர் இப்போது தீய வழிகளை நாடிச் செல்வதற்கும் அவர்களது வாழ்க்கை பாழாக்கப்படுவதற்கும் காரணங்கள் பல இருந்தாலும் மதங்கள் தமது கடமைகளைச் சீராகச் செய்யத் தவறியுள்ளமையும் ஒரு பிரதான காரணமாக இருக்கின்றது.
ஒரு மனிதனுக்கு பயமும் பக்தியும் இருக்க வேண்டும். அவனிடத்தில் இந்த இரண்டும் இல்லாமல் போகுமாக இருந்தால் அவன் மனிதன் என்ற நிலையிலிருந்து விலகி ஒழுக்கம் தவறியவனாகி அவனது வாழ்க்கையைத் தானே அழித்துக்கொள்வதற்கு காரணமாகின்றான்.
இதற்கு சமய, சமூக அமைப்புக்களின் செயற்பாடு போதாமலுள்ளமையும் காரணமாகின்றது.
எமது இந்து மதத்தைச் சிதைப்பதற்கும் மொழியை அழிப்பதற்கும் என பல்வேறுபட்ட வடிவங்களில் பலர் செயற்படுகின்றார்கள்.
இவ்விடயத்தில் இந்து சமய அமைப்புக்களும் மக்களும் விழிப்படைவதுடன் சமய அறநெறிச் செயற்பாடுகளையும் மக்களுக்கேற்றதாக மாற்றி மக்களது வாழ்வியலைச் சீர்படுத்தச் செயற்படவேண்டும்.
அதற்கு இப்படியான அறநெறிப் பாடசாலைகளும் அறநெறி வழிமுறைகளும் பெரிதும் துணைபுரியும் என மேலும் குறிப்பிட்டார்.
இந்திகழ்வில் கரைச்சிப் பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் (அறநெறி) திருமதி கு.கேமலோஜினி,
நிர்வாக உதவிப் பணிப்பாளர் இ.கரிஸ்ரன் மற்றும் ஆலயங்களின் நிர்வாகிகள் அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அறநெறியால் ஒழுக்கம் நிறைந்த சமூகத்தை உருவாக்கலாம்: சிறீதரன் எம்.பி
Reviewed by Author
on
July 31, 2016
Rating:

No comments:
Post a Comment