ஊடகவியலாளரை அச்சுறுத்திய பிரதேச செயலர்!
முல்லைத்தீவு- மாந்தை கிழக்கு பிரதேச செயலரிடம் மரக்கடத்தல் தொடர்பான தகவல் பெற முயற் சித்த ஊடகவியலாளரிடம் பிரதேச செயலர் தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியள்ளதுடன் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஊடாக ஊடகவியலாளாரை தொலைபேசியில் அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மாந்தை கிழக்கு பகுதியில் சட்ட விரோதமாக காட்டு மரங்கள் தொடர்ச்சியாக வெட்டப்பட்டுவருகின்றது. இவை தொடர்பாக மக்கள் விசாரித்த போது மரங்களை வெட்டுபவர்கள் அனுமதியை காட்டுகின்றனர். என மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் இந்த அனுமதிகள் யார் கொடுத்தார்கள்? என்ன அடிப்படையில் கொடுக்கப்பட்டது? என்பன போன்ற தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக நேற்றய தினம் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் பிரதேச செயலரை தொலைபேசியில் அழைத்துள்ளார்.
இதன்போது கோபமடைந்த பிரதேச செயலர் ஊடகவியலாளரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனையடுத்து ஊடகவியலாளர் தொலைபேசியை துண்டித்துள்ளார்.
எனினும் இதன் பின்னர் மாந்தை கிழக்கின் சில பகுதிகளில் இருந்து தாம் பேசுவதாக சில நபர்கள் தொலைபேசி அழைப்பு எடுத்துள்ளதுடன் குறித்த ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் பிரதேச செயலர் உள்ளிட்ட சகலருடைய தொலைபேசி உரையாடல்களையும் ஒலிப்பதிவு செய்த ஊடகவியலாளர் இன்றைய தினம் அந்த தொலைபேசி இலக்கங்கள் யாருடையவை என அறிந்தபோது அவை அனைத்தும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அரசாங்க உத்தியோகஸ்த்தர்களின் தொலைபேசி இலக்கங்கள் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தமக்கு தொலைபேசியில் கொடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பான ஒலிப்பதிவையும் பொலிஸாருக்கு வழங்கி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதேவேளை மாந்தை கிழக்கில் மிகமோசமான முறையில் காடழிப்பு மற்றும் காட்டு மரங்கள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமையும். இதற்கு அரசாங்க ஊழியர்கள் உடந்தையாக இருக்கின்றார்கள் என பலமுறை குற்றாச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளரை அச்சுறுத்திய பிரதேச செயலர்!
Reviewed by Author
on
July 31, 2016
Rating:

No comments:
Post a Comment