வடமாகாண அமைச்சர்களுக்கு பாரிய நெருக்கடி: முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை....
வடமாகாண சபை அமைச்சர்கள் மீது பொது மக்களினால் பல குற்றச்சாட்டுக்கள் முதலமைச்சருக்கு ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் குறித்த அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு இளைப்பாறிய நீதிபதிகளைக்கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாகாண சபை அமர்வில் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளததாக வடமாகாண முதலமைச்சர் சீ வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்று வரும் தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடரில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவர் இதனைக் கூறினார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
வடமாகாண அமைச்சர்கள் குறித்து பொது மக்களினால் முறைப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அமைச்சர்களை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றதனால் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் செய்ய இரண்டு இளைப்பாறிய நீதிபகள் மற்றும் இளைப்பாறிய அரசாங்க அதிபர் உட்பட 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபை அமர்வில் குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அமைச்சர்களை நியமிக்கும் போது வடமாகாண சபை உறுப்பினர்களின் தகைமைகள் மற்றும் பின்னணியினைப் ஆராய்ந்து பார்த்தே 2013ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர்.
அந்தவகையில் இவர்களை வெளியேற்றுவது என்பது நினைத்தவுடன் செய்வது தவறானது. பொது மக்கள் தமது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார்கள். அந்த குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலை முதலில் தெரியவர வேண்டும் எனவும் சீ வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும் வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு 3 வருடங்கள் கடந்த பின்னர் இந்த குற்றச்சாட்டுக்களுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது எந்தவகையில் சாத்தியமானது? என ஊடகவியலாளர்கள் கேள்வி ஒன்றினையும் முன்வைத்தனர்.
இதற்கு முதலமைச்சர் பதிலளிக்கையில்,
முதலில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் போது சாட்சியங்கள் தரப்படவில்லை. அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்தது.
தற்போது குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டிருப்பதனால் உண்மைத்தன்மையினை விசாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. தாமதமாக இருந்தாலும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கான விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுவதனை விடவும் தாமதாக செய்வதும் சிறந்ததாக அமையும் என்றே நான் நினைக்கின்றேன் என்ற வடமாகாண முதலமைச்சர் சீ வி.விக்னேஸ்வரன் பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண அமைச்சர்களுக்கு பாரிய நெருக்கடி: முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை....
Reviewed by Author
on
August 07, 2016
Rating:

No comments:
Post a Comment