தமிழ் மக்களின் சந்தேகங்களை போக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை!
உடனடிப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமையினாலும் வடக்கு, கிழக்கு நிலைமைகளில் மாற்றமின்மையினாலும் தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவி வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நோர்வேயின் பிரதமர் எர்னா சொல்பேர்க் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார்.
முதலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த எர்னா சொல்பேர்க் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பு இடம்பெற்றிருந்தது.இந்தச் சந்திப்பில் புதிய அரசியலமைப்பு, தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் வடக்கு, கிழக்கு நிலைமைகள் தொடர்பாகவும் நோர்வே அரசாங்கம் தமிழ் மக்கள் சார்ந்து முன்னெடுக்கவுள்ள விடயங்கள் குறித்தும் நீண்டநேரம் ஆராயப்பட்டது.
இதன்போதே தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் குறித்து சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளான மீள்குடியேற்றம், படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இன்னமும் துரிதமாக இடம்பெறவேண்டும். இதற்கான அழுத்தங்களை நோர்வே வழங்க வேண்டும் என்று எடுத்துக்கூறியிருக்கின்றார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் துரிதகதியிலும் இதுவரையில் சரியான திசையிலும் செல்வதாக எடுத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இதற்கு பூரணமான ஒத்துழைப்புக்களை நாம் வழங்கி வருகின்றோம். தேசிய பிரச்சினைக்கு அரசியலமைப்பினூடாக தீர்வினைப் பெறுவது மிகவும் அத்தியாவசியமானது. கடந்த ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட இராணுவப் பிரசன்னம், காணி அபகரிப்பு, மீள்குடியேற்றம், புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டமை, சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுதல் போன்ற பல்வேறு விடயங்களில் போதுமான அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நடவடிக்கைகளில் துரிதம் காணப்படவேண்டியது அவசியம் என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
உண்மையிலேயே தமது உடனடிப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற விடயத்தினால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது தமிழ் மக்கள் சந்தேகம் கொண்டுள்ளமை வெளிப்படையானதாகும். தமிழ் மக்களின் மனங்களை அறிந்த நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் நோர்வேயின் பிரதமரிடம் இந்த விவகாரத்தை எடுத்துக்கூறியிருக்கின்றார்.
இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் விடயத்திலும் பொதுமக்களின் காணிகளை மீளக் கையளிக்கும் விவகாரத்திலும் காணாமல்போனோரது பிரச்சினை தொடர்பிலும் அரசியல் கைதிகளின் விவகாரத்திலும் இன்னமும் இழுபறிநிலையே காணப்படுகின்றது.
இதேபோல் வடக்கு, கிழக்கில் பௌத்த மேலாதிக்கத்தை உருவாக்கும் வகையிலான புத்தர் சிலைகள் முளைத்துவருகின்றன. கிளிநொச்சி, இரணைமடு கனகாம்பிகை ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது.
இதேபோல் பல்வேறு இடங்களிலும் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றன.இத்தகைய செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் நல்லிணக்க அரசாங்கத்தின் மீது சந்தேகம் கொள்ள வைத்துள்ளன. புதிய அரசாங்கம் பதவியேற்றதையடுத்து வலிகாமம் வடக்கிலும் சம்பூர் பகுதியிலும் பொதுமக்களின் காணிகள் மீள வழங்கப்பட்டன.
வலிகாமம் வடக்கில் 2750 ஏக்கர் காணிகளும் சம்பூரில் 800 ஏக்கர் காணிகளும் மீளவும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. படையினர் வசமுள்ள ஏனைய காணிகளும் படிப்படியாக மீளக் கையளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட‑போதிலும் இந்த விடயத்தில் இழுபறிநிலை காணப்பட்டு வருகின்றது.
இதேபோல் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் 6 மாதகாலத்துக்குள் மீள் குடியேற்றப்படுவார்கள் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த உறுதிமொழியும் நிறைவேற்றப்படுவதில் காலதாமதம் காட்டப்படுகின்றது. காணாமல்போனோர் விவகாரத்துக்கு உரிய தீர்வு காணப்படுமென்று அரசாங்கம் அறிவித்திருந்தது.
தற்போதுதான் காணாமல்போனோர் விவகாரம் குறித்து ஆராய்வதற்கான செயலணி அமைப்பதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்தச் செயலணி அமைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பமாவதற்கு இன்னும் பல மாதங்கள் செல்லும் நிலை காணப்படுகின்றது.
இதனைவிட இந்தச் செயலணியை அமைப்பது தொடர்பான சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பல விடயங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. இதனால் போதிய அதிகாரத்துடன் இந்தச் செயலணி செயற்படுமா என்ற சந்தேகம் எழுகின்றது. காணாமல்போனோரது உறவினர்கள் தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது தொடர்ந்தும் அங்கலாய்த்து வருகின்றனர்.
இந்த விவகாரமும் இழுத்தடிப்புப் போக்கிலேயே காணப்படுகின்றது.இதேபோல் அரசியல் கைதிகளை விடுவிக்கும் விவகாரத்திலும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை. அரசியல்கைதிகள் தம்மை விடுவிக்குமாறு கோரி பல போராட்டங்களை நடத்திவிட்டனர். ஆனாலும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த விடயத்திலும் இழுத்தடிப்புப் போக்கு காணப்படுகின்றது.இவ்வாறு தமிழ் மக்களது அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதில் காலதாமதம் காட்டப்படுகின்றமை கவலைக்குரிய விடயமேயாகும். இவ்வாறு இவ்விடயங்களில் காலதாமதம் காட்டப்பட்டு வருகின்ற சூழலில் வடக்கு, கிழக்கில் பௌத்த மேலாதிக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புத்தர்சிலைகளும் பௌத்த விகாரைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் திட்டமிட்ட வகையில் குடியேற்றங்களும் இடம்பெறுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. முன்னைய அரசாங்க காலத்தில் இடம்பெற்றதைப் போன்று தற்போதும் இத்தகைய செயற்பாடுகள் தொடர்ந்து வருகின்றமை தமிழ் மக்களிடத்தில் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகள் அமைக்கப்படுகின்றமைக்கு எதிராக போராட்டங்களை நடத்துவது குறித்து தமிழ்த்தலைமைகள் சிந்தித்து வருகின்றன. கிளிநொச்சி கனகாம்பிகை ஆலயத்தில் புத்தர் சிலை நிறுவப்பட்டமைக்கு எதிராக மாவட்ட ரீதியில் போராட்டங்கள் நடத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
எனவே, இவ்வாறான போராட்டங்கள் இடம்பெறுகின்றபோது அது முரண்பாட்டு நிலைமையையே ஏற்படுத்தப் போகின்றது.தற்போதைய அரசாங்கமானது முன்னைய அரசாங்கத்தைவிடவும் சிறப்பான முறையில் செயற்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டும் என்ற விடயத்தில் உறுதியாக உள்ளதாகவே தெரிகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஆசிய சட்ட மாநாட்டில் கலந்துகொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றியிருந்தார்.
இந்த உரையின்போது அவர் தெரிவித்திருந்த கருத்துக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண அரசாங்கம் அக்கறையுடன் உள்ளதை எடுத்துக்காட்டுவதாகவே அமைந்திருக்கின்றது. யுத்தத்தில் வடக்கிலும் கிழக்கிலும் பல அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். பலர் காணாமல்போயுள்ளனர்.
அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை கண்டறியப்பட வேண்டும். யாரையும் தனிப்பட்டமுறையில் பழிவாங்க நாம் முயற்சிக்கவில்லை. உண்மைகள் கண்டறியும் பட்சத்தில் மாத்திரமே உண்மையான நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்த முடியும் என்று பிரதமர் தெரிவித்திருக்கின்றார்.
தென்னாபிரிக்காவைப் போன்று உண்மை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொறிமுறையை உருவாக்க வேண்டும். இவ்வாண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கவுள்ளோம். அதேபோல் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
உண்மையிலேயே அரசாங்கமானது அரசியலமைப்பை மாற்றியமைப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண முயன்று வருகின்றது. அதனை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூட ஒத்துக்கொண்டிருக்கின்றார். காணாமல்போனோர் தொடர்பாக ஆராய்வதற்கான செயலகத்தை அமைப்பதற்குரிய சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் கூட பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
ஆனாலும் அரசாங்கம் அதில் தீவிரமாக செயற்பட்டு அதனை நிறைவேற்றியுமிருந்தது. இவ்வாறு அரசாங்கத்தின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுகின்ற நிலையையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.கடந்த காலங்களில் மாறிமாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் பிரச்சினைக்கு தீர்வைக் காண முயற்சிப்பதும் எதிர்க்கட்சி அதனை எதிர்ப்பதுமே வரலாறாக இருந்துள்ளது.
ஆனால், தற்போதைய நிலையில் பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்து நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளன. இருந்தபோதிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரிவான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணி தற்போது அரசாங்கத்தின் முயற்சிகளை கடுமையாக எதிர்த்து வருகின்றது.
இந்த எதிர்ப்புக்களையும் சமாளித்துக்கொண்டே அரசாங்கமானது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தமது செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டியிருக்கின்றது.
தற்போதைய நிலையில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை நிவர்த்திக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
ஏனெனில் சிறுபான்மையின மக்களே இந்த அரசாங்கம் உருவாவதற்கு பிரதான காரணமாக அமைந்திருந்தனர். எனவே, எதிர்காலத்தில் இத்தகைய சந்தேகங்கள் களையப்பட்டு நாட்டில் நலலிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
தமிழ் மக்களின் சந்தேகங்களை போக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை!
Reviewed by Author
on
August 15, 2016
Rating:

No comments:
Post a Comment