அண்மைய செய்திகள்

recent
-

யாழ் நகரைக் காக்க இளஞ்செழியனின் அதிரடி நடவடிக்கைகள்!


யாழ் குடாநாட்டில் திடீரென மீண்டும் இடம்பெறத் தொடங்கியுள்ள குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கும் நல்லூர் திருவிழாக் காலத்தை முன்னிட்டும், துரிதச் செயற்பாட்டு பொலிஸ் படையணியை (Rapid Action Police Force) உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

வடமாகாணத்தின் அதி முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகிய நல்லூர் ஆலயத் திருவிழா நடைபெற்று வருகின்ற சூழலில், கடந்த ஒரு வார காலமாக யாழ் குடாநாட்டில் வாள்வெட்டுக் கொலைகள், கொலை முயற்சிகள், படுகாயம் ஏற்படுத்தவல்ல தாக்குதல் சம்பவங்கள் சில இடங்களில் தலை தூக்கியிருக்கின்றன.

இதனால் ஏற்பட்டுள்ள சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட யாழ் குடாநாட்டுக்கான உயர் பொலிஸ் அதிகாரிகள் நீதிபதி இளஞ்செழியனை அவருடைய அலுவலகத்தில் வெள்ளியன்று சந்தித்து எடுத்துரைத்தனர்.

இதன் போதே நீதிபதி இளஞ்செழியன் நேரடியாகவும், எழுத்து மூலமாகவும் இதனைத் தெரிவித்தார்,

கடந்த ஒருவாரத்திற்கு முன்னரான மூன்று மாத காலப்பகுதியில் யாழ் குடாநாட்டின் சட்ட ஒழுங்கு நிலைமைகளை சீரான முறையில் தமது இறுக்கமான கட்டுப்பாட்டில் திருப்திகரமான முறையில் வைத்திருந்த பொலிஸாரை நீதிபதி இளஞ்செழியன் பாராட்டினார்.

மேலும் குறித்த சந்திப்பின் போது..

யாழில் ஏற்பட்டிருந்த அமைதி நிலைமை இப்போது தலையெடுத்துள்ள சில குற்றச்செயல்கள் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி அவற்றைக் கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்டுவதற்கு விரைவுச் செயற்பாட்டு பொலிஸ் படையணி ஒன்றை உருவாக்கி பறக்கும் படையாக பொலிஸாரை செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், யாழில் திடீரென வாள்வெட்டு அதன் காரணமாக கொலை, கொலை முயற்சி, வெட்டுக்காயங்கள் போன்ற சில சம்பவங்கள் கடந்த வாரத்தில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த நிலைமையை வளரவிடக் கூடாது

இம்மாதம் 29, 30, 31 ஆகிய தினங்களிலும் ஆவணி மாதம் 29, 20, 31 ஆகிய 3 தினங்களும் நல்லூர் ஆலயத்தின் முக்கிய உற்சவங்கள் இடம்பெறவுள்ளன.

புலம்பெயர் தமிழர்கள் உட்பட, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த விழாக்களில் கலந்து கொள்ள வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் சட்ட ஒழுங்கை சீராக மேற்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எதுவிதமான குற்றச் செயல்களும் இடம்பெறா வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், குற்றச் செயல்கள் நடைபெற்றால் உடனடியாக அவற்றை கட்டுப்படுத்துவதற்கு அதிவேக நடவடிக்கை எடுப்பதற்காக உடனடியாக யாழ் பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் அல்லது யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கட்டுப்பாட்டில் துரித செயற்பாட்டு பொலிஸ் படையணி ஒன்றை உருவாக்கி செயற்படுத்த வேண்டும்.

குற்றச் செயல்கள் இடம்பெறுகின்ற இடத்திற்குத் துரிதமாக பொலிஸார் விரைந்து சென்று நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இந்த செயற்பாடு அவசியமாகின்றது.

இதன் போது சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்தல், குற்றச் செயல்கள் இடம்பெறா வண்ணம் தடுத்தல், குற்றம் புரிவர்களிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாத்தல் ஆகிய நடவடிக்கைகளில் இந்த படையணி விரைந்து செயற்பட முடியும்.

விரைவு செயற்பாட்டு பொலிஸ் படையணியானது, யாழ் குடாநாட்டின் எந்த பொலிஸ் நிலைய பிரதேசமாக இருந்தாலும் பிரதி பொலிஸ் மா அதிபர் அல்லது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலில் அங்கு பறக்கும் படையாக பொலிஸார் செயற்பட வேண்டும்.

குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். வேறு மாவட்டத்திற்கு சந்தேக நபர்கள் தப்பிச் செல்வதற்கு இடமளிக்கக் கூடாது. வேறு நாட்டுக்குத் தப்பிச் செல்லவும் இடமளிக்கக் கூடாது.

நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்று சந்தேக நபர்கள் நாட்டைவிட்டு வெளியேறாத வண்ணம் விமான நிலையத்தில் தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேவேளை, கடல்வழியாக சந்தேக நபர்கள் தப்பிச் செல்ல முடியாத வண்ணம் கடற்படையை தயார் நிலைக்குக் கொண்டு வர வேண்டியதும், பொரிஸாரின் பொறுப்பாகும்.

அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் அதிவேகமாக செயற்பட்டு பிரதேசத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்ய கட்டளை பிறப்பிக்க வேண்டும்.

கொலை கொள்ளை, கற்பழிப்பு, வாள்வெட்டு போதைப் பொருள் கடத்தல் போன்ற பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி மேற்பார்வையில் விசாரணைகள் நடத்துவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கும் கிராம சேவையாளர்களின் உதவிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கடந்த 3 மாத காலமாக அமைதி நிலவியதைத் தொடர்ந்து, யாழ் குடாநாட்டு மக்கள் பொலிஸார் மீது வைத்திருந்த நம்பிக்கை இந்த ஒரு வாரமாக இடம்பெற்ற சில சம்பவங்கள் சீர்குலைத்து விட்டன.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு யாழ் குடாநாட்டு மக்கள் அமைதியாக வாழ பொலிஸார் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ வேண்டும் எனவும் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்

இதே வேளை சட்ட ஒழுங்கை நிலைநாட்டி, யாழ் குடாநாட்டில் அமைதியைப் பேணுவதற்கு துரிதமாகப் பொலிஸார் செயற்படுவார்கள் என்றும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப் படுவார்கள் எனவும் யாழ் குடாநாட்டுக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் நீதிபதியிடம் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் நகரைக் காக்க இளஞ்செழியனின் அதிரடி நடவடிக்கைகள்! Reviewed by Author on August 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.