இனங்களுக்குள்ளே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொறிமுறையை உருவாக்குமாறு கோரிக்கை!
வவுனியா மாவட்டத்தில் வாழும் மலையக மக்கள் ஏனைய மக்களைப் போல் தமது பொருளாதாரத்தையும், கலாசாரத்தையும், அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பேணிப் பாதுகாத்து வாழும் வகையில் வழிமுறைகள் உருவாக்கப்படவேண்டும்.
உருவாக்கப்படுகின்ற நல்லிணக்க பொறிமுறையில் பிரதேச வாதங்கள் கடந்த இனங்களுக்குள்ளேயேயும் நல்லிணக்கம் ஏற்படுத்தும் வகையில் பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் என வவுனியா வாழ் மலையக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறை செயலணி குழுவின் மக்கள் கருத்தறியும் அமர்வின் போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
இதன் போது வவுனியா வாழ் மலையக மக்களால் கையளிக்கப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முப்பது வருடயுத்த அனுபவத்தின் பின்னர் இன்று நல்லிணக்கத்தின் அவசியம் பற்றி பேசப்படுகின்றது. இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உருவாகாவிடின் நாட்டில் சமாதானம் ஒருபோதும் நிலைக்காது.
சமாதானம் நிலைக்க வேண்டுமாயின் அனைத்து இனங்களும் சம உரிமையுடனும் சம வாய்ப்புடன் வாழவேண்டும்.
இப்பின்புலத்தில் வடக்கு மாகாணத்தில் வாழ்ந்து வரும் மலையக தமிழர்களாகிய நாம், ஏனைய சமூகங்களுடன் ஒன்றிணைந்து சம உரிமையை அனுபவிக்கும் ஒரு சமூகமாக வாழ விரும்புகின்றோம்.
நல்லிணக்கத்திற்கான முயற்சிகளின் போது, நாம் முகம் கொடுத்துவரும் ஒதுக்குதலை நீக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வவுனியா மாவட்டத்தில் 42வீதமான மலையகமக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். பூர்வீகமக்களுடன் ஒப்பிடுகையில் கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் சமூக பொருளாதார கலாசார உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கையின் போது இம் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இப்புறக்கணிப்பிலிருந்து நிவாரணம் கிடைப்பதற்கு நல்லிணக்க முயற்சியன் போது எமது சமூகம் சமவுரிமைப் பெற்று சுபீட்சமாகவும் வாழ வழிவகை செய்ய வேண்டும் என கோருகின்றோம்.
1958 தொடக்கம் அரசாங்கத்தால் பகிரந்தளிக்கப்பட்ட மற்றும் நாங்களாவே குடியமர்ந்துக் கொண்ட காணிகளுக்கு உரிய உறுதிப்பத்திரம் இல்லை. ஏனையவருக்கு வழங்குவது போல் எமக்கும் காணி உறுதி வழங்க வேண்டும்.
மேலும் கல்வி, உட்கட்டுமானம், தொழில்வாய்ப்பு, நீர்ப்பாசனம், போன்ற பல்வேறு வழிகளிலும் வவுனியா வாழ் மலையக மக்கள் புறக்கணிப்புக்குள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள்
எனவே வவுனியா மாவட்டத்தில் வாழும் மலையக மக்கள் ஏனைய மக்களைப்போல் தமது பொருளாதாரத்தையும், கலாசாரத்தையும், அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பேணிப் பாதுகாத்து வாழும் வகையில் வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனங்களுக்குள்ளே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொறிமுறையை உருவாக்குமாறு கோரிக்கை!
Reviewed by Author
on
August 18, 2016
Rating:

No comments:
Post a Comment