அழிவை சந்திக்கும் மாவட்டங்களாக அம்பாறையும் திருகோணமலையும்.....
வடகிழக்கைப் பொருத்தவரையில் பெரும் அழிவை சந்தித்துக்கொண்டிருக்கும் மாவட்டங்களாக அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் காணப்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் கூறியுள்ளார்.
திருகோணமலை சம்பூர் கிராம மக்களுக்கான முதற்கட்ட பயனாளிகளுக்கான சமையல் பாத்திரங்கள், கிணறுகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று சம்பூர் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கான அன்பே சிவம் அமைப்பின் தலைவர் அ. அருளானந்த சிவத்தின் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கான அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான தவராசா கலையரசன், நாகேந்திரன், மற்றும் அன்பே சிவம் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் கு.குமணன், கல்வியாளர்கள் பயனாளிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்,
“வடகிழக்கு மாகாணங்களிலே பல மாவட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு இருந்த போதும் இன்று தமிழ் மக்களை பொறுத்தவரையில் மிகவும் பெரும் அழிவை நோக்கி
சென்று கொண்டிருக்கும் மாவட்டங்களாக இரண்டு மாவட்டங்கள் இருப்பது மிகவும் மனவேதனை தரும் விடயமாகும்.
திருகோணமலை மாவட்டம் என்பது மிகவும் வளம் மிக்க ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டம் முழுக்கமுழுக்க தமிழ் மக்கள் வாழ்ந்த மாவட்டம். ஆனால் இந்த நாட்டிலே ஏற்பட்ட யுத்த சூழலால் தமிழர்களது பலத்தை உடைத்து இந்த மாவட்டத்தில் எமது இருப்பு இன்று இரண்டாவதாக ஆக்கப்பட்டிருக்கின்றது.
அன்று இந்தப் பிரதேசத்திலே பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து 10 வருடங்களுக்கு பிற்பாடு மீண்டும் இங்கு வந்து குடியேறி தமது வாழ்க்கையை அமைத்து வாழ்ந்து வருவது மிகவும் சந்தோசம் தரும் விடயமாகும்.
இவ்வாறான பல இன்னல்களுக்குள்ளாகி இன்று தங்களது வாழ்வாதாரங்களை கொண்டு நடத்த முடியாத அளவிற்கு எத்தனையோ குடும்பங்கள் வடகிழக்கில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களது துயரங்களை துடைக்க வேண்டுமாக இருந்தால் இன்று புலம்பெயர்ந்து வாழும் சமூக அமைப்புக்கள் இவர்களது வாழ்வாதாரத்தினை உயர்த்த ஒவ்வொரு மாவட்டங்கள் தோறும் கைத்தொழில் பேட்டைகளை உருவாக்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை செய்து கொடுக்க முன்வரவேண்டும்.
இன்று இந்த இடத்திலே வாழ்வாதார உதவிகள், சிறந்த குடிநீரை பெறுவதற்கான கிணறுகள், கற்றல் உபகரணங்களை வழங்கும் அன்பே சிவம் அமைப்பானது பல மாவட்டங்களிலும் தங்கள் அமைப்பின் மூலம் பலதரப்பட்ட சமூக நலனோன்பு வேலைத்திட்டங்களை செய்து வருகின்றார்கள்.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தினை பொறுத்தவரையில் தமிழ் மக்களது இன்னல்களை களைவதற்காக வேண்டி பல வேலைத்திட்டங்களை செய்திருக்கின்றார்கள். அது போன்று இனிவரும் காலங்களிலும் செய்வார்கள்.
எமது இனத்தினை பொறுத்த வரையில் இன்று தாய், தந்தையரை இழந்த பிள்ளைகள், கணவனை இழந்த மனைவி, பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் எனப் பலதரப்பட்ட உறவுகள் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களது வாழ்வாதாரத்தினை உயர்த்தி சமூகத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டிய கடப்பாடு நாம் ஒவ்வொருவருக்கும் உண்டு, அதற்கு நாம் உழைக்க வேண்டும்” எனவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் கேட்டுக்கொண்டார்.
அழிவை சந்திக்கும் மாவட்டங்களாக அம்பாறையும் திருகோணமலையும்.....
Reviewed by Author
on
September 06, 2016
Rating:

No comments:
Post a Comment