அமெரிக்காவின் நிதி அறிக்கையில் இலங்கை பற்றிய முக்கிய தகவல்....
ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா 585 மில்லியன் டொலரைச் செலவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் நிதி அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வெளியிட்டுள்ளார்.
இதில், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் ஆட்சி என்ற பிரிவின் கீழ், 585 மில்லியன் டொலர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது 2015 ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 70 மில்லியன் டொலர் குறைவாகும் என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி எழுதியுள்ள நிதியறிக்கையின் முன்னுரையில்,
“இலங்கை, நைஜீரியா, பர்மா ஆகிய நாடுகளில் முக்கியமான ஜனநாயக அடைவுகளுக்கு நாம் ஆதரவு அளித்துள்ளோம், சிவில் சமூகம், பொதுமக்களின் நகர்வுகள், நம்பிக்கையான தலைவர்கள், தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள், மற்றும் ஏனையோருடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும், ஜனநாயகம், நல்லாட்சி, பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு தீர்வு காணுதலிலும் கவனம் செலுத்துகிறோம்” என்று கூறியுள்ளார்.
வர்த்தக உடன்பாடுகள், அர்த்தமுள்ள தடைகள், மக்களுக்கிடையிலான உறவுகள், வர்த்தகத் தொடர்புகள், தொழிலாளர் உரிமைகள், மற்றும் மனித உரிமைகள் போன்ற விடயங்களை அமெரிக்கா கையாள்வதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரத்துவ ஆட்சி நிலவும் நாடுகளில், அமைதியான ஜனநாயக மறுசீரமைப்புகள், ஜனநாயக நிறுவகங்கள், சிறுபான்மையினரின் உரிமைகளை மதித்தல், அனைவருக்குமான கண்ணியம் ஆகியவற்றுக்காகப் பாடுபடும் செயற்பாட்டாளர்கள் அமைப்புகளுக்கு நாம் ஆதரவளிக்கிறோம் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளது.
அமெரிக்காவின் நிதி அறிக்கையில் இலங்கை பற்றிய முக்கிய தகவல்....
Reviewed by Author
on
November 21, 2016
Rating:

No comments:
Post a Comment