அண்மைய செய்திகள்

recent
-

பயங்கரவாத தடைச்சட்டம் வடக்கு இளைஞர்கள் மீது மீண்டும் பாயுமா?


யுத்தம் முடிவடைந்து எட்டாவது ஆண்டு நெருங்குகின்ற இன்றைய நிலையில் கூட வடக்கு, கிழக்கு பகுதியில் அச்சமற்ற ஒரு இயல்பு நிலைமை இன்னும் ஏற்படவில்லை.

மஹிந்த அரசாங்கத்தின் காலப் பகுதியில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் கூட இராணுவ நெருக்குவாரங்கள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிகமாகவே இருந்தன.

சிவில் நடவடிக்கைகளில் இராணுவ தலையீடுகள் அதிகமாக காணப்பட்டதுடன், மக்கள் தமது உரிமைக்காக ஜனநாயக ரீதியாக வீதிக்கு வருவதற்கு அஞ்சுகின்ற நிலைமை கூட ஏற்பட்டிருந்தது.

யுத்தம் முடிந்த பின்னரும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கிறீஸ் மனிதன், புலிகளின் மீள் உருவாக்கம் என வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பதற்றமான சூழலே இருந்தது.

புலிகளின் மீள் உருவாக்க முயற்சி எனக் கூறி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுமிருந்தனர்.

புலிகளை மீள உருவாக்க முயற்சித்ததாக அப்பன், தேவிகன், கோபி என மூவரை நெடுங்கேணி, வெடிவைத்தகல் பகுதியில் இராணுவம் சுட்டது.

2014ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழில் 'ஆவா' குழு என்னும் பெயரை பொலிசார் வெளியிட்டிருந்தனர்.

யாழில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் அந்தக் குழு தொடர்புபட்டது எனக் கூறி சிலர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள், வாள்கள் என்பவற்றுடன் இரண்டு கைக்குண்டுகளும் கைப்பற்றப்பட்டு யாழ்ப்பாண நீதிமன்றம் ஊடாக அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அது நடந்து ஒரு சில வார இடைவெளியில் யாழ் பிரம்படி ஒழுங்கையில் இருந்த வீடொன்றில் இருந்து இராணுவ சீருடை மீட்கப்பட்டதுடன் சிலர் கைது செய்யப்பட்டனர்.

அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி துருப்பிடித்த குண்டு ஒன்றை வைத்து இருந்தாலே பயங்கரவாத தடைச் சட்டம் பாயும். சிவிலியன் ஒருவர் இராணுவ சீருடையை வைத்திருப்பதும் தண்டனைக்கு உரிய குற்றமாகும்.

இந்நிலையில் ஆவா குழு எனும் பெயர் அறிமுகம் ஆகி மூன்று வருடங்கள் ஆகின்ற நிலையில், தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அக்குழுவை சார்ந்தவர்கள் எனும் குற்றசாட்டில் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அப்படியாயின் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை வடக்கில் பயன்படுத்த வேண்டிய தேவை ஏன் எழுந்துள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டியதே.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, யாழ் கொக்குவில் பகுதியில் வைத்து பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும், மற்றவர் துப்பாக்கி சூட்டால் ஏற்பட்ட விபத்தையடுத்தும் மரணமடைந்தனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், இப்படுகொலைக்கு நீதி வேண்டியும் இன, மத,மொழி பேதங்களைக் கடந்து மாணவர் சமூகமும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து ஜனநாயக வழியில் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
அப்பாவி மாணவர்கள் மீதான தாக்குதலுக்கான நீதிக் கோரிக்கைகள் வலுத்திருந்த நிலையில், யாழ் சுன்னாகம் பகுதியில் சிவில் உடையில் இருந்த இரு பொலிசார் மீது வாள்வெட்டு இடம்பெற்றிருந்தது.

பின்னர் இத்தாக்குதல் ஆவா குழுவால் மேற்கொள்ளப்பட்டதாக துண்டுப்பிரசுரமும் வெளியாகியிருந்தது.

அதன் தொடர்ச்சியாக 'பிரபாகரன் படை' என்னும் பெயரில் தமிழ்ப் பொலிசாரை வடக்கில் இருந்து வெளியேறுமாறு பொலிசாருக்கு கடிதமும் அனுப்பப்பட்டிருந்து.

இந்த விடயங்கள் ஆழமாக நோக்கப்பட வேண்டியவை. இவை சாதாரண இளைஞர்களால் வெளியிடப்பட்ட கடிதமோ அல்லது துண்டுப்பிரசுரமோ இல்லை.

ஏனைய மாகாணங்களை விட வடக்கில் முப்படைகள், காவல்துறை, புலனாய்வுத்துறை என பாதுகாப்பு இறுக்கமாகவுள்ள நிலையில் அவர்களின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு இவை வெளியாகுவதற்கான வாய்ப்புக்கள் என்பது மிக மிகக் குறைவே.

ஆவா குழுவே வாள்வெட்டை மேற்கொண்டதாகக் கூறப்பட்டது. அவர்களை கைது செய்ய வேண்டும் எனப் பலராலும் வலியுறுத்தப்பட்டும் வந்தது.

இந்த நிலையில் அவ்வாறான ஒரு இளைஞர் குழு செயற்படுமாக இருந்தால் அந்தக் குழு தம்மைப் பாதுகாப்பதை விடுத்து துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டு தாமாகவே சிக்கலில் மாட்டிக் கொள்ளுமா என்பது சிந்திக்க வேண்டியதே.

தற்போது பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை குறித்த கவனம் மெல்ல மெல்ல குறைவடைந்து ஆவா குழு பற்றிய பேச்சே வலுப்பெற்றிருக்கிறது.

ஆவா குழுவுக்கும் இராணுவதற்கும் தொடர்புள்ளதாக அரசாங்க அமைச்சரே சந்தேகம் வெளியிட்டிருக்கிறார்.

அவ்வாறானதொரு நிலையில் ஆவா என்கின்ற குழுவை வைத்து தற்போது வடக்கில் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கிறிஸ் மனிதன், புலிகளின் மீள் உருவாக்கம் என்பவை கடந்து தற்போது நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கு மக்கள் மீதான கிடுக்குப்பிடியாக மாறியிருக்கிறது ஆவாகுழு.

ஆவா குழு இருக்கிறதா இல்லலையா என்பதும் அதனுடன் படைத்தரப்புக்கு தொடர்பு இருக்கின்றதா என்பதும் ஒருபுறமிருக்க, தற்போது ஆவா குழுவின் பெயரைப் பயன்படுத்தி இடம்பெறும் கைதுகளும், வடக்கு இளைஞர்கள் மேல் பாயும் பயங்கரவாதச் சட்டமும் வடக்கில் குழப்ப நிலையையும் பதற்ற நிலையையும் அதிகரிக்கவே செய்துள்ளன.

ஆவா குழு என்னும் சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் கடந்த சனிக்கிழமை முதல் கைதுகள் இடம்பெற்றிருந்தன.

முதல்கட்டமாக அன்றைய தினம் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களைக் கைது செய்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு கொண்டு சென்றுள்ளதுடன், அவர்களில் மூவரை கடந்த எட்டாம் திகதி கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தியுமுள்ளனர்.

அவர்களை நவம்பர் 16 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஆறு பேரில் ஒருவரான அலெக்ஸ் என்பவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தீவிர செயற்பாட்டாளர் எனவும் வடக்கில் அண்மையில் இடம்பெற்ற 'எழுக தமிழ்' நிகழ்வில் முன்னின்று செயற்பட்டவர் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அலெக்ஸ் ஒரு சட்டத்துறை மாணவன் எனவும், தன்னுடன் தொடர்பில் உள்ளவர் எனவும் யாழ் நீதிமன்றுக்குக் கூட தன்னிடம் அடிக்கடி வந்து செல்பவர் எனவும் சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் தேசியத்தை நோக்கி எழுச்சி பெறும் இளைஞர்களை குறிவைத்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆவா குழு என்னும் பெயரைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க முயல்வதாக குற்றசாட்டும் எழுந்திருக்கின்றது.

கிளிநொச்சியில் இராணுவ கட்டுப்பாட்டின் கீழுள்ள பரவிப்பாஞ்சானில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி ஜனநாயக ரீதியான ஆர்ப்பாட்டத்திற்கு ஆயத்தம் செய்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரை ஏதேதோ காரணங்களைக் கூறி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்த பயங்கரவாத புலனாய்வுத் துறையினர், நீதிமன்ற நடவடிக்கை மூலம் புனர்வாழ்வளித்து விடுவித்திருந்தனர்.

அந்த வகையில் அந்த கட்சியின் செயற்பாட்டாளர்கள் இலக்கு வைக்கப்படுவது என்பது இது முதல் முறையல்ல என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

மறுபுறம், தென்பகுதியில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய பாதாள உலகக் குழுக்கள் உள்ளன.

அதனைக் கட்டுப்படுத்த பொலிசாரை பயன்படுத்தும் அரசாங்கம் அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவும் செய்கின்றனர்.

அண்மையில் கொழும்பு புறநகர் பகுதியில் இரு பாதாள குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டவர்கள் விடயமும் அவ்வாறே கையாளப்பட்டது.

ஆனால் வடக்கில் இடம்பெறும் வாள்வெட்டுக் குழுவை கட்டுப்படுத்துவதற்கு மட்டும் பயங்கரவாத சட்டத்தை கையில் எடுப்பதும், பயங்கரவாத புலனாய்வுப்பிரிவை பயன்படுத்துவதும் எந்த வகையில் நியாயமானது?

யாழில் வசிக்கும் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது கொழும்பு நீதிமன்றம் ஊடாகவே நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவுள்ளதாக அரசாங்கம் கூறி வரும் நிலையில் வடக்கில் தற்போது இடம்பெறும் கைதுகள் அந்த சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான ஒரு முயற்சியா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

வடக்குக்கு ஒரு நீதி, தெற்குக்கு ஒரு நீதி என்ற அடிப்படையில்தான் தற்போதைய கைதுகளும் அவர்கள் மீதான நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன.

இவ்வாறானதொரு நிலையே கடந்த மஹிந்த ஆட்சியில் இருந்தது. அதனாலேயே அந்த ஆட்சி மீது தமிழர் தரப்பு வெறுப்பும் கொண்டது.

அதேநிலை தான் தற்போதைய நல்லாட்சியிலும் தொடரும் நிலையில் நல்லிணக்கத்தையும் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் எவ்வாறு ஏற்படுத்த முடியும் என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.

பயங்கரவாத தடைச்சட்டம் வடக்கு இளைஞர்கள் மீது மீண்டும் பாயுமா? Reviewed by Author on November 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.