பின் தங்கிய கிராமியப் பாடசாலைகளும் இனி - வடக்கு கல்வி அமைச்சர்...
வடக்கு மாகாணத்தில் பிரபல பாடசாலைகளுக்கு ஒப்பான வகையில் ஏனைய சிறிய பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்ய பரிந்துரை செய்திருக்கிறோம் என வடக்கு மாகாணக் கல்வியமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் பரிசளிப்பு விழா அண்மையில் பாடசாலையின் மாலதி சுப்பிரமணியம் அரங்கில் அதிபர் பே.தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இந்த விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
வடக்கு மாகாணத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் போட்டி போட்டுக் கொண்டு பிரபல கல்லூரிகளில் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் வீடுகளுக்கு அண்மித்திருக்கும் சிறிய பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை அனுமதிக்க முன்வர வேண்டும்.
பின் தங்கிய கிராமியப் பாடசாலைகளை எங்களால் முன்னேற்ற முடியும் என்ற சித்தாந்தங்களைக் கொண்ட ஆளுமை மிக்க அதிபர்களை நாங்கள் உருவாக்க வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் அதிபர் வெற்றிடங்கள் ஏற்படும் போது அதிபர்களை நியமனம் செய்வதில் எங்களுக்குப் பல சிக்கல்கள் ஏற்படுகிறது.
தாங்கள் சொல்லும் அதிபர்களைத் தான் நியமனம் செய்ய வேண்டும் எனப் பழைய மாணவர்களும், பெற்றோர்களும் அடம் பிடிக்கிறார்கள். ஆனால், கொள்கை , தொழில், கல்வித் தகமை, அனுபவம் என்பவற்றின் அடிப்படையில் தான் நாங்கள் புதிதாக நியமிக்க வேண்டியுள்ளது.
வடக்கு மாகாணம் ஆயிரம் பாடசாலைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆயிரம் பாடசாலைகளிலுமிருக்கும் அதிபர்களும் தங்கள் சேவைகளைச் செவ்வனே செய்கிறார்களா? என்பது கேள்விக்குரியதொன்று.
பிள்ளைகளை ஆசிரியர்களும், பெற்றோர்களும் வதைக்கக் கூடாது. நாள் முழுவதும் கல்வி கற்க வேண்டும் எனப் பிள்ளைகளை வற்புறுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பின் தங்கிய கிராமியப் பாடசாலைகளும் இனி - வடக்கு கல்வி அமைச்சர்...
Reviewed by Author
on
December 02, 2016
Rating:

No comments:
Post a Comment