இலங்கை அதிபரைக் கொல்ல திட்டமா...? விசாரணை வளையத்தில் ராஜீவ் காந்தியைத் தாக்க முயன்றவர்
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன-வைக் கொலைசெய்ய திட்டம்தீட்டி முயற்சித்ததாக, ரோஹன டி சில்வா என்பவரை இலங்கை காவல்துறை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளது. யார் இந்த ரோஹன டி சில்வா? இவருக்கு அதிபரைக் கொல்ல முயற்சிப்பதற்குக் காரணம் என்ன? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்துள்ளன.
விஜித ரோஹன டி சில்வா, முன்னாள் கடற்படை வீரராக இருந்தவர். 1987-ம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இலங்கை தலைநகர் கொழும்பு சென்றிருந்தபோது, அங்கு கடற்படை அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது ராஜீவ் காந்தியின் தலையில் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால், தாக்க முயற்சித்தவர் இந்த ரோஹன் டி சில்வா. அதிர்ஷ்டவசமாக ராஜீவ் குனிந்ததால், அவரது தோள்பட்டையில் லேசாக துப்பாக்கி முனை தாக்கியது. இந்த குற்றத்திற்காக டி சில்வா, இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார்.
இந்த சம்பவம் நடைபெற்று 30 ஆண்டுகள் நெருங்கியுள்ள நிலையில், இலங்கை அதிபரை கொல்ல திட்டமிட்டிருப்பதாக ரோஹன் டி சில்வா மீது சந்தேகம் ஏற்பட்டு, அவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 2017-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி, சிறிசேன-வை கொல்ல, இவர் திட்டம் போட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, இலங்கையின் தகவல் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் செயலாளரான நிமல் போபேஜ் கூறுகையில், “இலங்கை அதிபர் சிறிசேனா, அடுத்த மாதம் 26-ம் தேதிக்குள் கொல்லப்படுவார் என ரோஹன டி சில்வா தனது வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் போலீஸிலும் புகார் அளித்தார். மேலும், கடந்த 5 மாதங்களாக அவர், இலங்கை அதிபருக்கு எதிராக பிரச்சாரம் நடத்தி வருகிறார்"என்று தெரிவித்தார்.
சிறை தண்டனைக்குப் பின்னர் ரோஹன் டி சில்வா ஜோதிடர் ஆனார். அவரின் ஜோதிடத் திறனை பயன்படுத்தி, சிறிசேனா வரும் ஜனவரி மாதம், 26-ம் தேதி கொல்லப்படுவார் என குறிப்பிட்டிருந்தார். "டி சில்வா-வின் வெளிப்படையான வலைதள பதிவினால், அதிபருக்கு கூடுதல் பாதுகாப்பும், டி சில்வா மீது குற்றவியல் விசாரணையும் நடத்த வேண்டும்" என்றும் போபேஜ் கூறியுள்ளார்.
இலங்கை அதிபர்களில் பெரும்பாலானோர் ஜோதிடத்தை அதிகம் நம்புபவர்கள். மூத்த தலைவர்கள் சொல்லும் கருத்துக்களை விட, ஜோதிடர்கள் சொல்லும் தகவல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். முன்னாள் அதிபர் ராஜபக்ஷே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜோதிடர்களைச் சந்தித்து தேர்தல்பற்றி கேட்டபோது, அதை அப்போது சிறிசேனா ஏளனம் செய்தார். ஆனால், தற்போது, ஜோதிடம் என்ற பெயரில் தனக்கு எதிராக பதிவிட்டுள்ள டி சில்வா மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு இசை துறையை முதலில் தேர்ந்தெடுத்த சில்வா, அதன்பிறகு ஜோதிடத்தின் மீது இருந்த ஆர்வத்தால் ஜோதிடர் ஆனார்.
டி சில்வாவின் ஜோதிடம் உண்மையா? இல்லை, இலங்கை மக்கள் ஜோதிடத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர் ஏதேனும் திட்டம் தீட்டுகிறாரா? அதிபர் கொல்லப்படுவார் என்பதை வெளிப்படையாக வலைதளத்தில் சொல்வது சரியா? இத்தனை கேள்விகளுக்கும் காவல்துறை விசாரணையின் முடிவில்தான் பதில் கிடைக்க வேண்டும்.
இலங்கை அதிபரைக் கொல்ல திட்டமா...? விசாரணை வளையத்தில் ராஜீவ் காந்தியைத் தாக்க முயன்றவர்
Reviewed by NEWMANNAR
on
December 21, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 21, 2016
Rating:


No comments:
Post a Comment