இலங்கையில் வறுமை! தமிழர் பிரதேசங்களே முன்னிலை....
அண்மையில் தொகைமதிப்பு புள்ளி விபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட இலங்கை படம், பிரதேச செயலகங்களின் நிர்வாக எல்லைகளின் அடிப்படையில் இலங்கையின் வறுமை நிலையினை எடுத்து காட்டுகிறது.
2002ஆம் ஆண்டு நடந்த தொகை மதிப்பு மற்றும் வீட்டு துறையினரின் வருமானம் செலவு மதிப்பீட்டின் (HIES) படியும் நூற்றுக்கு 22.7%ஆக இருந்த வறுமை கோட்டின் கீழ் உள்ளவர் வீதம் 2012/13 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தொகை மதிப்பின் படி 6.1% மாக குறைவடைந்து உள்ள போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் வறுமையின் கீழ் அவதிப்படும் மக்களின் அளவு அதிகமாகவே உள்ளது.
முல்லைத்தீவு(28%), மொனராகலை(21%), மன்னார்(20%), மட்டக்களப்பு(19%), கிளிநொச்சி(13%) ஆகிய மாவட்டங்களே அதிகம் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களை கொண்ட மாவட்டங்களாக பதிவாகி உள்ளது.
வடக்கு கிழக்கில் உள்ள போருக்கு பின்னரான தமிழர் பிரதேசங்களிலேயே வறுமை அதிகமாய் உள்ளது.
பிரதேச செயலகங்கள் வாரியான வறுமை கோட்டின் கீழ் உள்ளோர் வீதம்(2012/13)
தரவு மூலம் : தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம்
வட கிழக்கை தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்திலும் முன்னேற்றம் 2002 க்கும், 2012/13 க்கும் இடையில் மற்ற எல்லா இடங்களிலும் வறுமை கோட்டின் கீழ் உள்ளோர் சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளது.
முன்னைய காலங்களில் இலங்கையின் வறுமைப்பட்ட மாகாணமாக கருதப்பட அம்பாந்தோட்டையில் 2002இல் 32%ஆக இருந்த வறுமை கோட்டின் கீழ் உள்ளோர் வீதம் 2012/13 தரவுகளின் அடிப்படையில் வெறும் 4.9% வீதமாகவே காணப்படுகிறது.
2002 இல் யுத்த சூழ்நிலை காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சனத்தொகை மதிப்பு இடம்பெறவில்லை.
அதனால் அப்போது வடக்கு,கிழக்கு பிரதேசங்களில் நிலவிய வறுமை மட்டத்தினை அளவிட முடியாது உள்ளது.
ஆனால் கடைசியாக நடந்த தொகைமதிப்பின் அடிப்படையில் வறுமை தொடர்பான தரவுகள் வடக்கு கிழக்கில் அதிகமாக இருப்பது பிரதேசரீதியாக செய்ய வேண்டிய வறுமை ஒழிப்பு திட்டத்தின் தேவையை காட்டிநிற்கிறது.
மேல் உள்ள வரைப்பின் அடிப்படையில் வறுமை மட்டம் அதிகமா உள்ள பிரதேச செயலக பிரிவுகள்
மண்முனை மேற்கு - மட்டக்களப்பு மாவட்டம் - 45.1%
கோறளை பற்று - தெற்கு - மட்டக்களப்பு மாவட்டம் - 37.7%
புது குடியிருப்பு - முல்லைத்தீவு மாவட்டம் - 35.7%
துணுக்காய் - முல்லைத்தீவு மாவட்டம் - 34%
மாந்தை கிழக்கு - முல்லைத்தீவு மாவட்டம் - 34%
ஒட்டி சுட்டான் - முல்லைத்தீவு மாவட்டம் - 33%
மண்முனை தென் மேற்கு - மட்டக்களப்பு மாவட்டம் - 30.1%
பிரதேச செயலகங்கள் வாரியான வறுமை கோட்டின் கீழ் உள்ளோர் வீதத்தில் ஏற்பட்ட மாற்றம் (2002 - 2012/13)
தரவு மூலம் : தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம்
உலகளாவிய வறுமை ஒழிப்பு
வறுமையை முற்றாக ஒழிப்பதே மனித சமுதாயத்தின் முன்னால் இருக்கும் பிரதான சவாலாக இருக்கிறது.
உலகில் வறுமையில் இருக்கும் சனத்தொகை 1995ஆம் ஆண்டில் 1.9 பில்லியனாக இருந்து 2015ம் ஆண்டில் 856 மில்லியனாக, அதாவது பாதியாக குறைந்துள்ளது.
இன்னும் மில்லியன் கணக்கான மக்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையிலேயே இருக்கிறார்கள். வறுமை ஒருவரின் வருமானத்தை அடிப்படையாக கொண்டே கணக்கிடபடுகிறது.
ஒரு நாளுக்கு சராசரியாக 1.25 டொலரை விட குறைவாக பெரும் ஒருவர் வறுமை கோட்டின் கீழ் உள்ளவராக கருதப்படுகிறார்.
அவரால் அந்த வருமானத்தினை வைத்துக்கொண்டு அடிப்படையை தேவைகளான, போதுமான உணவினையோ, சுத்தமான தண்ணீரையோ, சுகாதாரமான கழிப்பிட வசதிகளோ பூர்த்தி செய்ய முடியாமல் இருப்பது வறுமை என கணிப்பிடபடுகிறது.
துரிதமாக வளர்ச்சியடையும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் பெரும்தொகையான மக்களை வறுமையில் இருந்து மீட்டு எடுத்தாலும், அந்த மீட்சி சகலமட்டங்களிலும் ஏற்படுத்தப்படவில்லை.
வறுமை அதிகமாக பெண்கள் இடத்திலேயே காணப்படுகிறது. பெண்களுக்கான போதுமான கல்வி, நியாயமான சம்பளத்துடன் கூடிய வேலை, ஆதன உரிமை என்பன, வறுமை பெண்களிடத்தே அதிகமாக காணப்பட சில காரணங்கள் ஆகும்.
வடகிழக்கில் வறுமை ஒழிக்க என்ன செய்யலாம்?
போதுமான சம்பளத்துடன் கூடிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கபடாமை வறுமைக்கான மிக முக்கிய காரணம்.
பாரம்பரியமான விவசாயம், மீன்பிடி தொழில் துறைகளில் மட்டும் அல்லாது, கைத்தொழில் துறை மற்றும் அது சார்ந்த துணை சேவைகளிலும் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இப்பகுதி மக்கள் வறுமை, வருமானமின்மை காரணமாகவும், தொழில் பயிற்சிகள் தொடர்பில் போதிய அறிவின்மை காரணமாகவும் போதிய ஆர்வம் காட்டாமல் இருக்கலாம்.
அவர்களை ஊக்கப்படுத்தி தனியார் முதலீடுகள், சுயதொழில் முயற்சிகளில் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.
அதற்கான பயிற்சிகளும், தொழில் திறன் விருத்தி கற்கை நெறிகளும் வழங்கப்பட வேண்டும்.
எதிர்கால தொழிலாளர்களின் வினைத்திறனை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கான கல்வி வாய்ப்புக்கள் மேன்மை படுத்தப்பட வேண்டும்.
வறுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகமாய் வாழும் பிரதேசங்களில் உள்ள மக்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தி அவர்களுக்கான வருவாயினை அதிகரித்தல் வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களை வெளியில் கொண்டுவர உதவும்.
தவிரவும் மாகாண அரசின், பிரதேச செயலகங்களின் உட்கட்டுமான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டங்கள் வறுமை அதிகமாக உள்ள பிரதேசங்களில் செயற்படுத்துவதும் மக்களை அதில் உள்வாங்கி அவர்களின் வருமானம் அதிகரிக்கும் படி செய்யலாம்.
இவை எல்லாம் பிரதேச செயலக மட்டதிலும், மாகாண அரசினாலும் கூட செய்ய கூடியதான விடயங்கள் ஆகும்.
சுதாகரன் பேரம்பலம்
இலங்கையில் வறுமை! தமிழர் பிரதேசங்களே முன்னிலை....
Reviewed by Author
on
December 25, 2016
Rating:

No comments:
Post a Comment