ஒபாமா மகள்களுக்கு புஷ் பிள்ளைகள் உணர்வுப்பூர்வ கடிதம்
ஒபாமாவின் மகள்கள் சாஷா மற்றும் மாலியாவுக்கு, அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்ஷின் மகள்கள் பார்பரா மற்றும் ஜென்னா புஷ் ஆகிய இருவரும் உணர்வுப்பூர்வ கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அதில் அமெரிக்க முன்னாள் முதல் குடிமகனின் வாரிசுகள் குழுவுக்கு இருவரையும் வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இக்கடிதம் டைம் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் சாராம்சம் பின்வருமாறு:
''நீங்கள் குழந்தையாக இருந்து, கருணைமிக்க மற்றும் எளிமையான இளம்பெண்களாக மாறுவதை நாங்கள் கண்கூடாகக் கண்டோம். அமெரிக்க முன்னாள் முதல் குடிமகனின் வாரிசுகள் குழுவுக்கு உங்களை வரவேற்கிறோம்.
இது நீங்கள் எதிர்பார்த்திராத தருணம். ஆனால் முன்னோக்கி செல்லத்தான் வேண்டும். உங்களின் புகழ்பெற்ற, பெருமை வாய்ந்த பெற்றோரின் நிழலுக்குப் பின்னால்தான் உங்களின் வாழ்க்கைக் கதை எழுதப்படும்.
உங்களின் கடந்த 8 ஆண்டுகளின் அனுபவத்தைக் கடைசி வரை நீங்கள் சுமந்துசெல்ல வேண்டி இருக்கும். (ஒபாமாவின் பதவிக்கலாலம் 8 ஆண்டுகள். 2008-ல் ஒபாமா பதவியேற்றபோது, அதிபராக இருந்த புஷ்ஷின் மகள்கள் பார்பரா மற்றும் ஜென்னா புஷ் இருவரும் இளம்பெண்ணாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினர்.)
இந்த எட்டு வருடத்தில் நீங்கள் நிறைய செய்திருக்கிறீர்கள். நிறைய பார்த்திருப்பீர்கள். சாஷாவுக்கு இப்போது 15 வயது. மாலியாவுக்கு 18. கடந்த இரண்டு காலகட்டத்தின் அனுபவங்களை உங்களின் இதயத்துக்கு அருகில் பத்திரமாக வைத்திருங்கள்.
வெள்ளை மாளிகையை உங்களின் வீடாக மாற்றிய ஊழியர்களுடமும், உங்களைப் பாதுகாத்த பணியாளர்களிடமும் தொடர்பிலேயே இருங்கள்.
மாலியா ஹார்வர்ட் கல்லூரி வாழ்க்கையில் காலடி எடுத்துவைக்க உள்ளாய். சாஷா வாஷிங்டன் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறாய். இருவரும் இந்த இளமைப் பருவத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.
உங்களின் இளம் தோள்களில் உலகத்தின் பாரம் இறங்கப்போவதில்லை. உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். நீங்கள் யாரென உணருங்கள். தவறு செய்யுங்கள். அதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
கல்லூரி வாழ்க்கையை அனுபவியுங்கள். உலகத்துக்கே தெரியும். நாங்கள் அதைச் செய்தோம். உண்மையான மற்றும் பாதுகாப்பான நண்பர்களை அருகிலேயே வைத்திருங்கள்.
வெள்ளை மாளிகையின் அனைத்து அழுத்தங்களிலும் வாழ்ந்து பழகியிருப்பீர்கள். நீங்கள் இதுவரை சந்தித்திராத மக்களிடம் இருந்துகூட, உங்கள் பெற்றோர் மீதான கடுமையான விமர்சனங்களைக் கேட்டிருப்பீர்கள்.
உங்களை நாட்டின் முதல் குடிமக்களாக ஆக்கியோர் பெற்றோர். அவர்கள் இந்த உலகத்தை மட்டும் உங்களுக்குக் காட்டவில்லை. அதைத் தந்திருக்கின்றனர். உங்களின் அடுத்த அத்தியாயத்தை இனிதே தொடங்குங்கள்''.
இவ்வாறு புஷ் சகோதரிகள், ஒபாமா சகோதரிகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
- Thehindu-
ஒபாமா மகள்களுக்கு புஷ் பிள்ளைகள் உணர்வுப்பூர்வ கடிதம்
Reviewed by Author
on
January 14, 2017
Rating:

No comments:
Post a Comment