முடியும் தருவாயில் விசாரணைகள் : 10வது எதிரிக்கு மனநிலை பாதிப்பாம்..! மன்றில் இளஞ்செழியன் கொடுத்த உத்தரவு
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட 12 பேரில் 10ம் எதிரிக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகநபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி ஜோய் மகாதேவன் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
10வது சந்தேகநபரின் விளக்கமறியல் காலத்தை நீடிக்கும்படி அரச சட்டத்தரணி நிசாந்த் முன்வைத்த மனு இன்று யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே குறித்த 10ம் சந்தேகநபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி இதை தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
2015ம் ஆண்டு 12ம் மாதம் 8ம் திகதி கைது செய்யப்பட்ட 10 வது எதிரியான கலகே பேடிக்கே பியவர்த்தன ராஜ்குமார் என்ற நபருக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.
ஆனால் குறித்த சந்தேகநபரின் விளக்கமறியல் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்படி அரச சட்டத்தரணி நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து குறித்த 10வது சந்தேகநபரின் விளக்கமறியல் காலத்தை மேலும் இரு மாத காலத்திற்கு நீடித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
எனினும் குறித்த வழக்கு விசாரணைகளுக்காக கடந்த மாதம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர் தனக்கு ஒருமாத காலம் விளக்கமறியலை நீடிக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.
சந்தேகநபரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி இளஞ்செழியன் பெப்ரவரி மாதம் 2ம் திகதி அதாவது இன்றுவரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று யாழ் மேல் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது அரச சட்டத்தரணி நிசாந்,
வித்தியா கொலை வழக்கு தொடர்பிலான விசாரணைகள் தற்போது முடிவடையும் நிலையில் இருப்பதாகவும், சந்தேகநபரின் விளக்கமறியலை மேலும் இரு மாதத்திற்கு நீடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
மேலும், சந்தேகநபர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி ஜோய் மகாதேவன்,
குறித்த சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் சம்பவம் நடைபெற்று 7 மாதங்களின் பின்னரே கைது செய்யப்பட்டார்.
இவர் வித்தியா கொலை தொடர்பில் கேள்வியுற்று அஞ்சலி செலுத்த அங்கு சென்றார் எனவும் மன்றில் தெரிவித்தார்.
வித்தியா கொலை வழக்கில் முன்னதாக கைது செய்யப்பட்ட 11 சந்தேகநபர்களும் இன்று ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது இவர்களை எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் றியால் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முடியும் தருவாயில் விசாரணைகள் : 10வது எதிரிக்கு மனநிலை பாதிப்பாம்..! மன்றில் இளஞ்செழியன் கொடுத்த உத்தரவு
Reviewed by Author
on
February 03, 2017
Rating:

No comments:
Post a Comment