விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாழ். மேல் நீதிமன்றில் சுமந்திரன்
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு ஒன்றுக்காக சட்டத்தரணியாக முன்னிலையாகி இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்.வட்டுக்கோட்டை சென் பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் ஜெயரட்ணம் தனுஷன் அமலன் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் இன்று யாழ். மேல் நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த கொலை சம்பவத்தில் ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டதுடன், இன்று நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றன.
இதன்போது ஒரு சட்டத்தரணியாக எதிரிகள் சார்பில் எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகி இருந்தார்.
இதனையடுத்து யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியை சூழவுள்ள பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், விசேட அதிரடிப்படை பாதுகாப்பும் வழங்கப்பட்டு இருந்தது. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகன தொடரணிக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சந்தேகத்தின்பேரில் ஐவர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
இந்த நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் எம்.ஏ. சுமந்திரனை இலக்கு வைத்தே கடந்த 13ஆம் திகதி படுகொலை சதித்திட்டம் தீட்டப்பட்டதாக அதிகாரபூர்வமான அறிக்கை ஒன்று பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கிளிநொச்சி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாழ். மேல் நீதிமன்றில் சுமந்திரன்
Reviewed by Author
on
February 02, 2017
Rating:

No comments:
Post a Comment