கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை மக்களிடமே மீளவும் வழங்குங்கள் - சுமந்திரன்
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை மக்களிடமே மீள வழங்குவதற்கு அரசாங்கம் முன் னர் வழங்கியிருந்த வாக்குறுதியை சரியாக நிறைவேற்றவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத் தியுள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் சபை ஒத்திவைப்பு வேளை முற்குறித்த பிரச்சினை தொடர்பாக பிரேரணை சமர்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு உரையாற்றிய அவர்,
வட மாகாணத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகளை 2009ஆம் ஆண்டிலே யுத்தம் முடிவுற்றதன் பின்னர் அரச படையினர் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளனர்.இராணுவத்தினர் இவ்வாறு சட்ட விரோதமான முறையில் அத்துமீறி அக் காணிகளில் தங்கியுள்ளதால், அக்காணிகளின் உரிமையாளர்களினால் தமது பூர்வீக இடங்களில் மீளக்குடியேற முடியாத நிலை உருவாகியுள்ளது.
எனவே இவ்வாறான காணிகளை அதன் பூர்வீக குடியிருப்பாளர்களிடம் மீளப் பெற்றுக் கொடுப்பதற்காக பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன, வடக்கு கிழக்கில் காணப்படுகின்ற இவ்வாறான சொந்தக் காணிகளில் அம்மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறிவந்தமையால் தமிழ் மக்கள் அவருக்கு ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஈராண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், குறிப்பிடத்தக்க சிறியளவு காணிகளே இது வரையில் விடுவிக்கப்பட்டு அதில் அம்மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதுடன், இன் னமும் பெருமளவான காணிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழே காணப்படுகின்றன.
இதேவேளை 2012ஆம் ஆண்டிலே அப்போதைய அரசாங்கமானது சட்டவிரோத தடுப்பு முகாம் மற்றும் மெனிக்பாம் முகாம் என்பவற்றினை மூடிவிட்டு முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட மக்கள் சீனிமோட்டைப் பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிப்பதாக அரசாங்கமானது முன்னர் வாக்குறுதியளித்திருந்தது.
எனினும் இதுவரையில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமையினால் அம் மக்கள் தமது சொந்த நிலங்களை மீள பெற்றுத்தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, அம்மக்களது காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த உயரிய சபை யின் ஊடாக வேண்டுகோள் விடுக்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை மக்களிடமே மீளவும் வழங்குங்கள் - சுமந்திரன்
Reviewed by Author
on
February 08, 2017
Rating:
Reviewed by Author
on
February 08, 2017
Rating:


No comments:
Post a Comment