அண்மைய செய்திகள்

recent
-

அமரர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களுக்கு தமிழீழத்தின் அதியுயர் 'மாமனிதர்' விருது


தமிழீழத்தின் முன்னணிப்பாடகராக திகழ்ந்த எஸ். ஜி. சாந்தன் அவர்கள் சாவடைந்த செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் ஆறாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனது இசை ஞானத்தால் மக்களை பரவசப்படுத்தி எழுச்சியை ஏற்படுத்திய குரல் ஓய்ந்துவிட்டது. தாயகப்பாடல்களையும், பக்திப்பாடல்களையும் பாடுவதிலும், நடிப்பதிலும் வல்லவராக இருந்தவர். தொடக்ககாலப்பகுதியில் இசைக்குழுவொன்றிலும் பாடிக்கொண்டிருந்தார்.

“அரிச்சந்திர மயானகாண்டத்தில்” தன் சிறப்பான நடிப்பால் பார்வையாளர்களை நெகிழச்செய்தவர். 1990 இல் “இந்தமண் எங்களின் சொந்தமண்.. இதன் எல்லைகள் மீறி யார் வந்தவன்” என்ற பாடலூடாக தமிழீழ விடுதலைக்கு உரம்சேர்க்கும் கலைப்பயணத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர்.

அந்நாள்முதல் இறுதிவரை தாயகவிடுதலைக்காக இரவுபகல் பாராது அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கலைஞன். அனைத்து விழாக்களிலும், எழுச்சியூட்டும் அத்தனை நிகழ்வுகளிலும் தன்னை இணைத்து செயற்பட்டவர்.

புலம்பெயர் நாடுகளுக்கு இசைச்சுற்றுப்பயணம் மேற்கொண்ட குழுவிலும் ஒருவராகி, பல விடுதலைப்பாடல்களைப்பாடி மக்களிடம் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றதோடு, எழுச்சியையும் ஏற்படுத்தியவர் சாந்தன்.

தன் தனித்துவக்குரலால் தாயகவிடுதலைக்கு வலுச்சேர்த்த பாடகர் சாந்தன் பலதடவைகள் தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டவர்.

தாயக விடுதலையின் அவசியத்தை உணர்ந்து தனது விடுதலைப் பயணத்தில் மேஜர் கானகன், கப்டன் இசையரசன் என இவரது இரண்டு புதல்வர்களை மாவீரர்களாக உவந்தளித்த மாவீரத்தந்தை.

அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று சாவடைந்த செய்தி அறிந்து உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழ்மக்கள் அனைவருக்கும் துயரமளிப்பதாகவே உள்ளது.

அன்னாரின் ஆன்மா அமைதியுற எங்கள் இறுதிவணக்த்தை தெரிவித்துக் கொள்வதுடன், இவரது இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தன்னுடைய ஈர்ப்புமிக்ககுரலில் பாடிய எழுச்சிமிகு பாடல்களினூடாக சாந்தன் அவர்கள் அனைத்து உள்ளங்களிலும் காலம்காலமாய் வாழ்ந்துகொண்டிருப்பார்.

கலைஞன் எஸ். சாந்தன் அவர்களின் இனப்பற்று, விடுதலைப்பற்று ஆகியவற்றிற்கு மதிப்பளித்தும் எமது தேசத்துக்கு அவர் வழங்கிய உயரிய கலை பங்களிப்பை கௌரவித்தும் “மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நாம் பெருமையடைகிறோம்.





அமரர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களுக்கு தமிழீழத்தின் அதியுயர் 'மாமனிதர்' விருது Reviewed by Author on February 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.