நம்பியவர்கள் துரோகம் இழைத்தால் நம்பிக்கையால் என்ன பயன்!
இனப் படுகொலையில் இருந்தும் மனிதப் பேரவலத்தை சந்தித்தும் மீண்டெழுந்த தமிழினம் நம்பிக்கையை ஒரு போதும் கைவிட்டு விடக்கூடாது என கனடா நாட்டின் ரொறன்ரோ மாநகரின் மேயர் ஜோன் ரொரி தெரிவித்துள்ளார்.
விசேட பயணத்தை மேற்கொண்டு சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவுக்கு வருகை தந்த ஜோன் ரொரி, போரினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜோன் ரொரியின் விசேட உரை தமிழ் மக்களுக்கு ஆறுதல் தரவல்லது. அதிலும் ரொறன்ரோ மாநகரின் மேயராக இருக்கக்கூடிய ஒருவர் வன்னி யுத்தத்தை இன அழிப்பாகவும் மனிதப் பேரவலமாகவும் கூறியிருப்பது,
வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவராவது எங்களின் அவலத்தைப் புரிந்து வைத்துள்ளார் என்பதனூடாக எங்களை ஆற்றுப்படுத்துகிறது.
அதேவேளை நம்பிக்கையை இழந்து விடாதீர்கள் என்று அவர் கூறியிருப்பதும் கூற வேண்டிய வார்த்தையாயினும் எங்ஙனம் நம்பிக்கையோடு இருப்பது என்பதுதான் நம்மிடம் எழுந்துள்ள மிகப்பெரும் ஐயம்.
கவிஞர் கண்ணதாசன் கூறியதுபோல “...காஞ்சுபோன பூமியயல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே வற்றிப் போய்விட்டால்...
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா இடிபோல ... வந்தால் மடி தாங்குமா?
இந்தப் பாடல் வரிகள்தான் நம் நினைப்புக்கு வருகிறது.
ஆம், எங்கள் இனத்தை சங்காரம் செய்யும் கொடும் போரை இலங்கை அரசு வன்னியில் நடத்தியது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்தது.
மிகப்பெரும் மனிதப் பேரவலத்தைச் சந்தித்த தமிழ் மக்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. விழுந்தாலும் எழுவோம் என்ற அசையாத நம்பிக்கை எங்களிடம் இருந்தது.
அதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இலங்கைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தோம். வடக்கு மாகாணத்தில் தமிழர் அரசு மலர வழிவகுத்தோம்.
ஆனால் நாங்கள் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பி வைத்த எங்கள் அரசியல் தலைமை எங்களுக்கு நடந்த கொடூரத்தையெல்லாம் மறந்து,
பதவிக்காக அரசுடன் இணைந்து எங்களை விலைபேசிய போது நாங்கள் நம்பிக் கையை இழக்க வேண்டியதாயிற்று.
என்ன செய்வது! முள்ளிவாய்க்காலில் இருந்து நந்திக்கடல் வழியே வெளியேறிய போதும்; முட்கம்பி வேலிக்குள் மூன்று இலட்சம் மக்களாக எங்களை அடைத்த போதும்; நடுநிசியில் எங்கள் உறக்கம் கலைத்து உறவுகளை இழுத்துச் சென்ற போதும் மன உறுதியையும் நம்பிக்கையையும் இழக்காத நாம் இன்று அதை அடியோடு இழந்துவிட்டோம்.
இலங்கை அரசுக்கு கால அவகாசம் கொடு, சர்வதேச விசாரணை முடிந்து விட்டது.
விடுதலைப் புலிகளும் போர்க்குற்றம் புரிந்துள்ளனர் என எங்கள் வாக்குகளைப் பெற்று எம்பிப் பதவியை எடுத்தவர்களே கூறும் போது, தமிழர்கள் எங்ஙனம் நம்பிக்கையுடன் வாழ்வது?
ஆம், வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடைந்த காய்ந்த பூமி அந்த நதியே வற்றி விட்டால் எப்படி ஆறுதல் அடைய முடியாதோ அதுபோலத்தான் ஈழத் தமிழர்களாகிய நாமும் என்பதை ரொறன்ரோ மேயருக்கு பணிவோடு சொல்லித்தானாக வேண்டும்.
நம்பியவர்கள் துரோகம் இழைத்தால் நம்பிக்கையால் என்ன பயன்!
 Reviewed by Author
        on 
        
March 22, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 22, 2017
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
March 22, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 22, 2017
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment