தலைமன்னார் இராமர் அணையில் மீன்பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி மறுப்பு-கடல் தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு அவசர கடிதம் அனுப்பி வைப்பு.
பாராம்பரியமாக தலைமன்னார் இராமர் அணையில் தொடர்ச்சியாக மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்த தலைமன்னார் மீனவர்களை கடற்படை அதிகாரிகள் அவ்விடத்தில் பிரவேசிக்க தடை விதித்துள்ளமையினை நீக்கக்கோரி மட்டுப்படுத்தப்பட்ட தலைமன்னார் மேற்கு சென்.லோறன்ஸ் மீனவர் கூட்டுறவுச்சங்கம் கடல்தொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு நேற்று சனிக்கிழமை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
.
-குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,
-தலைமன்னாரானது மன்னார் நிலப்பரப்பின் ஒரு பெரிய பகுதியாகும்.இது தலைமன்னார் கிழக்கு,மேற்கு,வடக்கு,தெற்கு என பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் 2000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடற்தொழிலை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
-தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஸ்கோடி எனும் பிரதேசம் 32 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது.இவ் இரண்டு கிராமங்களுக்கும் இடைப்பட்ட 25 ற்கும் மேற்பட்ட சிறிய சிறிய தீவுகளையே இராடர் அணை(மணவ் திட்டுக்கள்) என அழைக்கின்றனர்.
-இதில் 16 மணல் திட்டுக்கள் இலங்கைக்கச் சொந்தமானதாக இருக்கின்றது.
இத் தீவுகளில் 500 வருடங்களுக்கு முன்பிருந்து எமது முன்னோர்கள் கடற்றொழில் செய்து வருகின்றனர்.
எமது முன்னோர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுடன் தங்கியிருந்து குடிசை அமைத்து இத் தீவுகளில் இருந்து தொழில் செய்து வந்தனர்.
குறிப்பாக ஞாயிறு தினம் எமது விடுமுறையாக காணப்படுவதினால் சனிக்கிழமை மாலை தமது குடும்பத்தினருடன் கருவாடுகளையும் கட்டிக்கொண்டு கரைவந்து சேர்ந்து அவற்றை விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு தமது வாழ்வாதாரத்தை நடாத்தி வந்தனர்.
இவ் இராமர் அணையில் இருந்து கட்டுமரத் தொழில் , அடசல்வலை, விடுவலை, பாச்சுவலை,வலைச்சல்வலை போன்ற தொழில்களையும் அத்துடன் இங்கு தரித்திருந்து வலைகளைக் காயப் போடுதல், கிழிந்த வலைகளைப் பொத்துதல், வலைகளை துப்பரவு செய்தல், இயந்திரங்கள் பழுதடையும் போது பாதுகாப்பாக அவ்விடத்தில் தரித்து நிற்றல், தொழிலில் ஏற்பட்ட கலைப்பைப்போக்க ஓய்வெடுத்தல், பொருத்தமான நேரம் வரை மீன்பிடிக்க மீனுக்காக காத்திருத்தல் போன்ற செயற்பாடுகளை இவ் மணல் திட்டுக்களில் மேற்கொண்டு வந்தனர்.
இவ்வாறு பாரம்பரியமாக தொழில் செய்து வந்த இராமர் அணையில் அன்மையில் கடற்படை அதிகாரிகள் இராமர் அணையில் இருந்து இனிமேல் மீன் பிடிக்கக் கூடாது.
அங்கு தங்கியிருந்து தொழில் செய்யக் கூடாது எனக்கூறியமை எமது மக்களை மனதளவில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியமையுடன் எமது வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
இவ்வளவு காலமாக இப்படி ஒரு தீர்மானத்தினை கடற்படை அதிகாரிகள் நிறைவேற்றியதே இல்லலை.
இதனால் எமது பிரதேசம் சற்று பதட்ட உணர்வுடனேயே காணப்படுகின்றது.
கடற்படை அதிகாரிகளின் இத் தீர்மானத்தினால் எமது தலைமன்னார் பிரதேசத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் பின்வருமாறு.
1. இராமர் அணையிலிருந்து தலைமன்னார் பிரதேசம் 3கிமீ தொடக்கம் 16 கிமீ தொலைவைக் கொண்டது. இதனால் தொழிலுக்கு அடிக்கடி வந்து போவதினால் எரிபொருள் செலவு அதிகரிக்கும்.
2. பொருத்தமான சந்தர்ப்பத்தில் மீன்களைப் பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். அதாவது மீனுக்காக அணையில் காத்திருந்து மீன்களைப் பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.(வலைச்சல் வலை பாச்சுவலை, அடசல்வலை)
3. எமது கடல் உபகரணங்கள் சொத்துக்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உதாரணமாக பாச்சுவலையினை இராமர் அணையில் இருந்து அதனுடைய கொடிகளைக் கண்காணிக்காது விடின் பலர் திருடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதனால் எமக்கு சொத்து இழப்பு ஏற்படுவதினால் மனச் சோர்வு ஏற்படுகின்றது.
4. ஒரு அடசல் வலைத் தொழில் செய்ய 25 தொழிலாளிகள் தேவைப்படுகின்றனர். இவர்களைக் கொண்டு இராமர் அணையின் அருகாமையில் மீன்களைக் கண்டாலும் அணையில் இரங்கி வலை இழுத்து மீன் பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் இதனால் பல குடும்பங்களின் தொழிலில் பாதிப்பு ஏற்படுகின்றது.
5. படகு அல்லது இயந்திரம் பழுதடையும் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பாக தரித்திருக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகின்றது. இதனால் உயிராபத்துக்கூட நேரிடலாம்.
6. 80 வீதமான மான தொழிலாளிகள் மனித வலுவைக் கொண்டு தொழில் நடவடிக்கைகளில் இவ் இராமர் அணையில் மேற்கொள்ளுகின்றனர். குறிப்பாக 100க்கு மேற்பட்ட தெப்பத் தொழிலாளிள் 5 அடசல் வலைத் தொழிலாளிகள் 400க்கும் மேற்பட்ட பிலாஸ்ரிக் படகு உரிமையாளர்கள் போன்றோர் இவ் அணையையே நம்பியுள்ளனர்தமது தொழில் நடவடிக்கையிலும்ஈடுபட்டு வருகின்றனர். கடற்படை அதிகாரிகளின் தடையினால் இத்தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்படும்.
7. தலைமன்னார் பிரதேசத்திற்கு பொருளாதாரப் பின்னடைவு ஏற்படும். குறிப்பாக எமது வாழ்வாதாரத்தில் தனிநபர் வருமானத்தில் எமது பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகள் கிராமிய வளர்ச்சி அனைத்திலும் பாதிப்பும் பின்னடைவும் ஏற்படும்.
எனவே மேற்குறித்த விடையங்களையும்,எமது பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு கடற்படை அதிகாரிகள் விடுத்துள்ள தடைகளை நீக்கி இலங்கை நாட்டுக்குச் சொந்தமான 18 கிலோ மிற்றர் நிலப்பரப்பிற்கு உற்பட்ட இராமர் அணைப்பகுதியில் தொழில் செய்ய ஏற்படுத்தப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-மன்னார் நிருபர்-
தலைமன்னார் இராமர் அணையில் மீன்பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி மறுப்பு-கடல் தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு அவசர கடிதம் அனுப்பி வைப்பு.
Reviewed by Author
on
May 15, 2017
Rating:

No comments:
Post a Comment