நிபந்தனைகளுடன் மட்டுமே பேச்சு வார்த்தை: முதன் முறையாக இறங்கி வந்த வடகொரியா....
அமெரிக்கா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு இடையில் பல மாதங்களாக நிலவி வந்த பனிப் போர் முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் அனுமதியின்றி எந்தவித அணு ஆயுத சோதனையும் மேற்கொள்ள கூடாது என்று அமெரிக்கா கறார் காட்டியது.
ஆனால் வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜோங் அமெரிக்காவின் பேச்சுக்கெல்லாம் கட்டுப்பட முடியாது. எங்கள் பாதுகாப்புக்காக நாங்கள் எந்தவித சோதனை வேண்டுமானாலும் நடத்துவோம் என்று பதிலடி கொடுத்தது உலக நாடுகளை உன்னிப்பாக கவனிக்க வைத்தது.
ஐ.நா மற்றும் அமெரிக்கா எதிர்ப்பை மீறி வட கொரியா, கிட்டத்தட்ட ஐந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தியது. இதனால் அமெரிக்காவின் கோபம் உச்சக்கட்டத்துக்கு சென்றது.
டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் வேகம் எடுத்தன.
கொரிய தீபகற்பத்துக்கு அமெரிக்கா, அதன் ராணுவ கப்பல்கள் துருப்புகளை அனுப்புவதும், பதிலுக்கு வட கொரியா தொடர் அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதும் என ஆசியா எங்கும் புகைந்த நெருப்பு, உலகம் முழுக்க கனன்று கொண்டது.
ஒரு கட்டத்தில், இரு நாடுகளுக்கும் இடையே நடந்துவரும் நடவடிக்கைகள் மூன்றாம் உலகப் போருக்கு வித்திட்டு விடுமோ என்ற கவலையும் உலக நாடுகளுக்கு எழுந்தது.
இந்நிலையில்தான் வட கொரியாவின் வெளியுறவுத்துறையில் உள்ள முக்கிய அதிகாரிகளில் ஒருவரான சோ சன் ஹுய், 'அமெரிக்கவுடன் சுமூகமாகப் போவதற்கு பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார். ஆனால், அதற்கான சரியான நிபந்தனைகள் இருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையில் நிலவி வரும் பனிப் போர் முடிவுக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
மேலும், தென் கொரியாவில் புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி மூன் ஜேவும், வட கொரிய ஜனாதிபதியான கிம் ஜோங் உன்-ஐப் பார்ப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதும் முக்கிய முடிவாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.
நிபந்தனைகளுடன் மட்டுமே பேச்சு வார்த்தை: முதன் முறையாக இறங்கி வந்த வடகொரியா....
Reviewed by Author
on
May 14, 2017
Rating:

No comments:
Post a Comment