திரிசங்கு நிலையில் வடக்கு முதலமைச்சர்!
வடக்கு மாகாணசபையின் அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும், அவை தொடர்பான விசாரணையின் முடிவுகளும், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அமிலப் பரிசோதனையாக மாறியிருக்கிறது.
சபை உறுப்பினர்களின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளைப் புறக்கணிக்க முடியாமல், தானே நியமித்த அமைச்சர்களுக்கு எதிராக, விசாரணைக் குழுவொன்றை நியமிக்க வேண்டிய நிலை முதலமைச்சருக்கு ஏற்பட்டிருந்தது.
அரசியல் ரீதியாக இது அவரது முதல் தோல்வி.ஆனால், வெளிப்படைத்தன்மையான நிர்வாகம், பொறுப்புக்கூறலில் உறுதியாக இருப்பதையும் அவரது இந்த முடிவு காட்டி நின்றது,
விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டதும், அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவது என்பது முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு மிகப்பெரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்துவது, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஆகிய இரண்டு விடயங்களிலும், தீர்க்கமான ஒரு முடிவுக்கு வர முடியாதவராக முதலமைச்சர் இருக்கிறார் என்பதை அவர், வடக்கு மாகாணசபையில் ஆற்றிய உரை தெளிவாக்கியிருக்கிறது.
விசாரணைக்குழு, அதன் அறிக்கை, அடுத்த கட்டம் இந்த மூன்று விடயங்களிலும், முதலமைச்சருக்கு குழப்பங்கள் இருப்பதாக தெரிகிறது.பொதுவாகவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விசாரணைக் குழுக்களை அமைக்கும் போது, அதன் நம்பகத்தன்மையும், முக்கியத்துவமானது.
விசாரணைக்குழுக்களின் உறுப்பினர்கள் பக்கசார்பற்றவர்களாகவும், நேர்மையானவர்களாகவும், அதேவேளை, முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டது போன்று, பிறரைக் குற்றம்சாட்டத் தகுதியானவராகவும் இருக்க வேண்டும்.
இவையெல்லாம் பொதுவாக ஒரு விசாரணைக்குழுவிடம் எதிர்பார்க்கப்படும் விடயங்கள்.அவ்வாறான ஒரு விசாரணைக்குழுவையே, முதலமைச்சர் நியமித்தாரா என்பது முதலாவது விடயம்.
ஏனென்றால், வடக்கு மாகாணசபைக்கு எதிராக நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில், குறித்த விடயம் தொடர்பாக எதிர்த்தரப்பு சார்பில் சட்டத்தரணியாக முன்னிலையாகும் ஒருவர், அதேவிடயம் தொடர்பான விசாரணையில் நீதிபதியாக பங்கேற்றிருக்கிறார் என்று அமைச்சர் ஐங்கரநேசன் கூறியிருக்கிறார்.
அவர் கூறிய விடயம் சுன்னாகம் நிலத்தடி நீர் வழக்கு விவகாரமாக இருக்கலாம். இந்த விடயத்தில், அமைச்சர் ஐங்கரநேசன் மீது குற்றம்சாட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்து, விசாரணைக்குழுவில் இடம்பெற்றிருந்த ஓர் உறுப்பினர், அரச சேவையில் இருந்த காலத்தில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் தான். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத போதிலும், அவர் கூட இதுபோன்ற ஒரு சூழலை எதிர்கொண்டவர் தான் என்பதையும் மறந்து விடலாகாது.
நம்பகமான ஒரு விசாரணைக் குழுவில் இதுபோன்ற பாதகமான அம்சங்கள் இருப்பது ஒட்டுமொத்த முயற்சியையும் வீணடித்து விடும். முதலமைச்சர் அமைத்துள்ள விசாரணைக்குழுவில், இருக்கக் கூடிய இன்னும் பல ஓட்டைகள் வரும் நாட்களில் வெளிவரக் கூடும்.
அடுத்து விசாரணைக்குழுவின் அறிக்கை, முற்றிலும் சரியானதா- நம்பகமானதா என்ற கேள்வி முதலமைச்சருக்கே இருப்பதாக தெரிகிறது.
இந்த விசாரணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர்கள் கேள்வி எழுப்பியிருந்தாலும், விசாரணைக் குழு நியாயமான விசாரணைகளை நடத்தியிருந்தது என்றே முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.
ஆனாலும், அவரும் கூட, அறிக்கையில் சில தகவல்கள் தவறாக இடம்பெற்றுள்ளன என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். தான் பங்கேற்காத கூட்டம் ஒன்றில், பங்கேற்றதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
அதேவேளை, அவையில் விளக்கமளித்த, அமைச்சர் ஐங்கரநேசன், தாம் கூறிய விடயங்கள் சிலவற்றை விசாரணைக்குழு கவனத்தில் எடுக்கவில்லை என்றும், கூறாதவற்றை கூறியதாக குறிப்பிட்டிருப்பதாகவும், குற்றம்சாட்டியிருக்கிறார்.
இந்தக் கட்டத்தில், விசாரணைக் குழுவின் அறிக்கை நூற்றுக்கு நூறு வீதம் சரியானது என்பதை உறுதிப்படுத்தக் கூடிய நிலையில், முதலமைச்சரும் இல்லை என்பதே உண்மை.
விசாரணைக் குழு ஒன்றின் அறிக்கையில், தரவுகளும், தகவல்களும், முற்றிலும் சரியானதாக இருக்க வேண்டும். ஏனென்றால், குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போது, குற்றம்சாட்டப்படும் ஒருவர், தன்னை நிரபராதி என்று கூறித் தப்பித்துக் கொள்வதற்கு இதுபோன்ற தவறுகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதேவேளை, இதுபோன்ற தவறுகளின் காரணமாக, நிரபராதியான ஒருவர், குற்றவாளியாக்கப்படும் நிலையும் ஏற்படக் கூடும். ஓய்வுபெற்ற நீதிபதிகளான இரண்டு பேர் விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்தும், சுட்டிக்காட்டத்தக்க தவறுகள் சில அறிக்கையில் இருப்பதாக முதலமைச்சரும், அமைச்சரும் கூறியிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம்.
இந்த அடிப்படையில் பார்க்கும் போது, அமைச்சர்களுக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், முற்றிலும், தவறானவை என்ற முடிவுக்கு வரமுடியாவிடினும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை தமது அறிக்கையில் எந்த வழுக்களுமின்றி முன்வைக்கும் வகையில் விசாரணைக் குழு செயற்பட்டிருக்கவில்லை என்றே கருத வேண்டியிருக்கிறது.
இப்படியான நிலையில் தான், இந்த விசாரணை அறிக்கையை வைத்து அடுத்த கட்டம் குறித்து தீர்மானிப்பதில் முதலமைச்சர் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறார்.ஓய்வுபெற்ற நீதியரசரான முதலமைச்சர், இந்த விடயத்தில் எந்த தவறையும் தான் இழைத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.
ஏனென்றால், நீதிமன்றத்தில் அவர் முன்னர் அளித்த தீர்ப்புகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தால் அது அவரது தனிப்பட்ட புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருக்காது.
அரசியல் வாழ்வில் அவர் தவறான முடிவை எடுத்தால், அது அவருக்குப் பாதகமாகவே அமைந்து விடும்.இந்த விடயத்தில் தானே முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்டவர் என்பதை, முதலமைச்சர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
ஏனென்றால் இது அவர் நியமித்த விசாரணைக் குழு. அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அவருக்கே அதிகாரமும் இருக்கிறது.இருந்தாலும், குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர்கள் மீது அவரால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
அவர்களை பதவியில் இருந்து விலகுமாறு கோர முடியவில்லை.ஏனென்றால், அவர்கள், முதலமைச்சரால் நியமிக்கப்பட்டவர்கள். தாமே நியமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது, ஒருவகையில் நீதியான செயற்பாடு என்று வெளிப்படையாக கூறப்பட்டாலும், இன்னொரு பக்கத்தில், அவருக்கும் இதில் பொறுப்பு உள்ளது தானே என்ற விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டி வரும்.
முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும், குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சர்களினது, கருத்துக்களை அறிந்தும், சபை உறுப்பினர்களின் கருத்துக்களை அறிந்துமே முடிவெடுப்பதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
விசாரணைக் குழு, மற்றும் அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகள் சிலவற்றினால், ஒட்டுமொத்த விசாரணை அறிக்கையும் தவறு என்று சுட்டிக்காட்டப்படக் கூடிய நிலை உள்ளதைக் கருத்தில் கொண்டே, அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாத நிலை முதலமைச்சருக்கு இருக்கிறது.
இன்னொரு பக்கத்தில், இந்த விசாரணைக் குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துவதற்கு முதலமைச்சர் தயங்குகிறார். அறிக்கையை பகிரங்கப்படுத்துவது மாகாணசபைக்கே களங்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறியிருக்கிறார்.
அதனால், ஊடகங்கள் அனுமதிக்கப்படாத மூடிய அறைக்குள் விவாதித்து இந்த விவகாரத்துக்கு முடிவெடுக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
முதலமைச்சரின் இந்தக் கோரிக்கையானது உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மை என்ற கொள்கைக்கு முரண்பாடானது. உண்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் என்பது பொதுவாழ்வில் உள்ள அனைவருக்கும் பொதுவானது.
எனவே நீதியானதாக மேற்கொள்ளப்பட்ட ஒரு விசாரணை என்றால், அந்த அறிக்கையை பகிரங்கப்படுத்துவதில் தவறில்லை.
இந்த விசாரணைக்குழு முதலமைச்சர் தனக்கு ஆலோசனை கூறுவதற்காக அமைத்துக் கொண்டது தானே தவிர, வடக்கு மாகாணசபையால் அமைக்கப்பட்டதல்ல.
அந்தக் காரணத்தை வைத்து, அறிக்கையைப் பகிரங்கப்படுத்தாமல் விடுவதற்கு முதலமைச்சர் முயற்சிப்பதாக தெரிகிறது.ஆனால், 2010ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்துள்ளதா என்று தமக்கு ஆலோசனை கூறுவதற்காக அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கையை அவரே பகிரங்கப்படுத்தினார்.
அதன் அடிப்படையில் தான் இலங்கைக்கு எதிரான நகர்வுகள் ஜெனீவாவில் முன்னெடுக்கப்பட்டன.மத்திய அரசாங்கம் அமைத்த விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், முதலமைச்சரே பலமுறை குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.
அப்படியிருக்கும் போது, இந்த விசாரணை அறிக்கையை மாத்திரம், அவர் பகிரங்கப்படுத்தாமல் வைத்திருப்பது நியாயமற்றது. அதைவிட, அறிக்கை முதலமைச்சரின் கையில் இருந்த போதே அது ஊடகங்களுக்கு கசிந்திருந்தது.
இப்போது அறிக்கை சபை உறுப்பினர்களின் கைகளுக்கும் வந்து விட்ட நிலையில் அது நிச்சயம் வெளிவந்தே தீரும்.
அவ்வாறானதொரு நிலையை தவிர்ப்பதற்காக, வெளிப்படைத்தன்மையுடனேயே இருக்கிறோம் என்பதை நிரூபித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை முதலமைச்சர் தவற விடுவது அரசியல் ரீதியாக அவருக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.
அறிக்கையைப் பகிரங்கப்படுத்துவதால் வடக்கு மாகாணசபைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்ற முதலமைச்சரின் கருத்து அபத்தமானது.
ஏனென்றால், வடக்கு மாகாணசபையின் புனிதத்தன்மைக்கு அதன் உறுப்பினர்களும், அமைச்சர்களுமே பொறுப்பு. அந்த எதிர்பார்ப்பே தமிழ் மக்களிடம் இருந்தது,
விசாரணை அறிக்கை முற்றிலும் சரியானதாக இருந்தால், நடந்துள்ள தவறுகள் அனைத்தும் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். எங்கெங்கு தவறுகள் நடந்துள்ளன என்பதை அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.
தவறுகளையும், அறிக்கைகளையும் மூடி மறைக்கின்ற போது தான், அது மேலும் மேலும் விஸ்வரூபம் எடுக்கும்.
தவறுகளைக் களைவதற்கான ஆரம்ப நடவடிக்கையை எடுக்காது போனால், வடக்கு மாகாணசபை மேலும் மேலும் தலைகுனிவுகளைச் சந்திக்கும். அது, ஆளுனர், மத்திய அரசின் தேவையற்ற தலையீடுகளுக்கும் வழி வகுக்கும்.
தவறு செய்தவர்கள், வெளிப்படுத்தப்படுவார்கள் என்ற அச்சம் பொதுவாழ்வுக்கு வரும் அனைவருக்கும் இருக்க வேண்டும். அப்போது தான், அவர்கள் நிலை மாறாமல் செயற்படுவார்கள்.
தவறுகள் ஒளிக்கப்படும் என்ற நிலையை முதலமைச்சர் நீடிக்க அனுமதித்தால், அது நேர்மையான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சி என்ற எதிர்பார்ப்பைக் கொண்டுள்ள மக்களுக்கு பேரிடியாகவே அமைந்து போகும்.
முதலமைச்சரைப் பொறுத்தவரையில், இந்த விவகாரத்தில் முடிவுகளை எடுப்பதில் நிறையவே யோசிக்கிறார்.
அவர் எடுக்கக்கூடிய முடிவுகள் ஒவ்வொன்றும் பின் விளைவுகளைத் தரக் கூடியவையே.எனவே தான், அவர், சரியான முடிவை எடுப்பதற்கு குழப்பமான சூழ்நிலைகள் பலவற்றைத் தாண்ட வேண்டிய நிலையில் இருக்கிறார்.
சுருங்கச் சொல்லின், குற்றஞ் சாட்டப்பட்ட அமைச்சர்களை விட, திரிசங்கு நிலையில் இருப்பது முதலமைச்சர் தான்.
திரிசங்கு நிலையில் வடக்கு முதலமைச்சர்!
Reviewed by Author
on
June 12, 2017
Rating:

No comments:
Post a Comment