தமிழ், முஸ்லிம் மக்களை அடிமைகளாக்க முயற்சி! - கஜேந்திரகுமார் சாடல்
இலங்கை அரசாங்கம் பிரித்தாளும் தந்திரத்தினை கச்சிதமாக மேற்கொண்டு தமிழ், முஸ்லிம் மக்களை பிரிப்பதன் மூலம் இரண்டு இனங்களையும் அடிமைகளாக வைத்திருக்கும் செயற்பாட்டை கபடத்தனமாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
இதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் தலைவர்களும் துணைபோய்க் கொண்டு இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தின் காயத்திரி கிராமத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் மக்கள் சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வட-கிழக்கு இணைப்பு என்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுத் தரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் தலைமைகள் தயாரில்லை. காரணம் முஸ்லிம் மக்களின் மூன்றில் இரண்டு பெரும் பான்மை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் காணப்படுகின்ற போதிலும் கிழக்கு மாகாணத்தில் தான் முஸ்லிம் மக்கள் விகிதாசாரத்தில் கூடுதலாக காணப்படுகின்றனர்.
இதனை விட்டுக் கொடுக்க அவர்கள் ஒரு காலத்திலும் தயாராகவில்லை. இதனை விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. தமிழர்கள் வட-கிழக்கு இணைப்பை கோருகின்ற நிலையில் இந்த சூழ்நிலையை விளங்கிக் கொண்ட சிங்கள தலைவர்கள், கிழக்கில் முஸ்லிம் மக்களுடன் இணைந்து கொண்டு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களை பலவீனப்படுத்தி வருகின்றனர்.
இந்த சிங்கள பேரினவாத சக்திகளின் சூழ்ச்சியில் சிக்காது தமிழ்,முஸ்லிம் மக்களின் தலைமைகள் சிந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. தமிழ் மக்களை பொறுத்த மட்டில் எங்களது தாயகக் கோட்பாட்டை கைவிட முடியாது. அவ்வாறு கைவிட்டால் தமிழ் மக்களின் இருப்பை கைவிடுவதாகதான் இருக்கும்.
இந்நிலையில் வடக்கு-கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் மக்கள் தொடர்ந்தும் தடையாக இருந்தால் கிழக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசங்களை தவிர்த்து தமிழ் பிரதேசங்களை ஒன்றிணைக்க வேண்டும். யுத்த காலத்தில் அரசாங்கம் முஸ்லிம் மக்களுடன் இணைந்து தமிழ் மக்களை பலவீனப்படுத்தியது.
தற்போது முஸ்லிம் மக்கள் பொருளாதாரத்திலும் இன விகிதாசாரத்திலும் உயர்ந்த நிலையில் காணப்படுகின்ற நிலையில் இன்று முஸ்லிம் மக்களை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை தமிழ்,முஸ்லிம் புத்திஜீவிகள் விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டும் என கஜேந்திரகுமார் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், முஸ்லிம் மக்களை அடிமைகளாக்க முயற்சி! - கஜேந்திரகுமார் சாடல்
Reviewed by Author
on
June 11, 2017
Rating:

No comments:
Post a Comment