அண்மைய செய்திகள்

recent
-

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று புதன் கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடும் குடும்பங்களின் சங்கம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியவை இணைந்து மன்னாரில் இன்று (30) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இன்று புதன் கிழமை(30) காலை 10.00 மணியளவில் மன்னார்-தலைமன்னர் பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இருந்து கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமானது.
-கருப்பு கொடிகளை கைகளில் ஏந்தியவாறும்,பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் பேரணியில் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கவனயீர்ப்பு ஊர்வலம் மன்னார் பொது வைத்தியசாலை வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.

அதனைத் தொடர்ந்து மன்னார் பஸார் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களினால் அமைதி போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

-குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்,ஈ.பி.ஆர்.எல். எப்.அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் , மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க் மற்றும் அருட்தந்தை ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சுமார் நூறு பேர் வரை மட்டுமே கலந்து கொண்டதோடு,மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பணிகளை மேற்கொண்டு வரும் ஒரு சில அமைப்புக்கள் இன்றைய தினம் மன்னாரில் இடம் பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காது தமது சுய நலத்திற்காக இன்று புதன் கிழமை வேறு மாவட்டத்தில் இடம் பெறும் போராட்டத்திற்கு மன்னாரில் இருந்து மக்களை அழைத்துச் சென்றுள்ளமை குறித்து மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு,தமது கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் மறைமுகமாக  போருக்குப் பின்னர் பல உண்மைகளை  மூடி மறைக்க முயல்கின்றது- வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன்


கடந்த 7 வருட கால தேடலில் அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி காணாமல் ஆக்கப்பட்டோர் சம்மந்தமாக சரியான ஒரு தீர்வை தாம் பெற்றுத்தருவோம் உண்மைகளை வெளிப்படுத்துவோம் என்று கூறி வந்தாலும் அந்த வாக்குறுதிகளில் எவ்வித முன்னேற்றத்தையும் காண முடியவில்லை.இந்த அரசாங்கம் மறைமுகமாக  போருக்குப் பின்னர் பல உண்மைகளை  மூடி மறைக்க முயல்வதாகவே நாங்கள் சந்தேகப்படுகின்றோம் என வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று புதன் கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடும் குடும்பங்களின் சங்கம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியவை இணைந்து  மன்னாரில்    இன்று  (30) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

இதன் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில்; ஒவ்வெரு வருடமும் இத்தினத்தன்று எமது மக்களின் அவலக்குரல் மீண்டும்,மீண்டும் ஒலிப்பதையே நாங்கள் பார்க்கின்றோம்.

எமது மக்களின் வாழ்கையே தற்போது தேடலில் தான் சென்று கொண்டிருக்கின்றது.

மக்கள் தமது அடிப்படை உரிமைக்காகவும், கௌரவத்திற்காகவும் ,பாதுகாப்பிற்காகவும் ,காணி மீட்பிற்காகவும்,காணாமல் ஆக்கப்பட்டோர் என்று கூறியும் தினம் தினம் தங்களின் வாழ்க்கையை தேடலில் தொலைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

தெருக்களிலும், அரச திணைக்களங்கள் என பல்வேறு இடங்களில் கூடி தமது காணாமல் போன உறவுகள் எங்கே?அவர்களுக்கு என்ன நடந்தது?கண் முன்னே உயிருடன் ஒப்படைக்கப்பட்டவர்கள் தற்போது எங்கே இருக்கின்றார்கள் என்ற பல்வேறு விதமான கேள்விகளை தொகுத்து அதற்கான சரியான விடை கிடைக்கப்பெறாத ஏமாற்றத்தில் தங்களது உறவுகளை நினைத்து அவல நிலையில் துயரத்துடன் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த 7 வருட கால தேடலில் அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி காணாமல் ஆக்கப்பட்டோர் சம்மந்தமாக சரியான ஒரு தீர்வை தாம் பெற்றுத்தருவோம்.

 அதன் உண்மைகளை வெளிப்படுத்துவோம் என்று கூறி வந்தாலும் அந்த வாக்குறுதிகளில் எவ்வித முன்னேற்றத்தையும் காண முடியவில்லை.

ஆகவே இந்த அரசாங்கம் மறை முகமாக  போருக்குப்பின்னர் பல உண்மைகளை  மூடி மறைக்க முயல்வதாகவே நாங்கள் சந்தேகப்படுகின்றோம். 

இந்த அரசாங்கத்திடம் இருந்து காணாமல் போனவர்கள் சம்மந்தமாக உண்மையான முடிவுகள் வெளிவராது என்ற முடிவுக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

ஆகவே சர்வதேச மனித நேய அமைப்புக்கள்  அல்லது சர்வதே அமைப்புக்கள் குறித்த விடையத்தில் மீண்டும் தலையிட்டு ஒரு சரியான அழுத்தத்தை அரசாங்கத்திற்கு கொடுப்பதன் மூலம் அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் காணாமல் போன உறவுகளுக்கு என்ன நடந்தது?அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்ற உண்மை விபரம் தேடி அழைகின்ற உறவுகளுக்கு தெரியப்படுத்தப்படும்.

ஆகவே இந்த போராட்டம் காணாமல் போன உறவுகள் அனைவருக்கும் என்ன நடந்தது என்பதோடு மட்டுமின்றி அதற்கான சரியான நீதியும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடுவோம் என்ற செய்தியை இத்தினத்தில் தெரிவித்துக்கொள்ளுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.















வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம். Reviewed by NEWMANNAR on August 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.