தமிழர்களின் அடையாளம் சிதையாமல் பாதுகாக்கப்பட இதுவே வழி
தமிழர்களின் அடையாளம் சிதையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் தமிழ் மக்களுக்குரிய பிரச்சினைகளை விரைவாகத் தீர்த்து சமூகம் பாதுகாப்பாக இருக்கக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மீள்குடியேற்றத்தின் போது எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் பூச்சிய நிலையில் இருந்தே மீள்குடியேற்றத்தை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால், தற்போது கிளிநொச்சி மாவட்டம் அபிவிருத்தியில் பாரிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது. ஆனால், தற்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு நாம் எதிர்கொண்ட சவால்கள், பிரச்சினைகள் மிகக் குறைவு.
அவ்வாறு இருந்தும் அவர்கள் மக்களை நேரடியாகச் சென்று அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதில்லை. நாம் எமது இனத்தின் இருப்பை பாதுகாத்து இருக்கின்றோம்.
ஆனால், இன்று அதெல்லாம் சிதையும் நிலையில் காணப்படுகின்றது. இன்னும் மக்களுக்கு தேவைகள் காணப்படுகின்றன. வீட்டுத் திட்டம், வடிகாலமைப்பு, வீதிப் புனரமைப்பு, மற்றும் தொழில் வாய்ப்பு உட்பட்ட ஏராளம் பிரச்சினைகள் உள்ளன.
தமிழர்களின் அடையாளம் சிதையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் தமிழ் மக்களுக்குரிய பிரச்சினைகளை விரைவாகத் தீர்த்து சமூகம் பாதுகாப்பாக இருக்கக்கூடிய சூழலை உருவாக்குவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும்.
இதை செய்பவர்கள் தான் உண்மையாக மக்களுக்காக உழைப்பவர்கள். தற்போது அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் தான் தற்போது கொழும்பில் வேலை செய்யும் இளைஞர்களை தமது சொந்த இடத்தில் வேலை செய்வதற்கான வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
அதனை விடுத்து, இவ்வாறானவர்களின் சொகுசு வாழ்க்கைக்காக மக்கள் இவ்வாறானவர்களுக்கு வாக்களிக்கவில்லை. வட மாகாணசபை ஊடாக அதிகளவான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படக் கூடியதாக இருந்தும் அவர்கள் அவற்றில் அக்கறை கொள்ளாது தங்களது பிரச்சினைகளுக்காக முட்டி மோதுகின்றனர்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தாமல் இருப்பது தவறானது. தேர்தல்களில் அரசியல்வாதிகள் வெற்றி பெறுவது முக்கியமானதல்ல.
மக்களே பெற்றி பெற வேண்டும். மக்கள் வெல்வதாக இருந்தால் மக்களுக்காக உழைக்கக் கூடிய பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.
ஆனால், தமிழ் மக்கள் விட்ட தவறுகளால் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் உறுப்பினர்களுமே வெற்றிகளைப் பெற்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர்களின் அடையாளம் சிதையாமல் பாதுகாக்கப்பட இதுவே வழி
Reviewed by Author
on
September 01, 2017
Rating:

No comments:
Post a Comment