புலிகளின் தலைவர் பொது மக்களுடன் பாதுகாப்பாக இருந்தார்! இலங்கை பிரதிநிதிகளுடன் புலம்பெயர் தமிழர்கள் கடும் வாதம்
ஜெனிவா கூட்ட தொடரில் கலந்துகொண்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினருக்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 36வது கூட்டத் தொடர் கடந்த 11ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் இடம்பெற்ற உபகுழு கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த சரத் வீரசேகர தலைமையிலான குழுவினருக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன் போது கருத்து வெளியிட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரத் வீரசேர, “இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நந்திக் கடல் களப்பில் 300 பொது மக்களுடன் பாதுகாப்பாக இருந்தார்” என கூறினார். இதன் போது குறுக்கிட்டு பேசிய புலம்பெயர் அமைப்புகளின் பிரிதிநிதி ஒருவர், “யுத்த காலத்தில் வன்னிப் பகுதியில் 70ஆயிரம் பேர் மட்டுமே இருப்பதாக அரசாங்கம் கூறி வந்ததது. எனினும், இறுதியில் 2 இலட்சத்து 80ஆயிரம் பேர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது” என கூறியிருந்தார். எனினும், மீண்டும் குறுக்கிட்டு பேசிய சரத் வீரசேகர அதனால் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
இதன்போது புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் வாதங்களை முன்வைத்தனர். இதனையடுத்து, இலங்கை குழுவில் இணைந்திருந்த மற்றுமொரு பிரதிநிதியான நாலக்க கொடஹேவா கருத்து வெளியிடுகையில்,“2009ஆம் ஆண்டுவரை சிங்கள மக்களை கொலை செய்தீர்கள். ஆனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. இதனை புரிந்துக் கொள்ளுங்கள்” என கூறியிருந்தார்.
இதனையடுத்து இரு தரப்புக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்ததுடன், வாதப் பிரதிவாதங்களும் இந்த உபகுழுக் கூட்டத்தில் நீடித்துக் கொண்டிருந்தது.
புலிகளின் தலைவர் பொது மக்களுடன் பாதுகாப்பாக இருந்தார்! இலங்கை பிரதிநிதிகளுடன் புலம்பெயர் தமிழர்கள் கடும் வாதம்
Reviewed by Author
on
September 30, 2017
Rating:
Reviewed by Author
on
September 30, 2017
Rating:


No comments:
Post a Comment