கருப்பன்....சிறப்பானவன்.
நடிகர் விஜய் சேதுபதி
நடிகை தான்யா ரவிச்சந்திரன்
இயக்குனர் பன்னீர் செல்வம்
இசை இமான்
ஓளிப்பதிவு சக்திவேல்
நாயகன் விஜய்சேதுபதி காளை அடக்குவதில் வல்லவர். ஆனால், எந்த வேலைக்கும் போகாமல், நண்பர் சிங்கம்புலியுடன் குடித்துக் கொண்டு ஊரை சுற்றி வருகிறார். இந்நிலையில் காளை அடக்கும் போட்டி வருகிறது. அதில், அதே ஊரில் இருக்கும் பசுபதியின் காளையும் பங்கேற்கிறது.
இந்த காளையை அடக்கினால், பசுபதியின் தங்கையான நாயகி தான்யாவை விஜய் சேதுபதிக்கு திருமணம் செய்து தரும்படி விஜய் சேதுபதியின் நண்பர்கள் கேட்கிறார்கள். இதற்கு பசுபதியும் சம்மதிக்கும் நிலையில், காளையை விஜய் சேதுபதி அடக்கி விடுகிறார்.
தான்யா மீது விருப்பம் இல்லாமல் இருக்கும் விஜய்சேதுபதி, ஒரு மோதலில் சந்திக்கிறார். தான்யாவின் துணிச்சலை பார்த்து அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. விஜய் சேதுபதி குடித்துவிட்டு ஊரை சுற்றி வருவதால், தான்யா திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதியை திருமணம் செய்து கொள்கிறார் தான்யா. இருவரும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், தான்யா அண்ணியின் தம்பியான பாபி சிம்ஹா அவரை ஒருதலையாக காதலித்து வந்ததால், விஜய்சேதுபதி மீது கோபமடைந்து, இருவரையும் பிரிக்க திட்டம் போடுகிறார்.
இறுதியில் பாபி சிம்ஹாவின் திட்டம் நிறைவேறியதா? விஜய்சேதுபதி, தான்யா இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? என்பதே படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, ஒவ்வொரு படத்திற்கும் நடிப்பில் மெருகேறிக் கொண்டே செல்கிறார். இவர் பேசும் வசனங்கள், உடல் மொழி, முக பாவனைகள், சண்டைக் காட்சிகள், காளை அடக்கும் காட்சிகள் என அனைத்திலும் பட்டைய கிளப்புகிறார். தான்யாவுடனான ரொமன்ஸ் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் தான்யா, துறுதுறு பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். முந்தைய படத்தை விட இதில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். தான்யா மீது ஆசைப்படுவது. அதற்காக பழிவாங்குவது, திட்டமிடுவது என தன்னுடைய அனுபவ நடிப்பால் மிரட்டியிருக்கிறார் பாபி சிம்ஹா. நீண்ட இடைவெளிக்குப்பிறகு பசுபதியை திரையில் பார்ப்பது மகிழ்ச்சி. தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். சிங்கம் புலியின் காமெடி சிறப்பு.
வழக்கமான கதையை, காளை, காதல், கிராமம் என கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் பன்னீர் செல்வம். கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து அவர்களிடம் அழகாக வேலை வாங்கி இருக்கிறார். குறிப்பாக விஜய் சேதுபதியை திறமையாக உபயோப்படுத்தி இருக்கிறார். விஜய்சேதுபதி, சிங்கம்புலி சம்மந்தப்பட்ட காட்சிகள் தியேட்டரில் அதகளப்படுத்துகிறது.
இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். சக்திவேல் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘கருப்பன்’ சிறப்பானவன்.
கருப்பன்....சிறப்பானவன்.
Reviewed by Author
on
November 18, 2017
Rating:

No comments:
Post a Comment