அண்மைய செய்திகள்

recent
-

முருகப் பெருமானின் முதல் படைவீடு.......


குன்றுதோறும் ஆடுகின்ற குமரன்னு முருகப் பெருமான் புகழப்படறாரு. எத்தனையோ குன்றுகள்ல முருகனோட கோவில்கள் இருந்தாலும், அது எல்லாத்துலயும் ரொம்ப பழமையான, பெருமை வாய்ந்த சீரும் சிறப்புமான குன்றம், திருப்பரங்குன்றம்.
மதுரையோட புறநகர்ப் பகுதியான திருப்பரங்குன்றத்துல அமைஞ்சிருக்கற சுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோவிலுக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு.
மதுரைக்குத் தென்மேற்குல சுமார் 7 கிலோமீட்டர் தொலைவுல, ஒரு பிரம்மாண்டமான யானை எழுந்திருச்சு நிற்கற மாதிரி இருக்கற அழகான சின்ன மலைதான் திருப்பரங்குன்றம்.
இதன் அடிவாரத்துலதான் முருகப் பெருமானோட ஆலயம் அமைஞ்சிருக்கு. இது, தமிழகத்தோட மிகப் பழமையான குடைவரைக் கோவில்கள்ல ஒண்ணு. வரைன்னா மலைன்னு அர்த்தம்.

அந்த மலையைக் குடைஞ்சு, அதாவது செதுக்கி, அமைக்கப்பட்ட கோவில்களுக்கு குடைவரைக் கோவில்னு பேரு. தமிழகத்துல பல்லவர் காலத்துக்குப் பிறகுதான் குடைவரைக் கோவில் உருவாச்சுன்னு பொதுவா சொல்லப்படற கருத்து தப்புன்னு நிரூபிக்கற திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பாண்டியர்கள் காலத்துல உருவாக்கப்பட்டது.
குடைவரைக் கோவில்னாலும் பிரகாரம், முகமண்டபம், திருக்குளம்னு பிரம்மாண்ட ஆலயங்களோட அத்தனை சிறப்பம்சங்களும் இந்தக் குடைவரைக் கோவில்ல இருக்கு.
இந்தக் குடைவரைக் கோவிலை, பாண்டிய மன்னர்கள் கி.பி. 8-ம் நூற்றாண்டுல கட்டினதா சொல்லப்பட்டாலும், அதற்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால வரலாறு இந்தக் கோவிலுக்கு இருக்கு.
கி.மு. அல்லது கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததா கருதப்படற சங்ககால இலக்கியமான திருமுருகாற்றுப் படையிலேயே, திருப்பரங்குன்றம் கோவில் பற்றி கூறப்பட்டிருக்கு. ஆற்றுப்படுத்துதல்னா வழிகாட்டுதல்னு அர்த்தம்.
முருகன் கோவில்கள் இருக்கற இடத்தைக்கூறி அது பத்தின தகவல்களக் கூறி வழிகாட்டுறதுனால, நக்கீரர் எழுதிய இந்த இலக்கியத்துக்கு திருமுருகாற்றுப்படைன்னு பேரு. இதையொட்டிதான் அறுபடை வீடுகள்னு, 6 முருகன் கோவில்கள் முக்கியமா வணங்கப்படுது. அந்த அறுபடை வீடுகள்ல முதல் படை வீடு, திருப்பரங்குன்றம்தான்.

சூரபத்மனை வென்று, தேவர்களை அசுரர்களின் சிறைலேந்து விடுவிச்ச பிறகு முருகப் பெருமான் அமர்ந்த குன்றம் இதுதான்னு திருமுருகாற்றுப்படை சொல்லுது. இந்தத் திருப்பரங்குன்றத்தோட கீர்த்திக்கு மற்றொரு முக்கிய காரணம், முருகப் பெருமான், இந்திரனின் மகளான தேவயானையை இங்கதான் கைத்தலம் பற்றினாராம்.

வருஷம்தோறும் பங்குனி உத்தரத்தன்னைக்கு, சுப்ரமணியப் பெருமான் – தேவயானை திருக்கல்யாண வைபவம் நடக்கும். அந்த நாளனைக்கு திருமணம் செஞ்சுக்கிட்டா விசேஷங்கற நம்பிக்கையினாலே, ஏராளமான ஜோடிகள் அன்னைக்கு (அன்றைக்கு) மாலை மாத்திப்பாங்களாம். அதனால திருப்பரங்குன்றத்துல இந்தக் கோவிலச் சுத்தி ஏராளமான திருமண மண்டபங்களும் கட்டப்பட்டிருக்கு.
பழந்தமிழ் இலக்கியங்கள்ல கந்தவெற்புன்னு சொல்லப்படற மலை, திருப்பரங்குன்றம்தான்னு ஆன்மிக ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. இதுக்கு, தென் கயிலாயம்னு ஒரு சிறப்புப் பெயரும் உண்டு. ஏன்னா, வடக்குல இமயமலைல இருக்கற மாதிரியே இங்கேயும், சிவபெருமான் உள்ளிட்ட மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் வசிக்கறதா ஐதீகம்.

அதோட, கயிலாய மலைல இருக்கற மாதிரியே திருப்பரங்குன்றத்துலயும் சரவணப் பொய்கை இருக்கு. இந்தச் சரவணப் பொய்கைக் கரைலதான், மகாவிஷ்ணு – மகாலெட்சுமியின் புதல்விகளான அமிர்தவல்லி, சௌந்தரவல்லி ஆகிய ரெண்டுபேரும் கார்த்திகேயனையே கணவனாக அடையணும்னு நெனச்சு தவம் இருந்தாங்களாம்.
அவங்களோட தவத்துக்கு மெச்சி, ரெண்டு பேரையும் திருமணம் செய்துக்கறதா முருகப் பெருமான் வரம் கொடுத்தாராம். அந்த வரத்தோட மகிமையினால, அமிர்தவல்லி ஒரு குழந்தையா உருவெடுத்து, தேவர்களோட தலைவனான இந்திரனால வளர்க்கப்பட்டாளாம். அந்தக் குழந்தையை, தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் என்கிற தேவயானை வளர்த்ததுனால, குழந்தையா உருவெடுத்த அமிர்தவல்லிக்கு தேவயானைன்னு பேரு வந்ததாம்.
அந்த தேவயானையைத்தான் முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்துல திருமணம் செஞ்சுக்கிட்டாரு. அமிர்தவல்லியோட சகோதரி சவுந்தரவல்லியும் குழந்தையா உருவெடுத்து, நம்பிங்கற வேடனால வள்ளிங்கற பெயர்ல வளர்க்கப்பட்டு பின்ன, ஆறுமுகனை அன்புக் கணவனாக அடையறா.
அமிர்தவல்லி, சவுந்தரவல்லி சகோதரிகளைப் போலவே, பராசர முனிவரோட புதல்வர்களான 6 சகோதரர்களும் சரவணப் பொய்கையில ஆறுமுகனை தரிசனம் பண்ணிய பேறு பெற்றிருக்காங்க. ஒரு சாபத்துனால, பராசர முனிவரோட 6 புதல்வர்களும் மீன் வடிவெடுத்து, சரவணப் பொய்கையில வாழ்ந்திட்டிருந்தாங்களாம்.

சூரபத்மனை குமரக்கடவுள் வதம் செஞ்சுட்டு, திரும்பும்போது அவரோட அருளினால 6 பேரும் சாப விமோசனம் பெற்று, மீண்டும் முனிகுமாரர்களாக ஆனார்களாம். இந்தப் புராணத்தை நினைவுகூருற வகையில, இப்பவும் இந்த சரவணப் பொய்கை குளத்துல வாழற மீன்களுக்கு பக்தர்கள் பொரி, மிளகு போடுவதுண்டு. அதோட, இப்படி பொரி, மிளகு போட்டு வேண்டிக்கொண்டா, சரும வியாதிகள் நீங்கும், கஷ்டங்கள் அகலுங்கறது பக்தர்களோட நம்பிக்கை.
மீனாக இருந்து சாபவிமோசனம் பெற்ற பராசர முனிகுமாரர்களின் வேண்டுகோள்னால, குமரப் பெருமான் திருப்பரங்குன்றத்துலேயே தங்கத் தீர்மானிச்சுட்டாராம். அப்புறம், தேவ தச்சனான விஸ்வகர்மாவுக்கு முருகப்பெருமான் உத்தரவிட்டு, தமக்கும் மத்த தேவர்களுக்கும் இங்க ஆலயம் எழுப்பினதா புராணம் கூறுது. அதே நேரத்தில இந்தத் திருப்பரங்குன்றம் கோவிலோட தொன்மையை எடுத்துரைக்கறதுக்கு, இந்தக் கோவில்லேயே 41 கல்வெட்டுகள் கிடைச்சிருக்கு.

இது ஒரு குடைவரைக் கோவில்னு பார்த்த உடனே தெரியாத வண்ணம், வசதியா அருமையான படிக்கட்டுகளையும், கோவில் மேல்
விதானங்களையும் அமைச்சிருக்காங்க நம்ம முன்னோர்கள். இது அந்தக் காலத்து கட்டடத் தொழில்நுட்பத்துக்கு ஒரு சான்று. குடைவரைக் கோவிலுக்குள்ள நுழையறதுக்கு முன்னால, இந்தக் கோவிலுக்கு ஒரு முகமண்டபம் இருக்கு. அழகான தூண்கள் தாங்கி நிற்கற இந்த முகமண்டபத்தை பாண்டிய மன்னர்கள் கட்ட, நாயக்க மன்னர்கள் பிற்காலத்துல எடுத்துக் கட்டியிருக்காங்க.

இந்தக் கோவிலோட தென்கிழக்கு பகுதியில இருக்கற கம்பத்தடி மண்டபத்துல 30 மீட்டர் நீளமுள்ள சுரங்கம் ஒண்ணும் இருக்கு. மேலும், கோவிலுக்கு மேல ஏறிப் போகும்போது பல புடைப்புச் சிற்பங்களும், செதுக்குச் சிலைகளும் நம்மை வரவேற்குது. அதுல அண்டாபரணர்ங்கற பிரும்மாண்ட பூத கணத்தோட சிலைகள் வெகு அற்புதம்.


muruga3கோவில் கருவறைல முருகப் பெருமான், சுப்ரமணியராக தேவயானையோடு அற்புதமா செதுக்குச் சிற்பமா அருள்பாலிக்கறார். அவருக்கு வலப்புறத்துல நாரத முனிவர் அமர்ந்தபடி பணிவோடு வணங்குற மாதிரி செதுக்கப்பட்டிருக்கு. மலைக்குகையில சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கறதுனால, அபிஷேகம், ஆராதனை எல்லாம் முருகப் பெருமானுக்கு முன்னாடி இருக்கற பெரிய வேலுக்குத்தான் நடத்தப்படுது.
சுப்ரமண்யர் சன்னதிக்கு மேற்குப் புறத்துல இதேபோல குடைவரைச் சிற்பமா, சிவபெருமான் லிங்கத் திருமேனியா பரங்கிரிநாதர் என்ற திருநாமத்தோட வீற்றிருக்காரு. சுப்ரமண்யர் சன்னதிக்கு கிழக்குப் பக்கத்துல ஸ்ரீதேவி- பூதேவி சமேதரா மகாவிஷ்ணு காட்சி தராரு. இதேபோல, கணபதி, துர்க்கையம்மனும் புடைப்புச் சிற்பங்களா அருட் காட்சி தர்ராங்க. முருகப் பெருமான் கொலுவிருக்கும் ஆலயத்துல, அனைத்து தெய்வங்களுமே அருள் பாலிக்கறாங்க அப்படிங்கறதுக்கு திருப்பரங்குன்றம் ஆலயம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.


அதுமட்டுமில்லாம, சமணர், பௌத்தர் பத்தின வரலாற்றுச் சின்னங்களும் திருப்பரங்குன்றத்துல இருக்கு. சரவணப் பொய்கை பக்கமா, திருப்பரங்குன்றம் மலை மேல ஏறிப்போனா, சமணர் படுக்கைகளப் பார்க்கலாம். சமணத் துறவிகள் ஓய்வெடுக்கறதுக்காக, மலைல இருக்கற கல்லையே நல்லா வழவழப்பா செதுக்கியிருப்பாங்க. அதுதான் சமணர் படுக்கை.
இதுக்குப் பக்கத்துலேயே ஆதிநாதர்னு சொல்லப்படற ரிஷபர், வர்த்தமான மகாவீரர் ஆகியோரோட திருவுருவங்களும் மலைப்பாறைல செதுக்கப்பட்டிருக்கதைப் பார்க்கலாம். இதேபோல கொஞ்சம் தள்ளி, புத்தர் மற்றும் அவரோட வரலாற்றைக் குறிக்கிற சிற்பங்களும் மலைப்பாறைல செதுக்கப்பட்டிருக்கு.

இதே மலைல அல்-சிக்கந்தர் தர்கா என்கிற இஸ்லாமிய வழிபாட்டுத் தலமும் இருக்கு. இந்த அல்-சிக்கந்தர்தான் கிரேக்க மன்னன் அலெக்சாண்டர்னும் முன்னொரு காலத்துல இந்தப் பகுதிய முருகப் பெருமான் மன்னரா ஆட்சி செய்துட்டிருந்தபோது அவருக்கு சிக்கந்தர் நெருங்கிய நண்பரா இருந்தார்னும் செவிவழிக் கதை உண்டு.

இந்த திருப்பரங்குன்றம் மலை உச்சில காசி விஸ்வநாதர் ஆலயம்னு, சின்னதா தனி சிவன் கோவிலும் இருக்கு. கீழ இருக்கற குடைவரைக் கோவில்ல சிவபெருமான் தாண்டவக் கோலம் அற்புதமான சிலையா செதுக்கப்பட்டிருக்கு. கோவில் முகமண்டபத்துல முருகப் பெருமானுக்கு தேவயானையை இந்திரன் தாரை வார்த்துக் கொடுக்கறா திருக்காட்சி, மண்டபத் தூண்ல சிற்பமா இருக்கு. மேலும் பல அழகிய, அபூர்வ சிற்பங்களயும் இங்க இருக்கற தூண்கள் தாங்கிக்கிட்டிருக்கு.
முருகன் – தேவயானை திருக்கல்யாணம் நடக்கற பங்குனி உத்திரத்தையொட்டிதான் திருப்பரங்குன்றத்துல வருஷந்தோறும் பிரம்மோத்ஸவ விழா நடத்தப்படுது.

திருவண்ணாமலையைப் போலவே, இங்கயும் திருக்கார்த்திகை தினத்தன்னைக்கு சொக்கப்பனை கொளுத்தறது, மலை உச்சிலே கார்த்திகை தீபம் ஏத்தறதுன்னு விசேஷம் களைகட்டும்.
அதுபோக கந்தசஷ்டி, வைகாசி விசாகம், தை தெப்போத்சவம் ஆகிய விழாக்களும் விமர்சையாக் கொண்டாடப்படுது. அதுமட்டுமில்லாம, மதுரைல மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கற சித்திரைத் திருவிழாவின்போது, திருப்பரங்குன்றத்துலேர்ந்து முருகப்பெருமானும், பெருமாளும் ஊர்வலமா மதுரைக்குப் போவாங்க.
நக்கீரரோட திருமுருகாற்றுப் படை மட்டுமில்லாம கந்தபுராணம், அருணகிரிநாதரோட திருப்புகழ், சம்பந்தர் மற்றும் சுந்தரரின் தேவாரப் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கியங்களிலயும் திருப்பரங்குன்றத்தோட புகழ் பாடப்பட்டிருக்கு. சினிமா பாட்டுலகூட திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்னு அர்த்தத்தோட பாடப்பட்டிருக்கு.
என்ன அர்த்தம்னு கேக்கறீங்களா? திருப்பரங்குன்றம் முருகன், தேவயானையை திருமணம் செஞ்சுகிட்ட ஸ்தலம்னா, திருத்தணி வள்ளிய காதல் கடிமணம் செஞ்சுகிட்ட தலமில்லையா? அதான் முருகன் திருப்பரங்குன்றத்துல சிரிச்சா, திருத்தணில எதிரொலிக்குது.


பரம் குன்றம் அப்படின்னா, எல்லாத்துக்கும் மேலான, சிறப்பான குன்றம்னு அர்த்தம். மதுரையிலும் திருப்பரங்குன்றத்திலும் வாழுகின்ற பாக்கியம் பெற்றவங்கதான், மேலோகத்துல வாழற பாக்கியம் பெற்றவங்க. மத்தவர்களுக்கெல்லாம் அந்தக் கொடுப்பினை இல்லை அப்படின்னு சங்க இலக்கியங்கள்ல ஒன்றான பரிபாடல் கூறுது. அப்பேர்ப்பட்ட சிறப்புடைய திருப்பரங்குன்றத்த மதுரைக்குப் போகும்போது பார்க்கத் தவறிடாதீங்க.
முருகப் பெருமானின் முதல் படைவீடு....... Reviewed by Author on November 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.