கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்கு இணங்கவில்லை! குற்றச்சாட்டை மறுக்கும் சுமந்திரன் எம்.பி -
இடைக்கால அறிக்கை தொடர்பான விடயங்கள் சரியாக விதத்தில் மக்களை சென்றடையவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தின் பின்னர் மாலையில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று காலை 10 மணி முதல் இடம்பெற்ற மத்திய குழுக்கூட்டத்தில் முக்கிய சில விடயங்கள் கூடி ஆராயப்பட்டுள்ளன. அரசியலமைப்பு நடவடிக்கை குழுவினாலே முன்வைக்கப்பட்ட இடைக்கால அறிக்கை சம்பந்தமான விவாதம் அரசியலமைப்பு பேரவையிலே நடந்திருப்பதன் பின்னணியிலே அந்த விடயங்கள் தொடர்பாக காலையிலே நீண்ட நேரம் நாங்கள் கலந்துரையாடியிருந்தோம்.
இது இடைக்காலத்திலே வெளிவந்திருக்கின்ற ஒரு அறிக்கை, இது ஒரு வரைவு அல்ல. அதில் சில முன்மொழிவுகள் நாட்டினுடைய சுபாவத்தைப் பற்றி, ஆட்சி முறையைப் பற்றி, அதிகாரப் பகிர்வைப் பற்றி குறிப்பிடப்பட்ட விடயங்கள் பற்றி அவதானிக்கப்பட்டன. சில விடயங்கள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றது என்பது இந்த அறிக்கையிலே வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.
இந்த இடைக்கால அறிக்கைக்குப் பிறகு வருகின்ற வழிநடத்தல் குழுவிலே இன்னமும் இணங்காமல் இருக்கின்ற அல்லது இணக்கம்காணப்பட வேண்டிய விடயங்கள் சம்பந்தமாகவும் கட்சியின் உறுப்பினர்கள் வழிநடத்தல் குழுவிலே அந்த விடயங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அறிக்கையிலே எங்களுடைய கட்சியின் கொள்கையோடு இணங்கின பல முற்போக்கான விடயங்கள் வெளிவந்திருக்கின்ற போதிலும், இது சரியான விதத்திலே மக்களைச் சென்றடையவில்லை என்ற ஆதங்கம் பல கட்சி உறுப்பினர்களாலே எங்களுக்கு எடுத்து இயம்பப்பட்டது.
விசேடமாக இன்றைக்கு பரவலாக வெளிவந்துள்ள விமர்சனம், ஒற்றையாட்சிக்கு இணங்கி விட்டார்கள் என்பதே. இலங்கைக்கு ஒற்றையாட்சிக்கு பொருத்தமற்றது என்று இடைக்கால அறிக்கையில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்ற போதிலே ஒற்றையாட்சிக்கு இணங்கிவிட்டார்கள் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆகவே பொய்யான பரப்புரைகளை நம்பாமல் வெளிவந்திருக்கின்ற அறிக்கையை சரியான விதத்திலே மக்கள் மத்தியே எடுத்து செல்வதற்கான நடவடிக்கைளை கட்சி எடுக்க வேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களும் கேட்டுக்கொண்டார்கள். ஏற்கனவே பல தொகுதிகளிலே தொகுதி வாரியாக இப்படியான சில கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றது. இன்றைய கூட்டத்திலே நாங்கள் விசேடமாக கிழக்கு மாகாணத்திலே ஒவ்வொரு மாவட்டத்திலே கட்சி உறுப்பினர்களுக்கு சரியான நிலைமையை விளங்கப்படுத்தும் கூட்டங்கள் சிலவற்றை ஒழுங்கு செய்துள்ளோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எவ்வாறு சந்திக்க வேண்டும் என்பது குறித்தும் ஆராய்ந்திருக்கின்றோம்.
புதிய தேர்தல்முறைமை சம்பந்தமாக பல தெளிவுபடுத்தல் அவசியமாக இருந்தது. ஏற்கனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அங்கத்தவக்கட்சிகள் மூன்று யாழ்ப்பாணத்திலே சந்தித்து சில முன் நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம். அதைத் தொடர்ந்து மாவட்ட மட்டங்களிலே சில சந்திப்புக்களை நடாத்தி, நாங்கள் சேர்ந்து போட்டியிடுவது என்ற முடிவுகள் எடுக்கப்பட்ட வேண்டி இருக்கின்றது.
அது சம்பந்தமாக ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் அந்த மாவட்டத்தினுடைய சூழ்நிலையை அனுசரித்து பல கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து தமிழரசுக்கட்சியினுடைய அரசியல் குழு முடிவுகளை எடுக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.
கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்கு இணங்கவில்லை! குற்றச்சாட்டை மறுக்கும் சுமந்திரன் எம்.பி -
Reviewed by Author
on
November 13, 2017
Rating:

No comments:
Post a Comment