அடிப்படை வசதிகள் இன்றி அல்லறும் முல்லைத்தீவு தேராவில் கிராம மக்கள் -
முல்லைத்தீவு, தேராவில் இருநூறு வீ்ட்டுத்திட்டத்தில் வாழும் மக்கள் தொழில் வாய்ப்பின்மை மற்றும் அடிப்படை வசதிகளின்மை போன்ற காரணங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் கீழ் தேராவில் 200 வீட்டுத்திட்டத்தில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் தமக்கான தொழில் வாய்ப்புக்கள் இன்றியும் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான வருமானம் இன்றியும் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் வாழும் கூடுதலான குடும்பங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்களையும் அதைவிட பெண் தலைமைத்துவக் குடும்பங்களையும் அதிகளவில் கொண்டு காணப்படுகின்றது.
இவ்வாறு வாழ்ந்து வரும் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தமக்கான தொழில் வாய்ப்பின்றிக் காணப்படுவதுடன், வாழ்வாதாரப் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளக் கூடிய நிலங்களோ அல்லது கிணறு வசதிகளோ இல்லாத நிலையில் பெரிதும் அல்லலுறுவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த வறுமை நிலை காரணமாக இக்கிராமத்தில் உள்ள ஒரு சில குடும்பங்கள் சட்டவிரோத செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருவதாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், இதனைவிட பல குடும்பங்கள் நுன்கடன் நிதி நிறுவனங்களிடமிருந்து அதிக வட்டிக்கு கடன்களைப் பெற்று அதனை மீள செலுத்த முடியாது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அதிகளவான சிறுவர்கள் போசாக்கு குறைபாடுள்ளவர்களாக காணப்படுவதாகவும் கிராம மட்ட அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
குறித்த கிராமத்தில் பிரதான வீதி முதல் ஏனைய குடியிருப்பு வீதிகள் வரை புனரமைக்கப்படாத நிலை காணப்படுவதாகவும் சில குடும்பங்கள் வீட்டுத்திட்டங்கள் இன்றியும் வாழ்ந்து வருகின்றனர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள் இன்றி அல்லறும் முல்லைத்தீவு தேராவில் கிராம மக்கள் -
Reviewed by Author
on
January 31, 2018
Rating:

No comments:
Post a Comment