வெற்றிவாகை சூடிய தமிழன் ஆனந்த்: குவியும் பாராட்டுக்கள்! -
உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்தது. 15 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் எந்த தோல்வியும் சந்திக்காமல் வீறுநடை போட்டார். 9-வது சுற்றில் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை (நார்வே) சாய்த்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
15 சுற்று முடிவில் ஆனந்த் (6 வெற்றி, 9 டிரா) விளாடிமிர் பெடோசீவ் (ரஷியா), இயான் நிபோம்னியாச்சி ( ரஷியா) ஆகியோர் தலா 10.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். கார்ல்சென் 10 புள்ளியுடன் பின்தங்கினார்.
அதிக வெற்றி, டிரா அடிப்படையில் முதல் 2 இடங்கள் பெற்ற ஆனந்த்- விளாடிமிர் ஆகியோர் சாம்பியன் கோப்பைக்காக டைபிரேக்கரில் மோதினர்.
குறிப்பிட்ட நேரத்தில் விரைவாக காய்களை நகர்த்தக்கூடிய இந்த ரேபிட் வகை செஸ் போட்டியில் கில்லாடி என்பதை ஆனந்த் மீண்டும் ஒரு முறை நிரூபித்து காட்டினார்.
டைபிரேக்கரில் சாதுர்யமாக செயல்பட்ட ஆனந்த் முதல் ஆட்டத்தில் வெற்றியும், 2-வது ஆட்டத்தில் டிராவும் செய்து 1.5-0.5 என்ற புள்ளி கணக்கில் விளாடிமிரை தோற்கடித்து பட்டத்தை தட்டிச் சென்றார். அவர், உலக ரேபிட் செஸ் போட்டியில் 2003-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக மகுடத்தை சூடியிருக்கிறார்.
48 வயதான சென்னையைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் கூறுகையில், ‘லண்டன் செஸ் கிளாசிக்கில் நன்றாக செயல்படுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டதால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானேன்.
இதனால் நம்பிக்கையற்ற மனநிலையுடன் தான் ரியாத்துக்கு சென்றேன். ஆனால் இந்த போட்டியில் பட்டம் வென்றது அற்புதமான ஒரு ஆச்சரியமாகும்.
2-வது நாளில் முதல் மூன்று ரவுண்டுகளில் ‘டிரா’ கண்ட போது, கோப்பையை வெல்லும் வாய்ப்பு பறிபோய் விட்டதாக நினைத்தேன். ஆனால் அதன் பிறகு எதிர்பாராத பல திருப்பங்கள் நிகழ்ந்தன. உலக சாம்பியன் கார்ல்செனை வீழ்த்தியது முக்கியமான ஒரு திருப்பமாகும்.
இதே போல் கார்ல்சென் அலெக்சாண்டர் கிரிஸ்சுக்கிடமும் (ரஷ்யா) வீழ்ந்தார். இப்படி நிறைய விஷயங்கள் எனக்கு சாதகமாக அமைந்தன’ என்றார்.
ஆனந்த் மேலும் கூறுகையில், ‘இந்த போட்டி தாமதமாக அறிவிக்கப்பட்டதால் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூட திட்டமிடவில்லை. எல்லாமே எதிர்பார்க்காதது தான். மறுபடியும் உலக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது மிகவும் வியப்பு அளிக்கிறது. மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை’ என்றார்.
சாதனை படைத்த ஆனந்துக்கு, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்ய வர்தன் சிங் ரதோர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ‘மீண்டும் தனது திறமையை மெய்பித்து காட்டியிருக்கிறார். உங்களது வெற்றியால் ஒட்டுமொத்த தேசமும் பெருமைப்படுகிறது’ என்று அவர்கள் கூறியுள்ளனர்.
வெற்றிவாகை சூடிய தமிழன் ஆனந்த்: குவியும் பாராட்டுக்கள்! -
Reviewed by Author
on
January 01, 2018
Rating:
Reviewed by Author
on
January 01, 2018
Rating:


No comments:
Post a Comment