கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து
வெலிங்டனில், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீசியது.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து, 50 ஓவரில் 234 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இயான் மோர்கன் 48 ஓட்டங்களும், பென் ஸ்டோக்ஸ் 39 ஓட்டங்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து தரப்பில் சோதி 3 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்தின் துடுப்பாட்ட வீரர் கப்தில், வோக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அணித்தலைவர் வில்லியம்சன், மூன்றோவுடன் சேர்ந்து நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். 49 ஓட்டங்கள் எடுத்த மூன்றோ, ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அதற்கு அடுத்து வந்த வீரர்கள், சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். எனினும், சாண்ட்னர் 41 ஓட்டங்கள் எடுத்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடிய வில்லியம்சன் அபாரமாக சதம் அடித்தார்.
ஆட்டத்தின் கடைசி ஓவரில், நியூசிலாந்துக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை எதிர்கொண்ட வில்லியம்சனால் ஓட்டம் எடுக்க முடியவில்லை. இரண்டாவது பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்த அவர், மூன்றாவது பந்தை சிக்சருக்கு தூக்கினார்.
அதற்கு அடுத்த பந்தில் மேலும் 2 ஓட்டங்கள் எடுத்தார். 5வது பந்தில் ஓட்டம் கிடைக்காததால், கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அந்த பந்தை, வோக்ஸ் யார்க்கராக வீசியதால் அதனை எதிர்கொண்ட வில்லியம்சனால் ஓட்டமாக மாற்ற முடியவில்லை. இதனால், 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி 3 விக்கெட்டும், ரஷிட் மற்றும் வோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். வில்லியம்சன் 112 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 2-1 என்றகணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து
Reviewed by Author
on
March 04, 2018
Rating:
No comments:
Post a Comment