மன்னார் நகரசபையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமானது....
மன்னார் நகர சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோர் இரகசிய வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் நகர சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவு இன்று மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த சபையின் தலைவர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் (ஜெராட்) மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் செல்வராசா செல்வ குமரன் (டிலான்) ஆகிய இருவரின் பெயர்களும் முன் மொழியப்பட்டன.
இதன் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சி உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் நடு நிலமை வகித்தார்.
ஏனைய 15 உறுப்பினர்களும் வாக்களித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் (ஜெராட்) 8 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் செல்வராசா செல்வ குமரன் (டிலான்) 7 வாக்குகளை பெற்றனர்.
இந்த நிலையில் அதிகூடிய வாக்குகளை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் (ஜெராட்) மன்னார் நகர சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் , உப தலைவர் தெரிவின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சூசை செபஸ்ரியன் ஜான்சன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் ஆகிய இருவரது பெயர்கள் முன் மொழியப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இரகசிய வாக்கெடுப்பு இடம் பெற்றது.16 உறுப்பினர்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்களான எஸ்.ஆர்.குமரேஸ், பர்னாந்து ஜோசப் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் செல்வராசா செல்வ குமரன் (டிலான்) ஆகிய மூவரும் வாக்களிக்காது நடு நிலமை வகித்தனர்.
ஏனைய 13 உறுப்பினர்களும் வாக்களித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சூசை செபஸ்ரியன் ஜான்சன் 8 வாக்குகளையும்,ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் 5 வாக்குகளையும் பெற்ற நிலையில் கூடிய வாக்குகளை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சூசை செபஸ்ரியன் ஜான்சன் மன்னார் நகர சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
குறித்த அமர்வின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன்,மாகாண சபை உறுப்பினர் பிரிமூஸ் சிறாய்வா,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நகரசபையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமானது....
Reviewed by Author
on
April 10, 2018
Rating:

No comments:
Post a Comment