கர்நாடகத்தின் முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா!
கடவுள் மற்றும் விவசாயிகள் பெயரால் எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார், லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பா கர்நாடகாவின் 23வது முதல்வர் ஆவார்.
முதல் இணைப்பு- எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு! வழக்கு தொடுத்த காங்கிரஸ்
கர்நாடகாவின் முதல்வராக பதவி ஏற்க பா.ஜ.க-வின் எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்ததால், காங்கிரஸ் அதை எதிர்த்து நள்ளிரவே நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.கர்நாடகாவின் சட்ட சபை தேர்தல் முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களிலும், மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.
பெரும்பான்மையை நிரூபிக்க 112 இடங்கள் வேண்டும் என்பதால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தொங்கு சட்டசபை நிலவியது.
அதன் பின் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ம.ஜ.த-வின் குமாரசாமி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதேபோல் பாஜக சார்பில் எடியூரப்பாவும் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இந்நிலையில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆட்சியமைக்கத் கோரி ஆளுநர் இன்று அழைப்பு விடுத்ததுடன் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
ஆளுநரின் அழைப்பை அடுத்து நாளைக் காலை 9.30 மணிக்கு எடியூரப்பா மட்டும் முதல்வராகப் பதவியேற்கவுள்ளார் என்ற தகவல் தீயாய் பரவியது.
இதனால் காங்கிரஸ் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காகவும், இன்று இரவே விசாரணை நடத்த வேண்டும் என்று பதிவு செய்தது. காங்கிரஸின் மனுவையும் நீதிமன்றம் ஏற்றது.
நள்ளிரவு 1.45 மணிக்கு இந்த வழக்கு விசாரணை துவங்கும் என்று கூறப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற அறை எண் 6-ல் விசாரணை நடைபெற்றது.
அப்போது காங்கிரஸ் தரப்பில், 104 எம்எல்ஏக்களை வைத்துள்ள எடியூரப்பாவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தது சட்ட விரோதமானது.
ஆளுநரின் முடிவு என்பது அவசர கதியில் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டது. டெல்லியில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி இருந்தாலும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி கட்சி தான் ஆட்சி அமைத்தது.
இதே நிலைதான் கோவா உட்பட 7 மாநிலங்களில் நடந்தது. ஆளுநரை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆளுநரின் முடிவை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம்.
பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 15 நாள் அவகாசம் என்பது அதிகம். அதனைக் குறைக்க வேண்டும். நீதிமன்றம் ஆளுநரின் முடிவில் தலையிட வேண்டாம். குறைந்தபட்சம் எடியூரப்பா பதவியேற்பு விழாவையாவது ஒத்திவைக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
அதன் பின் பாஜக தரப்பில், ஆளுநரின் முடிவில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. வேண்டுமானால் 7 நாட்களுக்குள் எடியூரப்பாவை பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லலாம்.
ஜனாதிபதியும், ஆளுநரும் நீதிமன்றங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆளுநரை அவரது பணியை செய்யவிடுங்கள்.
நீதிமன்றம் அவருடைய வேலைகளில் தலையிட வேண்டாம். ஆளுநர் கடமையாற்றுவதை தடுத்தால், எந்தச் சட்டமும் இயற்ற முடியாது. காங்கிரஸின் மனுவை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.
மூன்று மணி நேர விசாரணைக்கு பின், எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படாது.
தொடர்ந்து இவ்வழக்கு நடைபெறும். அனைத்து தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விரிவாக விசாரணை செய்யப்படும். நாளை காலை 10.30 மணிக்கு அடுத்தகட்ட விசாரணை நடைபெறும்.
அப்போது எடியூரப்பா ஆளுநரிடம் அளித்த எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்றத்துக்கு ஆளுநரின் முடிவில் தலையிடவோ, விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பவோ அதிகாரம் கிடையாது என்று கூறி நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
கர்நாடகத்தின் முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா!
Reviewed by Author
on
May 17, 2018
Rating:

No comments:
Post a Comment