அண்மைய செய்திகள்

recent
-

அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய தரப்பிடம் இரா.சம்பந்தன் கூறியது என்ன? -


தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதேயன்றி ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் நோக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லையென இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனை, அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்து பேசியிருந்தனர்.
இந்நிலையில், அரசிலிருந்து வெளியேறிய சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களது செய்தியாளர் சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த எஸ்.பி திசாநாயக்க,
இரா.சம்பந்தனுடனான சந்திப்பு சாதகமாக அமைந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.
அவ்வாறு மக்கள் நினைத்திருப்பார்களாயின் அது தவறு என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் 16 பேரிடமும் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு எட்டப்பட மாட்டாது என்பதை சம்பந்தனிடம் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுட்டிக்காட்டினர்.
மேலும், பிரதமர் நம்பிக்கைக்குரியவரை போன்று செயற்பட்டாலும் உண்மையில் நம்பிக்கையை பாதுகாக்காதவரென்றும் சுதந்திர கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரா.சம்பந்தனிடம் கூறினர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2001ம் ஆண்டு பிரபாகரனுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் மூலம் நாட்டை தட்டில் வைத்து பிரபாகரனிடம் ஒப்படைத்தார். அப்போது நான் விவசாய அமைச்சராக இருந்தேன்.

அக்கால கட்டத்தில் வடக்கு செல்வதற்கு விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு தேவைப்பட்டது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தமிழர் பிரச்சினை ஒருபோதும் தீர்த்து வைக்கப்படாது.
பிரதமருக்கு அதற்கான தேவை இல்லையெனும், இரா.சம்பந்தனிடம் விளக்கி கூறியிருந்தோம். இதனையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், “கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாப்பதாக கூறும் குற்றச்சாட்டு நியாயமற்றது. அனைத்து இன மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் கட்சிக்கே கூட்டமைப்பு எதிர்காலத்திலும் தனது ஆதரவை வழங்கும்” என தெரிவித்திருந்தார்.
"இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினர். நாடு இரண்டாக பிரிவதனை ஒருபோதும் விரும்பாதவர். சிங்களவர்கள் மற்றும் பௌத்தர்களின் ஒத்துழைப்புடன் வேலை செய்ய விரும்புபவர்.
எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பினராலோ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படவில்லை. சுதந்திரக் கட்சியிலுள்ள சில உறுப்பினர்களே அதன் தோல்விக்கு காரணமானார்கள்.

அதேபோன்று தெற்கில் சிங்கள மக்களின் அதிக நம்பிக்கையை வென்ற கட்சியுடன் இணைந்து செயற்படவே விரும்புவதாக இரா.சம்பந்தன் எம்மிடம் தெரிவித்தார்” என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாயக்க குறிப்பிட்டார்.
அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய தரப்பிடம் இரா.சம்பந்தன் கூறியது என்ன? - Reviewed by Author on June 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.