அதிரடி திருப்பம் ராஜபக்சேவுக்கு பின்னடைவு: விக்ரமசிங்கே சட்டப்பூர்வமான பிரதமர்: இலங்கை சபாநாயகர் அறிவிப்பு
இலங்கையின் அதிகாரப்பூர்வமான, சட்டப்படியா பிரதமர் ரணில் விக்ரசிங்கேதான் என்று அறிவித்துள்ள சபாநாயகர் ஜெயசூர்யா, ரணிலுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை அதிபர் சிறீசேனா திரும்பப் பெற்றது தவறானது என்றும் கண்டித்துள்ளார்.
இலங்கையில் அதிபர் சிறிசேனா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியும், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தன. ஆனால், ரணில் விக்ரமசிங்கேவுக்க அளித்த வந்த ஆதரவை நேற்று முன்தினம் திடீரென வாபஸ் பெற்ற சிறீசேனா, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கினார்.
அதன்பின், ராஜபக்சேயுடன் (இலங்கை மக்கள் முன்னணி) கூட்டணி அமைத்த அதிபர் சிறீசேனா, புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்து, பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார்.
அதிபராக இருந்து தமிழர்களுக்கு எதிராக பல்வேறு கொடுமைகள் செய்த ராஜபக்சே பிரதமராக வந்தது தமிழர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும் ராஜகபக்சே, சிறிசேனா ஆகிய இருவருக்கும் நாடாளுமன்றத்தில் 95 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய மக்கள் கட்சிக்கு 106 இடங்கள் உள்ளன. இன்னும் பெரும்பான்மைக்கு 7 இடங்கள் மட்டுமே தேவை. பெரும்பான்மை இல்லாத ஒருவர் பிரதமராக முடியாது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல், ராஜபக்சேவுக்கு ஆதரவாகச் செயல்பட்ட, அதிபர் சிறீசேனா, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முற்படும்போது ராஜபக்சே தோல்வி அடையக்கூடும் என்பதால், நவம்பர் 16-ம் தேதிவரை நாடாளுமன்றத்தை முடக்க உத்தரவிட்டார்.
மேலும், ராஜபக்சேதான் பிரதமர் என்று அதிபர் சிறீசேனா ஒருபுறம் அறிக்கை வெளியிட்டார். அதேசமயம், ரணில் விக்ரமசிங்கேவும், அதிகாரப்பூர்வமான பிரதமர் நான்தான் என்று அவரும் பதிலுக்கு அறிக்கை வெளியிட்டதால், பெரும்அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
இந்த இருவரில் யாரைப் பிரதமராக ஏற்பது என்பதைச் சபாநாயகர் முடிவு செய்வார், அவரே நாடாளுமன்றத்தில் அதிகாரம் படைத்தவர் என்பதால், சபாநாயகர் ஜெயசூர்யாவின் முடிவுக்காக அனைவரும் காத்திருந்தனர். இதற்கிடையே ரணில் விக்ரமசிங்கேவுக்கு அளிக்கப்பட்டிருந்த உச்சக்கட்ட பாதுகாப்பை அதிபர் சிறீசேனா திரும்பப் பெற உத்தரவிட்டார்.
பிரதமராக பதவி ஏற்றுள்ள ராஜபக்சே
இந்நிலையில், நாட்டின் சட்டப்பூர்வமான பிரதமர் ரணில் விக்ரசிங்கே தான் என்று சபாநாயகர் ஜெயசூர்யா அங்கீகரித்துள்ளார். இதனால், பிரதமராக பதவி ஏற்ற ராஜபக்சேவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது, அவரின் பதவிஏற்பு செல்லாது என அறிவிக்கப்படலாம்.
சபாநாயகர் ஜெயசூர்யா அதிபர் சிறிசேனாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இலங்கையின் அதிகாரப்பூர்வ, சட்டப்படியான பிரதமராக ரணில் விக்ரசிங்கே தான் என்பதை அங்கீகரிக்கிறேன். நாடாளுமன்றத்தில் தற்போது பெரும்பான்மை உள்ள ஒருவரைத்தான் பிரதமராக ஏற்க முடியும். நாட்டில் சிறந்த நிர்வாகத்தையும், ஜனநாயகத்தையும் கட்டிக் காட்டும் பொறுப்பு விக்ரமசிங்கேவுக்குத்தான் இருக்கிறது.
மேலும், எந்த அடிப்படையில் நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ம் தேதிவரை முடக்கி இருக்கிறீர்கள். நாடாளுமன்றத்தை முடக்கிவைப்பது, மிகத்தீவிரமான, விரும்பத்தகாத விளைவுகளை நாட்டில் ஏற்படுத்தும்.
நாடாளுமன்றத்தை நீட்டித்து அறிவிப்பதும், முடக்குவதும் சபாநாயகருடன் கலந்து பேசித்தான் அதிபர் முடிவு எடுக்க முடியும். நாடாளுமன்றத்தை முடக்கிவைத்துள்ளது குறித்து மறுபரிசீலனை செய்யுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்றத்தை நீட்டிப்பதும், முடக்குவதும் சபாநாயகருடன் கலந்துபேசிச் செய்ய வேண்டிய நடவடிக்கை என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டியகடமை எனக்கு இருக்கிறது. ஆதலால் இதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.
பிரதமர் பதவியில் இருந்து ஒருவர் நீக்கப்படாத நிலையில், ரணில் விக்ரமசிங்கேவுக்கு உயர்மட்ட பாதுகாப்பை ஏன் நீக்கினார்கள் என்பதையும் கூற வேண்டும்
அனைத்து எம்.பி.க்களின் உரிமைகள், அவர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதிலும் நாட்டில் அறிவிக்கப்படாத அரசியல் குழப்பம், சிக்கல் ஏற்படும்போது, அந்தப் பொறுப்பு எனக்கு அதிகரிக்கும்.
ரணில் விக்ரமசிங்கேயின் உரிமைகளை பாதுகாக்கக் கோரி எனக்கு பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் வேறுஒருவர் பெரும்பான்மையை நிரூபிக்காத வரை ரணிலுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
அதிரடி திருப்பம் ராஜபக்சேவுக்கு பின்னடைவு: விக்ரமசிங்கே சட்டப்பூர்வமான பிரதமர்: இலங்கை சபாநாயகர் அறிவிப்பு
Reviewed by Author
on
October 29, 2018
Rating:

No comments:
Post a Comment