கோஹ்லியின் விக்கெட்டை எடுப்பதே எனது குறிக்கோள்...! 15வது வீரராக சேர்க்கப்பட்ட 7 வயது சிறுவன்
அவுஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வரும் 26ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் 7 வயது சிறுவனான ஆர்ச்சி என்பவன் இணைக் கேப்டனாக செயல்பட உள்ளான்.
இதய பாதிப்பில் உள்ள ஆர்ச்சிக்கு கிரிக்கெட் கேப்டனாக வேண்டும் என்பது ஆசை. இதனை அறிந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ‘Make a Wish Australia' என்ற திட்டத்தின் மூலம் அவனது ஆசையை நிறைவேற்றும் வகையில் இவ்வாறு கௌரவப்படுத்தியுள்ளது.
இந்த தகவலை சிறுவனின் பிறந்தநாளான டிசம்பர் 22ஆம் திகதி, அவுஸ்திரேலிய அணியின் தலைவர் டிம் பெய்ன் அவனிடம் கூறி இன்ப அதிர்ச்சி அளித்தார்.
இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆர்ச்சி விளையாடினான். முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் அவுஸ்திரேலிய அணியில் இடமளிக்கப்படும் என்று ஆர்ச்சியிடம் தெரிவிக்கப்பட்டபோது, விராட் கோஹ்லியின் விக்கெட்டை எடுப்பதே தனது குறிக்கோள் என தெரிவித்தான்.
ஆர்ச்சியின் தாய் கூறுகையில், ‘ஆர்ச்சிக்கு பிறந்த 3வது மாதத்தில் இதய செயல்பாடுகளில் அரிய வகை பாதிப்பு உள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அப்போது முதல் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். பின்னர், 9 மாதக் குழந்தையாக இருந்தபோது மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சை செய்ய 7 மணிநேரங்கள் ஆகும். தற்போது, டிசம்பர் மாத தொடக்கத்தில் மீண்டும் 3வது முறையாக ஆர்ச்சிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், எனது மகனின் ஆயுட்காலம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
பள்ளி மற்றும் நண்பர்கள் இல்லாதது குறித்து அவன் என்னிடம் வருத்தப்படுவான். மேலும் அவர்களுடன் விளையாட முடியாதது குறித்து கூறும்போது வேதனையாக இருக்கும். எனவே ஆர்ச்சியின் கனவுகளை நினைவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் டிம் பெய்ன் கூறுகையில், ‘ஆர்ச்சி மற்றும் அவரது குடும்பத்தினர் மிகவும் சிரமமான சூழலில் உள்ளனர். கிரிக்கெட் மீது ஈர்ப்பு கொண்ட ஆர்ச்சி, தனக்கு அவுஸ்திரேலிய கேப்டனாக வேண்டும் என தனது தந்தையிடம் தெரிவித்துள்ளான்.
எனவே அவனது கனவை நிறைவேற்ற உள்ளோம். இத்தனை சிறு வயதில் ஆர்ச்சியின் வாழ்க்கைப் போராட்டம் எங்களுக்கெல்லாம் எழுச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. பாக்சிங் டே டெஸ்ட் போட்டியை நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.


கோஹ்லியின் விக்கெட்டை எடுப்பதே எனது குறிக்கோள்...! 15வது வீரராக சேர்க்கப்பட்ட 7 வயது சிறுவன்
Reviewed by Author
on
December 24, 2018
Rating:
No comments:
Post a Comment