கிழக்கின் புதிய 1000 ஆசிரிய நியமனங்களை எமக்கு வழங்குங்கள்
கிழக்கு மாகாணத்தில் வழங்கப்படவிருக்கும் 1000 ஆசிரியர் நியமனங்களை வேலையில்லாமல் விரக்தியின் விளிம்பில் இருக்கும் எமது 1281 பட்டதாரிகளுக்கு வழங்குங்கள் என அம்பாறை மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் யசீர் அகமட்(நசுறுதீன்) இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த கோரிக்கையை கிழக்கு மாகாண ஆளுநரிடம் பகிரங்கமாகவே விடுக்கின்றேன். ஆசிரியர் பதவிக்காக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் முன்னர் எமது கோரிக்கையை ஆளுநருக்கும், கிழக்கு மாகாணத்திலுள்ள அத்தனை அரசியல்வாதிகளுக்கும் சமர்ப்பணம் செய்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் மாவட்டங்களுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்றங்களால் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்ப கிழக்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்புக்குரியது.
ஆனால் அந்த ஆசிரியர் வெற்றிடங்களை உயர் தரத்தில் 3 பாடங்கள் சித்தியடைந்தவர்களைக் கொண்டு நிரப்பப்படவிருப்பதாக அறிகின்றோம். உண்மையில் இது மனவேதனையைத் தருகிறது.
நாம் கடந்த காலத்தில் இந்த தொழிலுக்காக 156 நாட்கள் மழையிலும், வெயிலிலும் கிடந்து சத்தியாக்கிரகப்போராட்டத்தை செய்தோம்.
பலனாக கிழக்கு மாகாண சபை எமக்கு 2018 இல் பரீட்சை நடாத்தி நேர்முகப்பரீட்சையையும் வைத்தது. அதிலிருந்து முதற்கட்டமாக 1441 பட்டதாரிகளை தேர்ந்தெடுத்தார்கள். மீதி 1281பட்டதாரிகளுக்கு அடுத்த கட்டத்தில் வழங்குவதாகக் கூறினார்கள்.
அது எப்போது வரும் என்று வழிமேல் விழி வைத்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கையில் தற்போது கிடைத்த செய்தி பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
இலவுகாத்த கிளி போல் எமது நிலை ஆகி விடக் கூடாதென்பதற்காக முன்கூட்டியே இக்கோரிக்கையை முன் வைக்கின்றோம்.
பரீட்சையையும், நேர்முகப்பரீட்சையையும் முடித்து விட்டு ஆசிரியத் தொழிலுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் 1281 பட்டதாரிகளுக்கும் அதனை வழங்குமாறு ஆளுநரிடம் வேண்டுகின்றோம்.
தவறினால் நாம் மீண்டும் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி வரும்.
அழுதபிள்ளைதான் பால் குடிக்கும் என்பார்கள். 3 பாடம் சித்தியெய்திய யாராவது தொழில் கேட்டார்களா? இல்லை. தொழில் கேட்டு பாரிய பேராட்டத்தை நடாத்தி வயது சென்று கொண்டிருக்கும் பட்டதாரிகள் தான் தொழில் கேட்டார்கள். பட்டம் முடித்த எங்களை வீதியில் நடுத்தெருவில் அலைய விடுவது தான் தார்மீகமா? நீதியான அரசியலா? மத்திய அரசும் ஏமாற்றி விட்டது?
மத்திய அரசு வேலையில்லாப் பட்டதாரிகளை நாடளாவிய ரீதீயில் 20 ஆயிரம் பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி வழங்குவோம் என்று கூறியதற்கமைவாக நாம் விண்ணப்பித்து 2 நேர்முகப் பரீட்சைகளிலும் தோற்றினோம். எங்களில் முதற்கட்டமாக 4100 பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கினார்கள். மீதிப்பேருக்கு இந்த பட்ஜெட் மூலம் நிவாரணம் தருகிறோம் என்றார்கள்.
இந்த பட்ஜெட்டும் எங்களை முற்றாக ஏமாற்றிவிட்டது. இன்று நாடு பூராக 57 ஆயிரம் பட்டதாரிகள் வேலையின்றி அலைகின்றனர். அவர்களுக்கு இந்த பட்ஜெட் என்ன நிவாரணத்தை வழங்கியது? ஒன்றுமே இல்லை.
எனவே இதில் தர்மம் தவறுமாகவிருந்தால் நாம் அரசியலில் இறங்க வேண்டி நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
கிழக்கின் புதிய 1000 ஆசிரிய நியமனங்களை எமக்கு வழங்குங்கள்
Reviewed by Author
on
March 12, 2019
Rating:

No comments:
Post a Comment