வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் வடக்கு மாகாணம் தொடர்பில் பேரதிர்ச்சியான தகவல் -
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தேசிய ரீதியில் முதல் பத்து இடத்திற்குள் எந்த தமிழ் மாணவர்களும் இடம்பெறவில்லை, என்பது தமிழ் மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
கடந்த கால யுத்தத்தின் பின்னர் தமிழர் தாயக பகுதிகளில் கல்வியில் மாணவர்கள் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் வருடாவருடம் பொதுப்பரீட்சை பெறுபேறுகள் வரும் போதெல்லாம் தமிழர்கள் அனைவரும் தேசிய ரீதியில் தமிழ் மாணவர்கள் முதல் இடங்களை பிடிக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இன் நிலையில் வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் முதல் பத்து இடத்தில் எந்த தமிழ் மாணவர்களும் இடம்பெறாதது அனைவருக்கும் ஏமாற்றத்தையளித்துள்ளது.
2018 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் பின்னடைவை சந்தித்துள்ளது.
2018 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டன.
மேலும் பெறுபேற்று விகிதத்தின் அடிப்படையில் மன்னார் 69.34%, வவுனியா 68.28%, யாழ்ப்பாணம் 67.02%, முல்லைத்தீவு 60.4% ,கிளிநொச்சி 54.3%, சதவிகித தேர்ச்சியே பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை கொழும்பு மற்றும் காலி மாவட்டங்கள் 77 சதவிகித சித்தியையும் அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்கள் 79 விகித பெறுபேற்றையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளியாகிய பெறுபேறுகளுக்கு அமைய முதல் பத்து இடங்களில் எந்தவொரு தமிழ் மாணவர்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த கால சூழல்களுடன் ஒப்பிடும்போது கொடிய யுத்தத்தின் பிடியில் இருந்த நேரத்திலும் கூட வடமாகாணத்தின் கல்வி நிலை அதி உச்சத்தில் இருந்தது.
எனினும் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளமை பேரதிர்ச்சியைக் கொடுக்கின்றது, கல்வி நிலையில் இவ்வாறு வடமாகாணம், தமிழர் பிரதேசம் என்பன பாரிய பின்னடைவை அடைந்திருப்பதற்கான காரணம் என்னவென்பது தொடர்பிலும் பலரும் கேள்வி எழுப்புகின்ற நிலைமை தற்போது எழுந்துள்ளது.
மேலும், இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 ஆயிரத்து 413 பேர் ஒன்பது பாடங்களிலும் A சித்திகளை பெற்றுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் வடக்கு மாகாணம் தொடர்பில் பேரதிர்ச்சியான தகவல் -
Reviewed by Author
on
March 29, 2019
Rating:

No comments:
Post a Comment